வெள்ளி, 30 ஜூன், 2023

மாமன்னன்.

 


மாமன்னன்.

_______________________________________


படம் ஒரு மைல்கல் தான்.

சந்தேகமே இல்லை.

தேவர் மகனில் மாத்திரம் அல்ல‌

மணிவண்ணனின் சங்கமம் படத்தில் 

வடிவேலு காட்டிய சில உருக்கமான‌

காட்சிகள் கூட‌

அவரது இயல்பு நடிப்புக்குள்

நடிப்பின் சிகரங்கள் தலைநீட்டியிருக்கின்றன

என்பதைக் காட்டும்.

இந்தப்படத்தில்

வடிவேலு ஒரு தேசியவிருதுக்கு மட்டும் அல்ல‌

அதற்கும் மேல் அந்த உயரத்தை 

மூழ்கடிக்கும் வகையில்

மிக மிக உயர்ந்து நிற்கிறார்.

ஒரு தீப்பிடிக்கும்

கோபம் வழக்கம்போல்

இந்த படத்திலும் சீற்றத்தின் தூரிகையை

சுழற்றியிருப்பது இயக்குநர் மாரிசெல்வராஜின்

முத்திரையை பதித்திருக்கிறது.

அவர் கதைக்களம் 

ரிசர்வ தொகுதியின் ஜனநாயகத்தேர்தல்

முடமாகிக்கிடக்கிறது

என்பதில் வேர் பிடித்திருப்பதால்

முன்னேற்றம் காட்டுகின்ற ஒரு கட்சியின்

மாவட்டச் செயலாளரின் சாதிய வன்மத்தின்

உளவியலை தோலுரித்துக்காட்டுவதாய்

இருந்த போதும் 

அவர் தீட்ட இருந்த ஓவியத்தின்

திரைச்சீலைக்கே தீ வைக்கிறார்

என்பதை அவர் அறிந்தே தான்

காட்சிகளை உருவாக்கியிருக்கிறார்.

அம்பேத்கார் மட்டுமே போதும்

மற்ற கருவேப்பிலைகளை

கொஞ்சம் ஓரமாக மிதக்கவிட்டால் 

போதும் 

என்று அவர் நினைக்கிறாரா என்று

தெரியவில்லை.

ஏனெனில் படத்துக்குள்

திராவிடத்தால் வீழ்ந்தோம்

என்பதையும் அவர் தூவியிருக்கிறார்

என்பதும் புலப்படத்தான் செய்கிறது.

தம் சாதி இனங்கள்

ஏதோ சாணிக்குப்பைகளாய்த்தான் 

இன்னும் கிடக்கிறார்கள் என்ற‌

சினத்தின் வெளிப்பாடு 

ஒரு இயற்கையான வடிகாலாய் 

இருந்த போதிலும்

ஒரு கசப்பான உண்மை

நம் சிந்தனையை கசக்கிப்போட்டுக்கொண்டே

இருக்கிறது.

இளையராஜாவின் அடி நீரோட்டமும் அது தான்.

எதற்கு இந்த சாதி?

பூணூலும் ஒரு பிராமண‌ மகுடமும்

நமக்கு சூட்ட அவர்கள் தயாராய்த்தான்

இருக்கிறார்கள்.

இன்னும் எதற்கு அந்த‌

"பட்டியல் விலங்குகள்"நமக்கு

என்ற ஒரு எதிரோட்டத்துக்கு

இந்த படம் ஆயத்தமாக இருக்கிறதோ

என்ற ஒரு அச்சம் 

இதில் மெலிதாய் இழையாடுகிறது.

போரின் உச்சக்கட்டத்தில்

தன் கூரியவேலையே குற்றம் கண்டுபிடித்து

சோர்ந்து போய்விடச்செய்கிற‌

ஒரு கண்ணுக்குத்தெரியாத‌

தந்திரம் இதில் இருக்குமோ?

ஒரு உதயநிதியை தன் கூட‌

வைத்துக்கொண்டால் போதும்

சமுதாய எழுச்சியின் உதயத்தை

திசைமாற்றும் சூழ்ச்சி

தன் சிறந்த திரைப்பட இயக்கத்துள்

இழைந்து கிடக்கும்..கிடக்கட்டும்

என்று இப்படம் உருவாக்கப்பட்டிருக்குமோ

என்ற ஐயமே இதில் நிலவுகிறது.

தமிழன் வரலாறு காயம்பட்டு இன்றும்

செத்த பாம்பாய் கந்தலாய் 

நைந்துகிடப்பதன் சித்திரமே

இந்தப்படம்.


________________________________________

செங்கீரன்.

ஞாயிறு, 25 ஜூன், 2023

மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

மருதையன் என்கிற மகத்தான சிந்தனையாளர்.

_________________________________________________

சொற்கீரன்.



விண்குழல் பேச்சுகள்

ஏதோ பிருந்தாவன புல்லாங்குழல் 

கீற்றின் ஒலிகள் என்பதற்கில்லை.

அதற்குள்ளும்

அக்கினி மூலை ஆகாத மூலை 

எல்லாம் உண்டு.

ஆனால் மனித சிந்தனை என்பது

உறைந்து விறைத்து சவமாகும்

பிணக்கிடங்காக‌

மலிந்து கிடக்கும் வேளையில்

நம் வரலாறுகள் வெறும் சவத்துக்குப்பைகளாய்

இருக்கும் நிலையில் இருந்து

சிந்தனையின் அக்கினிப்பறவைகள்

உயிர்த்து தன் ராட்சசசிறகுகளை

சடசடத்துக்கொண்டு பறக்கின்ற‌

அற்புதங்களை தன் சொற்பெருக்குகள்

மூலம் 

அள்ளி அள்ளித்தருகின்ற 

அரசியல் மேதை

திரு மருதையன் அவர்கள்.

உட்கார்ந்து உற்றுக்கேட்டால்

இந்த நாட்டின் மண்ணாங்கட்டிகளுக்கு கூட‌

நரம்புகள் புடைக்கும்.

மூளைசெதில்கள் மூண்டெழுந்து விடும்.

சோறு என்பது

ஒரு அவசியத்தின் அடையாளச்சின்னம் தான்.

ஆனால்

அது இன்னும் நம் நூற்றாண்டுகளையெல்லாம்

அடுப்பில் ஏற்றி 

உலை கொதிக்கவைக்கிற‌

உந்துதலின் அறிவுப்பரல்

என்பதில் ஐயம் இல்லை.

அவர் பேச்சுகள் மரத்துக்கிடக்கின்ற‌

இந்த பூமத்தியரேகைகளையும்

அட்சய தீர்க்க ரேகைகளையும்

நமக்கு நாம் பாடம் புகட்டும்

சவுக்கடிகளாய் மாற்றி 

எழுச்சி கொள்ளச்செய்யும்.

அறிவும் சிந்தனையும் கூட‌

இப்படி ஒரு ஆற்றல் நிறைந்த‌

குவாண்டம் மெக்கானிக்ஸ் ஆக்கி

புதிய பிரபஞ்சத்தை வார்த்துவிடும்

என்பதற்கு இவர் பேட்டிகளே

மெய்யான சான்றுகள்.


____________________________________________________________


யோகா.

 



யோகா

______________________________________________________

ருத்ரா


புரிந்த பகுதி

புரியாத பகுதி.

நீ 

இப்போது எதில் நிற்கிறாய்?

உன்னால் எல்லாவற்றையும் 

விளங்கிக்கொள்ள முடியுமானால் 

நீ

புரிந்த பகுதியில் நிற்கிறாய்

என்று பொருள்.

உன்னால் எதையும் விளங்கிக்கொள்ள‌

முடியவில்லை என்றால்

நீ

புரியாத பகுதியில் நிற்கிறாய்

என்று பொருள்.

மெய்ஞானம் அஞ்ஞானம் 

என்று

இரு பெரும்பகுதிக்குள்

எல்லாம் இருக்கிறது.

இங்கே உள்ளது அங்கும்

அங்கே உள்ளது இங்கும்

சவ்வூடு பரவல் மூலம்

நிரவல் அடைகிறது.

கடவுளை மூர்க்கமாக ஆராதிக்கிறவனே

மூர்க்கமான நாத்திகன்.

ஒரே புள்ளியில் அவன் அடைந்து கொள்கிறான்.

அந்த புள்ளிப்பகுதியை விட‌

புள்ளியற்ற பகுதி கோடி கோடி..கோடி

மடங்குகள் பெரிது.

ஒரே புள்ளியைமட்டும் பார்க்கும் அவனுக்கு

எதுவுமே அவன் புலப்படாத நிலையில் இருக்கிறான்

அதோ கடவுள் என்று 

அவன் பார்க்கும்போது

அவன் பார்வை முழுமையை இழந்து விடுகிறது.

பார்த்தது மட்டுமே அவன் 

என்று சுருங்கிக்கொண்டு விடுகிறான்.

ஒன்றும் இல்லவே இல்லை

என்ற பெரும் சமுத்திரம் அவனைச்சுற்றி

திகில் ஊட்டிக்கொண்டிருக்கிறது.

எனவே 

மொத்தம் முழுமை இதையெல்லாம்

உணரும் வலிமை யற்று

அதை மட்டுமே கடவுள் என்று

அவன் சொல்லிக்கொண்டே இருக்கிறான்.

அப்போது அவனுக்குள் இல்லாத‌

கடவுள் மட்டுமே

பெரும்பிம்பமாய்..

மிகப்பிரம்மாண்டமான பலூனாய்

விஸ்வரூபம் காட்டுகிறது.

அது கடவுளின் விஸ்வரூபம் அல்ல.

கடவுள் இன்மையின் விஸ்வரூபம்.

...................

இது ஒரு வகையான யோகா.

இதில் உடல் இல்லை

கை இல்லை கால் இல்லை.

எல்லாவற்றையும் சிந்திக்கிற‌

மனம் மட்டும் இருக்கிறது.

யோகா என்றால் அது சமஸ்கிருதம் 

என்று உன் சிந்தினைக்குள்

புடைத்து திணித்திருக்கிறார்கள்.

அது தமிழ்.

யாறு என்பதை ஆறு என்று சொல்வது

தமிழ்.

யாக்கை என்பதை ஆக்கை என்று உணர்த்துவது

தமிழ்.

அவ்வாறே

யாகம் என்பது ஆகம் அல்லது ஆக்கம்.

யோகம் என்பது ஓகம்...ஒடுக்கம்.

அறியாமை அறிவுக்குள் ஒடுங்குவதும்

அறிவு அறியாமையை திறப்பதுமாய்

ஒருங்கிணைகிறது.

சிந்திக்கிறதன் இந்த கூரிய பயிற்சியே 

யோகா.

உலகம் பூராவும் ஒலிப்பது தமிழே.


______________________________________________________

சனி, 24 ஜூன், 2023

மாரி செல்வராஜ்

மாரி செல்வராஜ்

____________________________________________‍____

செங்கீரன்



அற்புதமான படைப்பாளி.

அப்புறம் எதற்கு அந்த லேபிள்?

அந்த வலியைச் சொல்லும் 

அவர் பாணியே

ஆயிரம் எரிமலைகளை

கசக்கிச்சுருட்டி

காமிராக்கண்ணின் மயிலிறகு 

வருடல்களிலேயே வார்த்து விடுகின்றனவே.

அந்த இசக்கியின்

காக்காய் இறகு ஆட்டங்களுக்குள் இருக்கும்

காக்காய் முட்களையே

இன்றைய சமுதாயத்தின் தலையில் 

முட்கிரீடம் சூட்டிவிட்டார்.

அந்த மாமன்னன்

நிச்சயம் புலிகேசி அல்ல.

அந்த தமிழ்ப்புலியின் உறுமல்கள்

இமயமலைகளின் 

நடுக்க "ரிக்டர் ஸ்கேல்களை"

எங்கோ உயரத்துக்கு கொண்டுசென்று விட்டன.

மாரிசெல்வராஜ் அவர்களே

உங்கள் இதயத்தின்

சிஸ்டாலிக் டையஸ்டாலிக்

அழுத்தங்கள்

இந்த சமுதாயநீதியை

படுக்கையில் கிடத்திவிடும்

புலம்பல்கள் அல்ல.

ஒப்பாரிகள் அல்ல.

இவை வெறும் புல்லரிப்புகளும் அல்ல.

புல்லட்டுகளும் அல்ல.

செல்லுசோஸ் சுருளுக்குள்

கருவுயிர்த்த செம்புயலே!

சமுதாயத்தை நிமிண்டிவிடும்

பிரளய வலிப்புகளே

உங்களது இந்த வலிகள்.

வெறும் விருதுக்குள் சுருண்டுவிடாமல்

பாக்ஸ் ஆஃபீஸ் வெள்ளமாயும்

உறக்கம் உடைக்கும் ஊழிகளாகவும்

உங்கள் படைப்புகள் வெல்லட்டும்.

நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!


____________________________________________________________



பிக் பேங்கா? பிக் ஹோக்ஸா?

 

(12) SOMETHING STRANGE HAPPENED BEFORE THE BIG BANG! - YouTube



பெருவெடிப்பா? பொய்வெடிப்பா?

பிக் பேங்கா? பிக் ஹோக்ஸா?

கருந்துளையா? கருங்குடையா?

 


(12) Stephen Hawking Died 5 Years Ago, Now His Family Confirms The Rumors - YouTube


கருந்துளையா? கருங்குடையா?


கருந்துளைக்குள் நம் பால்வெளி மண்டலம் அல்லது இந்த அண்டமே இருக்கிறது.அண்டம் யாவும் அதன் ஒரு குடைக்குள் தான்.இப்படியும் இயற்பியல் கோட்பாடு நகர்கிறது.ஜேம்ஸ்வெப் ஸ்பேஸ் டெலஸ்கோப் புதிய கோட்பாடுகளை காட்டுகிறது.கருந்துளை தன் கதிர்வீச்சால் கரைந்தே போய்விடும் என்று கருத்து சொல்லிவிட்டு சென்றார் ஸ்டீஃபன் ஹாக்கிங்.அதுவும் கூட சரி என்னும்படி கருந்துளையின் ஆற்றல் மிகுந்த கதிர்வீச்சு நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

வளர்க நம் தோழமை!

 வளர்க நம் தோழமை!

_________________________________________________

செங்கீரன்.



இதையெல்லாம் 

அந்த பரணில் தூக்கிப்போடு.

அதையெல்லாம்

பரணிலிருந்து கீழே இறக்கு.

ஆம்.

நம் வரலாற்றின் சில பல‌

நூற்றாண்டுகள் 

இப்படித்தான் ஏறி இறங்குகின்றன.

சாதிகள் உட்சாதிகள் 

இவையெல்லாம் 

வேண்டவே வேண்டாம் என்று

வீசப்படுகின்றன.

சிறியவன் பெரியவன் எனும்

தோரணைகளும் அப்படித்தான்.

மனிதம் எனும் பேரொளியும்

அதன் அன்புக்கசிவுகளும் 

மதிக்கப்படுகின்றன.

பந்தாவுக்கு பரிவட்டம் கட்டும்

பம்மாத்துகள் உடைந்து நொறுங்கிவிட்டன.

பெரியோரை வியத்தலும் இலமே

சிறியோரை இகழ்தல் அதனிலும் இலமே

சமுதாயம் எனும் கண்ணுக்குத்தெரியாத‌

அந்த மகத்தான ஆள் 

நம்மோடு கைகோத்துக்கொண்டு

இருக்கிறார்.

ஒரு சமுதாய மானுடத்தை

நம்முள் பதியம் இடும்

ஒரு பாங்கினை

பரிணாமம் செய்துவிடும்

களமாக 

அந்த பரண் நம்மோடு இருக்கிறது.

அதுவே சிந்தனை எனப்படும் 

நம் உள்ளொளி.

அதை குடைபிடித்துக்கொண்டு வரும்

இந்த குத்தாட்டங்களும்

வெத்தாட்டங்களும்

மழுங்கடித்துவிட‌

ஒரு போதும் இடம் கொடுக்கக்கூடாது.

மனித தோழமையே

நம்மைக்காக்கும் தண்ணிழல்.. தருநிழல்.

வளர்க நம் தோழமை!


_______________________________________


சொல்லை ஆண்ட முல்லை (2)

 


சொல்லை ஆண்ட முல்லை  (2)


_____________________________________________


சொற்கீரன்




வெட்டுண்ட வேழம் தூம்புக்கை துமிய‌


குருதி குளிப்ப பகழி தோய் நிணம்


நனந்தலை மூச முளிச்சிறை அடிக்கும்


புட்கணம் மேவ செருக்களம் கண்டாய்


மண் கொள்ளை தடுத்தாய் மாண்ட‌


திறம் நிறுத்தாய் கொடி நுடங்கு வானம்


படர்தந்து சுடர்ந்தாய் பட்டுழீஇ மறைந்தும்


மறம் படுத்து நின்றாய் என்னே தமிழா!


நின் நிறம் மாய்ந்து மொழி தேய்ந்து


மறைமொழி வேட்டம் மலியக்காணும்


காட்சி இஃதென்ன உட்பகையில் எல்லாம்


அழிந்திடல் ஆமோ.மாயம் செய்து


அறிவைத்தின்னும் இறைவம் நின்னை


இற்றிடல் செய்யும் நிலை கண்டிலையோ?


செந்தமிழ் நற்றமிழ் சீரிய பேரொலி


ஈயல் கூட்டம் அன்னவாங்கு உதிர்ந்த‌


அத்தம் போல் அருகுத‌ல் தகுமோ?


முதிர் காய் வள்ளியங்காடு பிறக்கொழியத்,


தண்ணிழற் சோலை தமிழ் பிறக்கொழிந்து


தடம் பதி பரல் நீடு பாழ் ஆறு நெளிந்தன்ன‌


வேள்வி புதைத்த கேள்விகள் இழந்து


கூச்சல் கூளம் இடையே நீயும்


எழுநிலை மாடங்கள் மதிமலி புரிசை


விழுநிலை உற்றதென்? தமிழ்க்கொடி


வான்பூ வண்ணம் சிதற வடவன் கொடுந்தீ


நாவு தீண்டி நம் எழில் நலம் யாவும்


கருகுதல் தகுமோ தமிழே எழுவாய்!



___________________________________________________________

வெள்ளி, 23 ஜூன், 2023

சொல்லை ஆண்ட முல்லை

 


சொல்லை ஆண்ட முல்லை




பத்துப்பாட்டில் ஒன்றான முல்லைப்பாட்டு தமிழ்ச்சொற்களின் ஆழமான கற்பனையும் பொருட்செறிவும் மிக மிக நிறைந்ததொரு அழகிய நீண்ட அகவற்பா தொடர் ஆகும். பாடியவர் காவிரிப்பூம்பட்டினத்துப் பொன்வணிகனார் மகனார் நப்பூதனார்

பாடப்பட்டோன்: தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன்

ஒவ்வொரு முல்லைபூவும் ஒவ்வொரு சொல்லையும் தன் எழில் ஆட்சியில் கோர்த்து வைத்திருந்தது போல் நான் உணர்ந்தேன்.அதனால் தான் "சொல்லை ஆண்டமுல்லை" என்ற தலைப்பில் என் சங்கநடைச் செய்யுட் கவிதையினை ஆக்க எண்ணினேன்.ஆனால் தலவன் தலைவியின் இடையே நெகிழ்ந்த காதல் உணர்வை வெளிப்படுத்துவதை விட அந்த நம் வரலாற்றுத்தடத்தில் நம் தமிழர் நாகரிகம் வடவரின் புராண   சிந்தனை களுக்குள் அமிழ்ந்து கிடந்தது கண்டு வெதும்பிய உள்ளத்தில்  தான் இப்பாடலை நான் எழுதியுள்ளேன்.




சொல்லை ஆண்ட முல்லை

___________________________________________

சொற்கீரன்.



மூன்றடி மண் தா வென அவன்


முழுநிலம் பறித்த சூழ்நுண் அறிவில்


மாவனை வீழ்த்தி மாண்திறம் ஆண்ட‌


இறைவம் எல்லாம் மனிதம் வீழ்த்தி


சங்கொலி முழக்கி சாற்றியதெல்லாம்


வேதம் என தலைமேல் கொண்டு


தமிழ் இமிழ்ந்த வரலாற்று ஒளியை


தின்று விழுங்கிய கொடுமை என்கொல்?


நாழி இழிந்த நல் அருவியின்


நெல்லும் பூவும் கையிடை ஊர்பு தொழுதர‌


விரிச்சி விழையும் வளைநெரி கையும்


மள்ளல் மதர்த்த எஃகம் இலையும்


இறைஞ்சி நிற்கும் மானம் அழிந்த‌


மணிசுடர்த் தமிழும் விடைக்க ஒல்லா


நரம்பின் யாழும் மைக்கண் நுண்சிறை


முரசும் ஆர்க்கும் ஆர்க்கும் வீழ்மையும் என் கொல்?


புலித்தொடர் பூட்டிய செந்தமிழ் மறவர்


எலியனையர் என அடிமைத்தொடரில்


அடங்கிக்கிடத்தலும் என் கொல்?என் கொல்?


முல்லைப்பாட்டின் சொல்தொறும் சொல்தொறும்


முல்லை அவிழும் போழ்தே அன்ன‌


விடிவின் குண‌க்கடல் அலையாநின்று


அலைதரும் அதிர்வின் கிழிபு வானின்


வாலிய குரல் எற்றைத்திங்கள் யாங்கண் கேட்கும்?


_________________________________________________________

சனி, 17 ஜூன், 2023

அப்பாவுக்கு நினைவு தினம்.

 அப்பாவுக்கு நினைவு தினம்.

______________________________________ருத்ரா



"நேற்று நீ சின்ன பாப்பா..

இன்று நீ ..அப்பபா..!"

களிப்பின் உச்சத்தில் 

பாட்டு கேட்டுக்கொண்டிருந்த‌

என் தலையில் வந்து விழுந்தது

அந்த படம்

கயிறு அறுந்து.

என்னப்பா!

தலை அடிபட்டு விட்டதா?

படத்தில் இருந்து

என் அப்பா கேட்டார்.

அப்பாவை நினைவுகூரும் விதம்

இப்படி சினிமாத்தனமாகவா

இருப்பது?

என்று நீங்கள் கேட்பது புரிகிறது.

சின்னத்திரை..பெரியத்திரை..

பெரியத்திரைக்கும் பெரிய திரையாய்

அகன்று போய்விட்ட‌

அந்த ஆத்மா சாந்தியடைய‌ட்டும்

என்று 

புள்ளி வைத்து பொட்டு வைத்துவிடுகிற‌

நினவு அல்ல அது.

அது ஒரு பொறி.

அந்த அன்பு கொழுந்துவிட்டு

எரிந்து கொண்டே இருக்கும்.

அப்பப்பா!


_________________________________________________

24வது மைல்கல்

 


24வது மைல்கல்

________________________________________


ஜனநாயக பயணம் போகிறவர்களே!

உங்கள் யாத்திரைக்கான‌

மூட்டை முடிச்சுகள் ரெடியா?

குருட்டுத்தனமான 

முரட்டுத்தனமான‌

அந்த ஏமாற்றுப் புரட்டுகளின்

சாதி சமயச் சுமைகளை

தூர எறிந்து விட்டு 

பயணம் தொடருங்கள்.

சமூக நீதி மனித நீதி

இவற்றின் வெளிச்சத்துக்குமான‌

மைல் கல் தானா அது?

இல்லை

மொத்தமாய்

மனித சிந்தனைகளின்

ஒரு மாபெரும் கல்லறையா அது?

என்று

இன்னுமொரு கூரிய சிந்தனையோடு

பயணம் தொடருங்கள்

அந்த 24வது மைல்கல் நோக்கி...


_____________________________________

ருத்ரா

குப்பை

குப்பை

___________________________________ருத்ரா



குப்பையெல்லாம் பெருக்கியாயிற்று.

அந்த மூலையின் காகிதக்குப்பைகள்.

அதோ அந்த கிழக்கு ஓரத்தில் 

காலைதோறும் சேரும் சூரியன் கொப்புளித்த‌

ஒளிப்பிழியல்கள்.

மேலும் திட்டு திட்டாய் 

நிழல்கள் காட்டும் இருட்டுப்பிழம்புகள்...

எல்லாம் தான் பெருக்கியாயிற்று.

இதோ இங்கே பழுப்பேறிய ஒரு காகிதத்துணுக்கு.

இது இங்கே எப்படி?

ஐந்தாம் ஜார்ஜ் மன்னர் தலையை

முத்திரை பதித்த 

முப்பது நாப்பதுகளின்

போஸ்ட் கார்டு ஒன்று.

பாதி கிழித்து கிழிக்காமல் 

கிடக்கும் காகிதம் இது.

எழுத்துக்கள் முறுக்குப்பிழியலாய் 

கூட்டெழுத்தில்

.."சோபகிருது ஆண்டு ஆனி 21ல்.."

அப்புறம் எழுத்துக்கள் புரியவில்லை

அதிலிருந்து என்னால் எதையும் 

புரிந்து கொள்ள முடியவில்லை.

காலப்பறவை எச்சமிட்ட மிச்சம்

அது.

அது நல்ல நிகழ்வா? கெட்ட நிகழ்வா?

தெரியவில்லை..

கூட்டிப்பெருக்கி அந்த 

காலத்துண்டுகளையெல்லாம்

குப்பையாக்கி எறிந்து விட்டேன்.

என் அப்பாவா? தாத்தாவா?

அல்லது வேறு யாராவது பற்றிய நிகழ்வா?

காலம் வீசிய நிழல் அது.

இன்டெர்பொலேட்..எக்ஸ்ட்ராபொலேட்

என்று நிகழ்வுப்புள்ளிகளின் 

புள்ளிவிவரவியல் கணிதத்தையும் 

அப்பி வைத்து அந்த காலத்தின்

ஆறு காட்டிய திவலைக்குமிழிகளை

பிதுக்கிக்கொண்டிருந்தேன்.

முந்தைய எனது உறவுகளின்

யாராவது ஒருவரின் 

துவக்கப்புள்ளி அல்லது முற்றுப்புள்ளி பற்றி

பறை சாற்றுகிறதா?

தெரியவில்லை.

அந்த பறையின் அதிர்வுகள் மட்டும்

உள்ளே முண்டிக்கொண்டே இருக்கிறது.


_________________________________________________


 

வியாழன், 15 ஜூன், 2023

அங்கே பாருங்கள்




அங்கே பாருங்கள்

குற்றுயிரும் குலையியிறுமாய்.

தலைகள் அறுக்கப்பட்டு

கண்கள் குதறப்பட்டு

உடல்கள் துண்டு துண்டுகளாய்...

ஜனநாயகத்தின் அவிர்பாகம் ரெடி.

மந்திரங்களும் தந்திரங்களும்

புகை மூட்டம் போட்டதில்

அரசியல் அறமே களவு போனது.

கண்விழிக்கப்போகிறீர்களா மக்களே?

கல்வெட்டுகள் தேடும் தமிழர்களே

நீங்கள் 

ஒரு கல்லறைக்குள் கிடப்பதன்

ஓர்மை இருக்கிறதா?


திங்கள், 12 ஜூன், 2023

தோழர் பால்டேவிட் பொற்செல்வன் அவர்களே

 தோழர் பால்டேவிட் பொற்செல்வன் அவர்களே



சொற்செல்வனைத்தான்

உங்களிடம் பார்த்தேன்.

பொற்செல்வனைப்பார்க்கவில்லை.

பால் நினைந்து ஊட்டுவது

தாய்மை மட்டும் அல்ல

நட்பும் தோழமையும் கூடத்தான்

பால் டேவிட் அவர்களே.

என் பேனாக்களில் கவிதைகள்

வழியும்போது

அவை உங்கள் புன்முறுவலையும்

அன்பான வாசிப்பையும் தேடியே

பெருகி ஓடும்.

பாட்டாளிகளின் இயக்கத்தில்

இந்த "பாட்டாளி"களும் கொஞ்சம்

எரிமலை ஊற்றின்

வாசனையை காட்ட முடியும்

என்று

நாம் அன்று ஒலித்த குரல்கள்

இன்றும் எதிரொலிக்கிறது.

இந்த இளையதலைமுறைக்கு

மகுடம் இன்னும்

உங்கள் சீரிய தொண்டில் தான்

என்று நான் அறிவேன்.

அன்புடன் உங்களை வாழ்த்தும்


செங்கீரன்

(இ.பரமசிவன்)


_______________________________________________‍

 



ஞாயிறு, 11 ஜூன், 2023

சம்ப்ரோக்ஷணம்.

 சம்ப்ரோக்ஷணம்.

_____________________________


கூவத்திலிருந்து

ஒரு கும்பம் நிரப்பி எடுத்து

மஞ்சள் குங்குமம் மாவிலை

எல்லாம் வைத்து

மீண்டும் அதே கூவத்தில் 

கொட்டினார்.


_______________________________எப்சி


நண்பரே..இது எப்பிடி இருக்கு?


நண்பரே..இது எப்பிடி இருக்கு?

_______________________________________



யோவ்

நில்லுய்யா

எங்க போற?

நீ பாட்டுக்கு நான் எழுதுனதை

உரசிவிட்டுட்டு

லைக் போடாம போற.

இந்த பேட்டை யாவாரம் பத்தி

உனக்கு தெரியுமா தெரியாதா?

சும்மா பாத்துட்டுப் போனாலே

என் சரக்கு உனக்கு புடிச்சிருக்குன்னு தான்

அர்த்தம்.

பத்தோ பதினஞ்சோ கொடுத்து

போணி பண்ணிட்டுபோயா.

ஆமா..

லைக் போட்டுட்டுப்போயா..

இல்லன்னா

ரத்தம் கக்கி

மூச்சு நிண்ணு போய்ச்சேந்துருவ...

உங்கள் கழுத்தில் துண்டு போட்டு

இறுக்காத குறையாய்

ஏ ஐ சாட் போட்

சாட் பூட் என்று குதித்தது.


__________________________________________ருத்ரா

 

வெள்ளி, 9 ஜூன், 2023

அந்தக்குரல்

 


அந்தக்குரல் 

கேட்டுக்கொண்டே இருக்கிறது.

எங்கிருந்து?

யாரிடமிருந்து?

எதைப்பற்றி?

என்ன...என்ன 

என்ன சொல்கிறாய் என்று

நான் இடைமறிப்பது உண்டு.

என்னப்பா?

நான் உன்னிடம் ஒன்றும் பேசவே இல்லையே!

நான் சுதாரித்துக்கொண்டு

என் முகத்தில் வழிந்த அசடு

துடைக்கப்பட முயற்சிக்கும் போது

வியர்த்து கொட்டி விடுகிறது.

பில்லியன் ஆண்டுகளாய் நீண்ட‌

அண்டத்தின் அந்த நரம்போட்டத்தின் 

அகர முதல வரைக்கும்

அந்த கேள்வி வியர்வையின் நெருப்புத்துளி

நீள்கிறது.

இந்த தொப்பூள்கொடியின் 

இந்த முனையும் அந்த முனையும்

உரசிக்கொள்ளும் 

விஞ்ஞானமே நம் மெய்ஞானம்.


__________________________________ருத்ரா

அகழ்நானூறு 47"

 


நெடுநல்வாடை ....ந‌க்கீரர்

__________________________________________________‍


புன்கொடி முசுண்டைப் பொறிப்புற வான்பூப்,

பொன் போல் பீரமொடு புதல் புதல் மலரப்,

பைங்கால் கொக்கின் மென் பறைத் தொழுதி,   15

இருங்களி பரந்த ஈர வெண்மணல்

செவ்வரி நாரையொடு எவ்வாயும் கவரக்,

கயல் அறல் எதிரக், கடும் புனல் சாஅய்ப்

பெயல் உலந்து எழுந்த பொங்கல் வெண்மழை

அகல் இரு விசும்பில் துவலை கற்ப,   20

அங்கண் அகல்வயல் ஆர் பெயல் கலித்த

வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க,

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்

கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை,

நுண்ணீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு,   25

தெண்ணீர்ப் பசுங்காய் சேறு கொள முற்ற,

நளி கொள் சிமைய விரவு மலர் வியன் காக்

குளிர் கொள் சினைய குரூஉத் துளி தூங்க;  (13 – 28)



அகழ்நானூறு 47"

_______________________________சொற்கீரன்



கல் புடைத்து பெயர் தரூஉம் 

கருவி வானம் சிவணிய பைம்பெயல்

குணில்பாய் பேரோலி குரல்வீங்கு உகளல்

உடைகுமிழ் பளிங்கின் உருகெழு வனப்பில்

சினைய தூங்கும் நுண்டுளி கழைய‌

சிலம்பு இமிழ் கண்சிறை 

வியாழன், 8 ஜூன், 2023

திரு முத்தரசு அவர்களுக்கு

 அன்புள்ள அத்தான் திரு முத்தரசு அவர்களுக்கு


அகநானூற்றுப்பாடல்கள் படித்து அவற்றின் சொல் ஆழம் பொருள் ஆழம் மூழ்கி கற்பனை வளம் பருகிக்களித்துபடைத்த சங்கநடைச்செய்யுட் கவிதைகளே எனது "அகழ்நானூறு" என்பது.இன்று காலை 5 மணியளவில் நான் எழுதியதே இந்த "அகழ்நானூறு 46" ஆகும்.மாமூலனார் (அகம் 1) வெள்ளிவீதியார் (அகம் 362) ஆகிய செம்புலவர்களின் பாடல்கள் கண்ணுற்ற போது அந்த எழுத்தின் ஆழம் என்னைச்சிலிர்க்க வைத்தது.அதன் வெளிப்பாடே எனது படைப்பான அகழ்நானூறு.இதன் பொழிப்புரையை இன்னும் எழுதத்தொடங்கவில்லை.

பொருள் தேடிச்செல்லும் தலைவன் அடர்ந்த காட்டிடை அஞ்சாமல் சென்று கொண்டிருந்த போதும் தலைவின் முறுவல் அழகே அவன் அந்த வன்சுரம் கடக்க உதவுகிறது.அதே முறுவலும் அவள் பசலையுமே அவனைஅவளை நோக்கி சந்திக்கவும் விரையும் படி தூண்டுகிறது என்பதே இதன் கருத்துரை.

தங்கள் திறனுரையை இந்த செய்யுட்பற்றி நான் அறிய விழைகிறேன்.


இப்படிக்கு 

அன்புடன் 

இ பரமசிவன்.



அகழ்நானூறு 46

________________________________________சொற்கீரன்


ஊழ் வீழ்த்த உறுநனி பொழுது 

ஊரத் தந்து கொல்சுரம் நீந்தி

பெண்ணைப்புறத்து குரூஉமயிர் அன்ன‌

போர்த்த எண்கின் முருக்கு அவிழ் 

வள் உகிர் கூரிய அறையலும் 

பொலம் கிளர் வட்டம் பொறிசெய் வண்ணம்

நீள் நெடும் மலையின் உரு காட்டி

அசைவும் உருவ அஞ்சுவரு பரும்பாம்பு

வழிமறித்துக் கிடப்ப அஞ்சாதிறத்து

ஆறு நீந்தி செம்பொருள் வேட்டத்துச்

செறுவும் கடந்து நிரம்பா நீளிடை

மீமிசை உய்த்தலும் மிக்கூர்ச்செலவு

நிறுத்தல் இன்றி நீட்டிய செய்து

கழை முதிர் நெல்லின் வளி முயங்கு

கான் தொறும் கல் தொறும்

படுகடாஅம் படுப்ப மழகளிற்று

நடையின் வாங்கு அமை விதிர்ப்ப‌

சேயிழை முறுவல் உள்ளத்து வாங்கி

அவிழ் இழை பொருத அடுபோர் பசலை

அவள் விழியின் அருவியில் இழிந்த காட்சி

அவன் அகத்துள் ஈர்ந்த பொழுதே

மின்னல் தைத்தென அவன் விரைந்தான் மன்னே

அவள் நிழற்சுவட்டின் பளிங்கின் முற்றம்

சேர்ந்து கைவளை நெகிழ்வு நீக்கிடும் 

வண்ணம் கொண்டு எண்ணம் ஏந்தி

காற்றையும் பிளந்து கடுகியே விரைந்தான்.


_____________________________________________________________





அகழ்நானூறு 46

 அகழ்நானூறு 46

________________________________________சொற்கீரன்


ஊழ் வீழ்த்த உறுநனி பொழுது 

ஊரத் தந்து கொல்சுரம் நீந்தி

பெண்ணைப்புறத்து குரூஉமயிர் அன்ன‌

போர்த்த எண்கின் முருக்கு அவிழ் 

வள் உகிர் கூரிய அறையலும் 

பொலம் கிளர் வட்டம் பொறிசெய் வண்ணம்

நீள் நெடும் மலையின் உரு காட்டி

அசைவும் உருவ அஞ்சுவரு பரும்பாம்பு

வழிமறித்துக் கிடப்ப அஞ்சாதிறத்து

ஆறு நீந்தி செம்பொருள் வேட்டத்துச்

செறுவும் கடந்து நிரம்பா நீளிடை

மீமிசை உய்த்தலும் மிக்கூர்ச்செலவு

நிறுத்தல் இன்றி நீட்டிய செய்து

கழை முதிர் நெல்லின் வளி முயங்கு

கான் தொறும் கல் தொறும்

படுகடாஅம் படுப்ப மழகளிற்று

நடையின் வாங்கு அமை விதிர்ப்ப‌

சேயிழை முறுவல் உள்ளத்து வாங்கி

அவிழ் இழை பொருத அடுபோர் பசலை

அவள் விழியின் அருவியில் இழிந்த காட்சி

அவன் அகத்துள் ஈர்ந்த பொழுதே

மின்னல் தைத்தென அவன் விரைந்தான் மன்னே

அவள் நிழற்சுவட்டின் பளிங்கின் முற்றம்

சேர்ந்து கைவளை நெகிழ்வு நீக்கிடும் 

வண்ணம் கொண்டு எண்ணம் ஏந்தி

காற்றையும் பிளந்து கடுகியே விரைந்தான்.


_______________________________________________________

புதன், 7 ஜூன், 2023

அகழ்நானூறு 45'

 





அகழ்நானூறு 45

___________________________________சொற்கீரன்


உருவத்து வெரீஇய சுரனிடை ஒரு கல் 

குதிரை போன்ம் சூர் படு ஆரிடை

நவிரல் வான்பூ அவன் நசை நளி ஊர‌

அவள் இறைவழி ஊரும் வளை அலங்கு

எல்லின் வழங்கலும் வௌவலும் 

அவன் மழவத்திரள் சிதைப்ப 

ஆரிடை அலைவுறு கூர் வள்ளுகிர்

பெண்ணை போர்த்த குரூஉமயிர் யாக்கை

எண்கின் எதிரலும் அஞ்சாத்தகையன்

பாம்புரி வீட பரல் நெரி ஆற்றின்

பொரிய இடறி கால்பெரிது கடுக்கும்

நோதலும் பெரிதென எண்ணா மாண்பின்

வரூஉம் வரூஉம் வீ அலரி இறைய 

நெடுவழி பரத்த அவளின் மைவிழி

சிவணிய நெஞ்சில் தன் நெஞ்சு ஒற்றி

விரைவான் கல்படு அத்தம் நீங்கி

உள்ளத்துள் அவள் நுதல் வாளின் ஈர்தல்

நுடங்கியும் செல்வான் ஒல்லாமை ஆற்றி.


______________________________________________________

பக்தனிடம் ஒரு வரம்


என்னது அது?

குழப்பம் என்று

ஆயிரம் விதமாய் 

சொல்கிறார்கள்?

குழம்பிய கடவுள்

பக்தனிடம்  ஒரு

வரம் கேட்கிறார்.

முதலில் 

உன் ஆனா ஆவன்னாவில்

என்னிடம் பேசு.

மிலேச்சத்தனமான‌

உன் சஹஸ்ரநாமங்கள் 

எனக்கு வேண்டாம்.


______________________________________சொற்கீரன் 

புல்லுக்கும் புழுவுக்கும்

 


புல்லுக்கும் புழுவுக்கும் கூட‌

கவிதை எழுதத்தெரியும்.

வானமே தான் அவற்றின்

காகிதமும் எழுத்தும்.

அவை

சூரியனைக்கொப்புளித்து

சொற்களில் பல் தேய்த்து

விடியலை வரவேற்றன.

அவற்றின் மூச்சுகள் தோறும்

விடுதலையின் அணுவுலைக்கூடம்.

அவற்றின் பட்டாம்பூச்சிகளில்

வர்ணங்கள் மட்டுமே இருந்தன‌

வர்ணாசிரமங்கள் இருந்த தில்லை.

கடவுள் எனும் ஆபாசத்தை

அவை இன்னும் 

அறியவே இல்லை.


_________________________________சேயோன்.

வியாழன், 1 ஜூன், 2023

கொஞ்சம் கிட்டே வா!

 

கொஞ்சம் கிட்டே வா!

___________________________________________சேயோன்.



சூரியனே 

கொஞ்சம் கிட்டே வா!

உன் கன்னத்தை வருடிக்கொள்கிறேன்.

தர்ப்பைப்புல் மந்திரங்களால்

உன்னை கிச்சு முச்சு மூட்டிக்கொண்டிருந்தபோது

கடைசியில் சுண்டல் பிரசாதம்

குருட்டாம்போக்காய்

ஒரு கணிதம் சொன்னது.

கடவுள் என்ற ஒன்றை

மனிதன் புரிந்து கொள்ளவே கூடாது

என்பது தான் அது.

இன்று அறிவியல்

உன்னை என் மேஜை மீது

"போன்ஸாய்" போல்

முகம் காட்டிச்சொல்கிறது.

உன் நெருப்பின் சிவப்பு

வெட்கத்தினால் அல்ல.

என்னை தினம் தினம் பார்த்து தான்

நீ சன்னலை திறக்கவேண்டுமா?

உன் அறிவுக்குழம்பில் 

நான் இந்த நாட்களை

உனக்கு உருட்டி விளையாடுவது

தெரியாமால்

அந்த ருத்திராட்சங்களையா

நீ இன்னும் உருட்டிக்கொண்டிருப்பது?

கொஞ்சமாய் செல்லமாய்

நீ சிவப்பது தான்

அந்த மின்காந்தப்புயல்களின் செங்கரு

என்று புரிந்து கொண்டு விட்டோம்

நாங்கள்.

அண்டத்தின் இந்த பாதையில் 

நாம் கைகோர்த்தே செல்வோம் வா.


__________________________________________________







https://www.msn.com/.../the-inouye.../ss-AA1c0GOw...

WITH THANKS FOR THE LINK