நூலேணி (3)
===================================ருத்ரா
"செல்லை" தூக்கியெறியுங்கள்.கைக்கு அடக்கமாய் திருக்குறளை கையில் வைத்துக்கொள்ளுங்கள்.உங்களோடு "சேட்டிங்" செய்ய அதைப்போல ஒரு தோழன் இவ்வுலகில் எவனும் மில்லை.
___________________________________ருத்ரா
குறள் 372:
பேதைப் படுக்கும் இழவூழ் அறிவகற்றும்
ஆகலூழ் உற்றக் கடை.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
அழிவுதரும் இயற்கை நிலை, அறியாமையை உண்டாக்கும்; ஆக்கம் தரும் இயற்கை நிலை, அதற்கேற்ப அறிவை விரிவாக்கும்.
மு.வரதராசனார் உரை:
பொருள் இழந்தற்கு காரணமான ஊழ், பேதை யாக்கும் பொருள் ஆவதற்க்கு காரணமான ஊழ் அறிவைப் பெருக்கும்.
சாலமன் பாப்பையா உரை:
தாழ்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு மனிதனைப் பேதை ஆக்கும்; உயர்வதற்கு உரிய விதி இருந்தால் அறிவு விரிவு பெறும்.
பரிமேலழகர் உரை:
இழவு ஊழ்(உற்றக்கடை) அறிவு பேதைப் படுக்கும் - ஒருவனுக்கு எல்லா அறிவும் உளவாயினும், கைப்பொருள் இழத்தற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து, அஃது அதனைப் பேதையாக்கும், ஆகல் ஊழ் உற்றக்கடை அகற்றும் - இனி அவன் அறிவு சுருங்கியிருப்பினும்,கைப்பொருளாதற்கு ஏதுவாகிய ஊழ் வந்துற்றவிடத்து அஃது அதனை விரிக்கும். (கைப்பொருள்என்பது அதிகாரத்தான் வந்தது. 'இழவு ஊழ்,' 'ஆகல் ஊழ்'என்பன இரண்டும் வேற்றுமைத்தொகை. 'உற்றக்கடை'என்பது முன்னும் கூட்டப்பட்டது. இயற்கையானாய அறிவையும்வேறுபடுக்கும் என்பதாம்.).
மணக்குடவர் உரை:
கெடுக்கும் ஊழ் தோன்றினால் அறியாமையை யுண்டாக்கும்; ஆக்கும் ஊழ் தோன்றினால் அறிவை விரிக்கும். இஃது அறிவும் அறியாமையும் ஊழால் வருமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
ஒருவனுக்கு எல்லா அறிவும் இருந்தாலும், கைப்பொருள் போவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது, அது அந்த அறிவினைப் போதையாக்கும். இனி, அவன் அறிவு சுருங்கி இருந்தாலும் கைப்பொருள் ஆவதற்குக் காரணமான ஊழ் வந்தபோது அது அவ்வறிவினை விரிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக