"ஏ எஃப்"
______________________________________________
ருத்ரா
"நா ஒரு முட்டளுங்க..."
சந்திரபாபு பாடிய பாடல்
மூலை முடுக்கெல்லாம்
அன்று எதிரொலித்தது.
அப்போதும்
உருளைக்கிழங்கில்
ஏ எஃப் என்று செதுக்கி மை தோய்த்து
குறும்புத்தனமாய்
மற்றவர்கள் சட்டையில் அச்சு ஒற்றிய
சுவடுகளை திரும்பி
உற்று நோக்குகிறேன்.
அவன் வேண்டுமானால்
ஏப்ரல் ஃபூல் ஆக இருக்கலாம்.
நான் இப்போதும்
எப்போதும் ஃபூல் ஆக இருப்பதை
உணர்கிறேன்.
அற்ப சந்தோஷம் எனும்
முட்டாள் தனம்
நிறைந்து வழியும் இந்த உலகில்
அரிதினும் அரிதாய் இருக்கும்
அந்த அறிவின் பசி தோன்றும் வரை
மனிதன்
எத்தனை கணினிகளை
தன் மீது சுமத்திக்கொண்டாலும்
அது அவன் மீது
அழுத்தமாய் அச்சிடுவது
ஏ எஃப் தான்.
அப்படியென்றால்....
எப்படி வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்.
இப்படியும் இருக்கலாம்
"அண்ட்ராய்டு ஃபூல்"
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக