சொல்லை ஆண்ட முல்லை
பத்துப்பாட்டில் ஒன்றான முல்லைப்பாட்டு தமிழ்ச்சொற்களின் ஆழமான கற்பனையும் பொருட்செறிவும் மிக மிக நிறைந்ததொரு அழகிய நீண்ட அகவற்பா தொடர் ஆகும். பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்
பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்
ஒவ்வொரு முல்லைபூவும் ஒவ்வொரு சொல்லையும் தன் எழில் ஆட்சியில் கோர்த்து வைத்திருந்தது போல் நான் உணர்ந்தேன்.அதனால் தான் "சொல்லை ஆண்டமுல்லை" என்ற தலைப்பில் என் சங்கநடைச் செய்யுட் கவிதையினை ஆக்க எண்ணினேன்.ஆனால் தலவன் தலைவியின் இடையே நெகிழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்துவதை விட அந்த நம் வரலாற்றுத்தடத்தில் நம் தமிழர் நாகரிகம் வடவரின் புராண சிந்தனை களுக்குள் அமிழ்ந்து கிடந்தது கண்டு வெதும்பிய உள்ளத்தில் தான் இப்பாடலை நான் எழுதியுள்ளேன்.
சொல்லை ஆண்ட முல்லை
___________________________________________
சொற்கீரன்.
மூன்றடி மண் தா வென அவன்
முழுநிலம் பறித்த சூழ்நுண் அறிவில்
மாவனை வீழ்த்தி மாண்திறம் ஆண்ட
இறைவம் எல்லாம் மனிதம் வீழ்த்தி
சங்கொலி முழக்கி சாற்றியதெல்லாம்
வேதம் என தலைமேல் கொண்டு
தமிழ் இமிழ்ந்த வரலாற்று ஒளியை
தின்று விழுங்கிய கொடுமை என்கொல்?
நாழி இழிந்த நல் அருவியின்
நெல்லும் பூவும் கையிடை ஊர்பு தொழுதர
விரிச்சி விழையும் வளைநெரி கையும்
மள்ளல் மதர்த்த எஃகம் இலையும்
இறைஞ்சி நிற்கும் மானம் அழிந்த
மணிசுடர்த் தமிழும் விடைக்க ஒல்லா
நரம்பின் யாழும் மைக்கண் நுண்சிறை
முரசும் ஆர்க்கும் ஆர்க்கும் வீழ்மையும் என் கொல்?
புலித்தொடர் பூட்டிய செந்தமிழ் மறவர்
எலியனையர் என அடிமைத்தொடரில்
அடங்கிக்கிடத்தலும் என் கொல்?என் கொல்?
முல்லைப்பாட்டின் சொல்தொறும் சொல்தொறும்
முல்லை அவிழும் போழ்தே அன்ன
விடிவின் குணக்கடல் அலையாநின்று
அலைதரும் அதிர்வின் கிழிபு வானின்
வாலிய குரல் எற்றைத்திங்கள் யாங்கண் கேட்கும்?
_________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக