மாரி செல்வராஜ்
________________________________________________
செங்கீரன்
அற்புதமான படைப்பாளி.
அப்புறம் எதற்கு அந்த லேபிள்?
அந்த வலியைச் சொல்லும்
அவர் பாணியே
ஆயிரம் எரிமலைகளை
கசக்கிச்சுருட்டி
காமிராக்கண்ணின் மயிலிறகு
வருடல்களிலேயே வார்த்து விடுகின்றனவே.
அந்த இசக்கியின்
காக்காய் இறகு ஆட்டங்களுக்குள் இருக்கும்
காக்காய் முட்களையே
இன்றைய சமுதாயத்தின் தலையில்
முட்கிரீடம் சூட்டிவிட்டார்.
அந்த மாமன்னன்
நிச்சயம் புலிகேசி அல்ல.
அந்த தமிழ்ப்புலியின் உறுமல்கள்
இமயமலைகளின்
நடுக்க "ரிக்டர் ஸ்கேல்களை"
எங்கோ உயரத்துக்கு கொண்டுசென்று விட்டன.
மாரிசெல்வராஜ் அவர்களே
உங்கள் இதயத்தின்
சிஸ்டாலிக் டையஸ்டாலிக்
அழுத்தங்கள்
இந்த சமுதாயநீதியை
படுக்கையில் கிடத்திவிடும்
புலம்பல்கள் அல்ல.
ஒப்பாரிகள் அல்ல.
இவை வெறும் புல்லரிப்புகளும் அல்ல.
புல்லட்டுகளும் அல்ல.
செல்லுசோஸ் சுருளுக்குள்
கருவுயிர்த்த செம்புயலே!
சமுதாயத்தை நிமிண்டிவிடும்
பிரளய வலிப்புகளே
உங்களது இந்த வலிகள்.
வெறும் விருதுக்குள் சுருண்டுவிடாமல்
பாக்ஸ் ஆஃபீஸ் வெள்ளமாயும்
உறக்கம் உடைக்கும் ஊழிகளாகவும்
உங்கள் படைப்புகள் வெல்லட்டும்.
நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!
____________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக