ஞாயிறு, 13 ஆகஸ்ட், 2017

"மின்சாரக்கம்பியிலும் மைனாக்கள் கூடு கட்டும்.."

"மின்சாரக்கம்பியிலும்
மைனாக்கள் கூடு கட்டும்.."
==================================================ருத்ரா


"மின்சாரக்கம்பியிலும்
மைனாக்கள் கூடு கட்டும்.."

நுண்மைக்கவிஞர்
திரு மனுஷ்ய புத்ரன் அவர்கள்
மென்மைக்கவிஞன்
அமரர் ந.முத்துக்குமார் அவர்களின்
மேலே கண்ட வரிகளை
தொலைக்காட்சியில்
அருமையாக விளக்கினார்.

தொலைந்து போகாத‌
அந்தக்கவிஞன் வரிகள்
தொலைக்காட்சியில்
பத்திரமாக இருந்து
மின்னல்
அடித்துக்கொண்டிருக்கின்றன.

அந்தக்காதலை
மைனாக்கள் கூடுகளில்
மாணிக்கக்கற்களாய்
வைத்து
ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்.

துருவங்கள்
தொட்டுவிட்டால் போதும்
மின்சாரக்கம்பிகளில்
எல்லாமே கருகிவிடும்.

அபாயத்தை அருகில் வைத்து
இலை போட்டு
விருந்துண்ணும் உள்ளங்கள் அல்லவா
காதல் உள்ளங்கள்.

மரணங்களை தொட்டும்
புதிய புதிய பரிமாணங்களை
தேடும்
இன்றைய அதிரடிக்காதலின்
அழகிய வானவில்லின்
ரெக்கைப்பிஞ்சுகளை
தூவி விட்டுக்கொண்டு
பஞ்சணை போடும்
பருவத்தின் புதிய தலைமுறை
நன்கு குமிழியிடுகிறது
இந்த வரிகளில்.

இசைக்கருவிகளும்
திரைப்படக் கதையின்
திரட்சியான மூலைகளும்
முத்துக்குமார் எழுத்துக்களில்
குழைந்து
எப்போதும்
ஒரு அமுதக்குழம்பின்
லாவாவை
பீச்சியடிக்கிறது.

ஆணவக்கொலையின்
வெட்டரிவாள் காடுகளிலும்
இந்த காதல் பீலிகள்
தூரிகையாகி
இந்த பிரபஞ்சத்திலேயே
காதல் முகங்களையும்
கடல் போன்ற அந்த‌
மென்மை உள்ளங்களையும்
வரைந்து காட்டுகின்றன.

இரத்தச்சகதியில்
இவர்கள் சமுதாயம் புதைந்தபோதிலும்
புதிய விடியலின் கர்ப்பம்
கன்னிக்குடம் உடைப்பதை
எந்த ஆதிக்கமும்
தடுக்க முடியாது தான்..
என்று
அந்த மின்சாரக்கம்பி வரிகள்
ஒரு
அக்கினியாழை மீட்டுகின்றன.

இறவாத கவிஞனே
இந்நேரம் அந்த‌
கொடுங்கோலன் எமன் கூட‌
உன் கவிதைக்கு
இசையமைக்க்கும்
ஒரு ஆர்வத்தில்
மயங்கி
அல்லது மரணித்துக்கிடப்பான்.

உன் வரிகளுக்கு
ஏது கொள்ளியும் சிதையும்?
உன் எழுத்தின் ஏக்கங்களுக்கு
ஏது தகனமும் சடங்குகளும்?

உன் கவிதைகள்
இந்த
விரிந்து பரந்த‌
ஆகாயமாகிப்போனது.

===========================================










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக