சனி, 17 ஜூன், 2023

குப்பை

குப்பை

___________________________________ருத்ரா



குப்பையெல்லாம் பெருக்கியாயிற்று.

அந்த மூலையின் காகிதக்குப்பைகள்.

அதோ அந்த கிழக்கு ஓரத்தில் 

காலைதோறும் சேரும் சூரியன் கொப்புளித்த‌

ஒளிப்பிழியல்கள்.

மேலும் திட்டு திட்டாய் 

நிழல்கள் காட்டும் இருட்டுப்பிழம்புகள்...

எல்லாம் தான் பெருக்கியாயிற்று.

இதோ இங்கே பழுப்பேறிய ஒரு காகிதத்துணுக்கு.

இது இங்கே எப்படி?

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலையை

முத்திரை பதித்த 

முப்பது நாப்பதுகளின்

போஸ்ட் கார்டு ஒன்று.

பாதி கிழித்து கிழிக்காமல் 

கிடக்கும் காகிதம் இது.

எழுத்துக்கள் முறுக்குப்பிழியலாய் 

கூட்டெழுத்தில்

.."சோபகிருது ஆண்டு ஆனி 21ல்.."

அப்புறம் எழுத்துக்கள் புரியவில்லை

அதிலிருந்து என்னால் எதையும் 

புரிந்து கொள்ள முடியவில்லை.

காலப்பறவை எச்சமிட்ட மிச்சம்

அது.

அது நல்ல நிகழ்வா? கெட்ட நிகழ்வா?

தெரியவில்லை..

கூட்டிப்பெருக்கி அந்த 

காலத்துண்டுகளையெல்லாம்

குப்பையாக்கி எறிந்து விட்டேன்.

என் அப்பாவா? தாத்தாவா?

அல்லது வேறு யாராவது பற்றிய நிகழ்வா?

காலம் வீசிய நிழல் அது.

இன்டெர்பொலேட்..எக்ஸ்ட்ராபொலேட்

என்று நிகழ்வுப்புள்ளிகளின் 

புள்ளிவிவரவியல் கணிதத்தையும் 

அப்பி வைத்து அந்த காலத்தின்

ஆறு காட்டிய திவலைக்குமிழிகளை

பிதுக்கிக்கொண்டிருந்தேன்.

முந்தைய எனது உறவுகளின்

யாராவது ஒருவரின் 

துவக்கப்புள்ளி அல்லது முற்றுப்புள்ளி பற்றி

பறை சாற்றுகிறதா?

தெரியவில்லை.

அந்த பறையின் அதிர்வுகள் மட்டும்

உள்ளே முண்டிக்கொண்டே இருக்கிறது.


_________________________________________________


 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக