மாமன்னன்.
_______________________________________
படம் ஒரு மைல்கல் தான்.
சந்தேகமே இல்லை.
தேவர் மகனில் மாத்திரம் அல்ல
மணிவண்ணனின் சங்கமம் படத்தில்
வடிவேலு காட்டிய சில உருக்கமான
காட்சிகள் கூட
அவரது இயல்பு நடிப்புக்குள்
நடிப்பின் சிகரங்கள் தலைநீட்டியிருக்கின்றன
என்பதைக் காட்டும்.
இந்தப்படத்தில்
வடிவேலு ஒரு தேசியவிருதுக்கு மட்டும் அல்ல
அதற்கும் மேல் அந்த உயரத்தை
மூழ்கடிக்கும் வகையில்
மிக மிக உயர்ந்து நிற்கிறார்.
ஒரு தீப்பிடிக்கும்
கோபம் வழக்கம்போல்
இந்த படத்திலும் சீற்றத்தின் தூரிகையை
சுழற்றியிருப்பது இயக்குநர் மாரிசெல்வராஜின்
முத்திரையை பதித்திருக்கிறது.
அவர் கதைக்களம்
ரிசர்வ தொகுதியின் ஜனநாயகத்தேர்தல்
முடமாகிக்கிடக்கிறது
என்பதில் வேர் பிடித்திருப்பதால்
முன்னேற்றம் காட்டுகின்ற ஒரு கட்சியின்
மாவட்டச் செயலாளரின் சாதிய வன்மத்தின்
உளவியலை தோலுரித்துக்காட்டுவதாய்
இருந்த போதும்
அவர் தீட்ட இருந்த ஓவியத்தின்
திரைச்சீலைக்கே தீ வைக்கிறார்
என்பதை அவர் அறிந்தே தான்
காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.
அம்பேத்கார் மட்டுமே போதும்
மற்ற கருவேப்பிலைகளை
கொஞ்சம் ஓரமாக மிதக்கவிட்டால்
போதும்
என்று அவர் நினைக்கிறாரா என்று
தெரியவில்லை.
ஏனெனில் படத்துக்குள்
திராவிடத்தால் வீழ்ந்தோம்
என்பதையும் அவர் தூவியிருக்கிறார்
என்பதும் புலப்படத்தான் செய்கிறது.
தம் சாதி இனங்கள்
ஏதோ சாணிக்குப்பைகளாய்த்தான்
இன்னும் கிடக்கிறார்கள் என்ற
சினத்தின் வெளிப்பாடு
ஒரு இயற்கையான வடிகாலாய்
இருந்த போதிலும்
ஒரு கசப்பான உண்மை
நம் சிந்தனையை கசக்கிப்போட்டுக்கொண்டே
இருக்கிறது.
இளையராஜாவின் அடி நீரோட்டமும் அது தான்.
எதற்கு இந்த சாதி?
பூணூலும் ஒரு பிராமண மகுடமும்
நமக்கு சூட்ட அவர்கள் தயாராய்த்தான்
இருக்கிறார்கள்.
இன்னும் எதற்கு அந்த
"பட்டியல் விலங்குகள்"நமக்கு
என்ற ஒரு எதிரோட்டத்துக்கு
இந்த படம் ஆயத்தமாக இருக்கிறதோ
என்ற ஒரு அச்சம்
இதில் மெலிதாய் இழையாடுகிறது.
போரின் உச்சக்கட்டத்தில்
தன் கூரியவேலையே குற்றம் கண்டுபிடித்து
சோர்ந்து போய்விடச்செய்கிற
ஒரு கண்ணுக்குத்தெரியாத
தந்திரம் இதில் இருக்குமோ?
ஒரு உதயநிதியை தன் கூட
வைத்துக்கொண்டால் போதும்
சமுதாய எழுச்சியின் உதயத்தை
திசைமாற்றும் சூழ்ச்சி
தன் சிறந்த திரைப்பட இயக்கத்துள்
இழைந்து கிடக்கும்..கிடக்கட்டும்
என்று இப்படம் உருவாக்கப்பட்டிருக்குமோ
என்ற ஐயமே இதில் நிலவுகிறது.
தமிழன் வரலாறு காயம்பட்டு இன்றும்
செத்த பாம்பாய் கந்தலாய்
நைந்துகிடப்பதன் சித்திரமே
இந்தப்படம்.
________________________________________
செங்கீரன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக