வியாழன், 8 ஜூன், 2023

திரு முத்தரசு அவர்களுக்கு

 அன்புள்ள அத்தான் திரு முத்தரசு அவர்களுக்கு


அகநானூற்றுப்பாடல்கள் படித்து அவற்றின் சொல் ஆழம் பொருள் ஆழம் மூழ்கி கற்பனை வளம் பருகிக்களித்துபடைத்த சங்கநடைச்செய்யுட் கவிதைகளே எனது "அகழ்நானூறு" என்பது.இன்று காலை 5 மணியளவில் நான் எழுதியதே இந்த "அகழ்நானூறு 46" ஆகும்.மாமூலனார் (அகம் 1) வெள்ளிவீதியார் (அகம் 362) ஆகிய செம்புலவர்களின் பாடல்கள் கண்ணுற்ற போது அந்த எழுத்தின் ஆழம் என்னைச்சிலிர்க்க வைத்தது.அதன் வெளிப்பாடே எனது படைப்பான அகழ்நானூறு.இதன் பொழிப்புரையை இன்னும் எழுதத்தொடங்கவில்லை.

பொருள் தேடிச்செல்லும் தலைவன் அடர்ந்த காட்டிடை அஞ்சாமல் சென்று கொண்டிருந்த போதும் தலைவின் முறுவல் அழகே அவன் அந்த வன்சுரம் கடக்க உதவுகிறது.அதே முறுவலும் அவள் பசலையுமே அவனைஅவளை நோக்கி சந்திக்கவும் விரையும் படி தூண்டுகிறது என்பதே இதன் கருத்துரை.

தங்கள் திறனுரையை இந்த செய்யுட்பற்றி நான் அறிய விழைகிறேன்.


இப்படிக்கு 

அன்புடன் 

இ பரமசிவன்.



அகழ்நானூறு 46

________________________________________சொற்கீரன்


ஊழ் வீழ்த்த உறுநனி பொழுது 

ஊரத் தந்து கொல்சுரம் நீந்தி

பெண்ணைப்புறத்து குரூஉமயிர் அன்ன‌

போர்த்த எண்கின் முருக்கு அவிழ் 

வள் உகிர் கூரிய அறையலும் 

பொலம் கிளர் வட்டம் பொறிசெய் வண்ணம்

நீள் நெடும் மலையின் உரு காட்டி

அசைவும் உருவ அஞ்சுவரு பரும்பாம்பு

வழிமறித்துக் கிடப்ப அஞ்சாதிறத்து

ஆறு நீந்தி செம்பொருள் வேட்டத்துச்

செறுவும் கடந்து நிரம்பா நீளிடை

மீமிசை உய்த்தலும் மிக்கூர்ச்செலவு

நிறுத்தல் இன்றி நீட்டிய செய்து

கழை முதிர் நெல்லின் வளி முயங்கு

கான் தொறும் கல் தொறும்

படுகடாஅம் படுப்ப மழகளிற்று

நடையின் வாங்கு அமை விதிர்ப்ப‌

சேயிழை முறுவல் உள்ளத்து வாங்கி

அவிழ் இழை பொருத அடுபோர் பசலை

அவள் விழியின் அருவியில் இழிந்த காட்சி

அவன் அகத்துள் ஈர்ந்த பொழுதே

மின்னல் தைத்தென அவன் விரைந்தான் மன்னே

அவள் நிழற்சுவட்டின் பளிங்கின் முற்றம்

சேர்ந்து கைவளை நெகிழ்வு நீக்கிடும் 

வண்ணம் கொண்டு எண்ணம் ஏந்தி

காற்றையும் பிளந்து கடுகியே விரைந்தான்.


_____________________________________________________________





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக