வளர்க நம் தோழமை!
_________________________________________________
செங்கீரன்.
இதையெல்லாம்
அந்த பரணில் தூக்கிப்போடு.
அதையெல்லாம்
பரணிலிருந்து கீழே இறக்கு.
ஆம்.
நம் வரலாற்றின் சில பல
நூற்றாண்டுகள்
இப்படித்தான் ஏறி இறங்குகின்றன.
சாதிகள் உட்சாதிகள்
இவையெல்லாம்
வேண்டவே வேண்டாம் என்று
வீசப்படுகின்றன.
சிறியவன் பெரியவன் எனும்
தோரணைகளும் அப்படித்தான்.
மனிதம் எனும் பேரொளியும்
அதன் அன்புக்கசிவுகளும்
மதிக்கப்படுகின்றன.
பந்தாவுக்கு பரிவட்டம் கட்டும்
பம்மாத்துகள் உடைந்து நொறுங்கிவிட்டன.
பெரியோரை வியத்தலும் இலமே
சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே
சமுதாயம் எனும் கண்ணுக்குத்தெரியாத
அந்த மகத்தான ஆள்
நம்மோடு கைகோத்துக்கொண்டு
இருக்கிறார்.
ஒரு சமுதாய மானுடத்தை
நம்முள் பதியம் இடும்
ஒரு பாங்கினை
பரிணாமம் செய்துவிடும்
களமாக
அந்த பரண் நம்மோடு இருக்கிறது.
அதுவே சிந்தனை எனப்படும்
நம் உள்ளொளி.
அதை குடைபிடித்துக்கொண்டு வரும்
இந்த குத்தாட்டங்களும்
வெத்தாட்டங்களும்
மழுங்கடித்துவிட
ஒரு போதும் இடம் கொடுக்கக்கூடாது.
மனித தோழமையே
நம்மைக்காக்கும் தண்ணிழல்.. தருநிழல்.
வளர்க நம் தோழமை!
_______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக