வெள்ளி, 18 ஆகஸ்ட், 2017

"ஆதி பகவன் "

"ஆதி பகவன் "
===========================================ருத்ரா

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.

‍‍‍‍__________திருக்குறள் (1)


வள்ளுவனின் கைரேகை கிடைக்கவில்லை என்று கவலைப்படவேண்டாம்.
இந்த குறள்  தான் எங்கும் விரவிக்கிடக்கிறது.இந்த தலை விளக்கை (ஹெட் லைட் )போட்டுக்கொண்டு வரும் இந்த ஒன்றரை அடி  ஊர்தியின் முன் எல்லா இருட்டும் தொலைந்து போகிறது.தூசிகள் தூர விலகுகின்றன.  எல்லோரையும் போல கடவுள் வாழ்த்தை முதல் முடுக்கு (கியர்) போட்டு தான் தன் தமிழ் ஊர்தியை ஓட்டத்துவங்குகிறார்.

 எழுத்துக்கள்  எல்லாம்  "அ "வை முதலாகக்கொண்டு ஒலிக்கின்றன. அதுபோல்தான் உலகம் ஆதி பகவனை முதலாகக்கொண்டது.

அவ்வளவே இதன் பொருள்.

ஆதி பகவான் என்றால் கடவுளர்களா? அல்லது திருவள்ளுவரின் அம்மா அப்பாவா? வள்ளுவர் மிகவும் நுண்மாண் நுழைபுலம் மிக்க புலவர்.அந்த தொன்மை காலத்தில் கடவுள் மறுப்பு கோட்பாடுகள் இருந்தனவா? என்பது பற்றி  தமிழ் ஆராய்ச்சியாளர்கள் அவரது சொற்களின் ஊடே நுழைந்து தேடிக்கொண்டிருக்கிறார்கள்.ஆனால் பெரும்பான்மையானவர்கள் அவர் சமண மதத்தைச் சேர்ந்தவர் என உறுதிப்படுத்துகிறார்."பகவன்" என்ற பெயர் இன்னும் நம்மிடையே இருக்கிறது ஜைனர்கள் அதாவது சமணர்களின் பெயராக.அப்ப ன்ற தாய் பெயர் இந்துவாக இருக்கிறதே
என நீங்கள் கேட்கலாம்! இதுவும் ஒரு மில்லியன் டாலர் கேள்வி.திருவள்ளுவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன் திருக்குறளை இயற்றினார்.அப்படி அவர் ஓலையில் எழுதிய முதல் குறளே சமஸ்கிருதம் கலந்த சொற்களைக்
கொண்டு படைத்த காரணம் என்ன? எது தொன்மையானது? தமிழா? சமஸ்கிருதமா? இரண்டும் வழங்குகிற கால கட்டங்கள் தான் நம் சங்க காலம்.ஆனால் அது எப்படி இயலும் "கல் தோன்றி மண் தோன்றா" காலத்தேயும் முன் தோன்றிய மூத்த குடியல்லவா நம் தமிழ் இனம்.அப்படியிருக்க இது எப்படி இயலும்? இந்த தமிழ் செய்யுள் வரிகளில்
சம்ஸ்கிருத சொற்கள் "அடிச் சொற்களா? மேல் சொற்களா?" இல்லையில்லை இவை மேற்சொற்கள் தான்.தமிழ் தோன்றிய பிறகு அப்புறம் வந்து கலந்த சொற்கள் தான் என்று அடித்துச்சொல்லும் தமிழ் ஆராய்ச்சியாளர்களே அதிகம்.அவர்களது தமிழ்ப்பற்று அப்படி அடித்துச்சொல்ல வைக்கிறது.

இந்த சூழ்நிலையில் "மொழி ஞாயிறாக" நம்மிடையே தோன்றியவர்
"தேவ நேயப்பாவாணர்".அவரது "வேர்ச்சொல் " ஆராய்ச்சி எனும் கூரிய அறிவுத்திறன் தமிழின் தொன்மைப்படிவங்களை (ஃ பாசில்களை ) தோண்டியெடுத்து மேலே கொண்டு போட்டது! ஆனாலும் இன்றளவும்
அந்த சம்ஸ்கிருதம் தான் நம் தமிழின் மேல் படுத்துக்கொண்டு தமிழின்
மூச்சை அழுத்தி நசுக்கிக்கொண்டிருக்கிறது.தமிழ் இனிய மொழி.செம்மொழி அதெல்லாம் சரி தான் .ஆனாலும் நான் என் பிறந்த குழந்தைக்கு கம்பியூட்டரையெல்லாம் தட்டி தட்டி "தஸ் புஸ்"னு தான்
பெயர் வைப்பேன் என்கிற பச்சைத்தமிழர்கள் தான் நம்மிடையே இருக்கிறார்கள்.இதையெல்லாம் போரிட்டு தடுப்பேன் என்கிற "தூய தமிழ்"
இயக்கக்காரர்களோ "காஃ பி" எனும் அயற்சொல்லை அப்படியே எடுத்துக்கொள்வதற்குப்பதில் அதை ரொம்பவும் பிதுக்கியெடுத்து
"கொட்டை வடி நீர்" என்று புதுச்சொல் உருவாக்கும் போது நம் திருக்குறளை வைத்து நம் தலையில் அடித்துக்கொல்வத்தைத் தவிர வேறு வழியில்லை.

"உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்."

என்பதே அந்தக்குறள்.(குறள்--140)

இப்படி உலகத்தோடு ஒட்ட ஒழுகித்தானே "நம் தமிழ் "மணிப்பிரவாளம்"ஆகி
சமஸ்கிருதத்தமிழாகிஇருக்கிறது. இதுவும் மறுப்பதற்கில்லை.வேறு என்ன தான் செய்வது ?

(தொடரும்)






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக