அழகர் எதிர்சேவை
__________________________________ருத்ரா
"வாராரு!வாராரு!
அழகர் வாராரு!..."
இனிய கொட்டு முழக்கோடு
பல்லக்கு வந்து விட்டது.
அழகர் மலையானை
தரிசிக்க
கூட்டம் அலை மோதுகிறது.
சஞ்சீவி மலையையே பெயர்த்த
அனுமன்
இங்கு வேடத்தில்
"கை நீட்டி" "கை நீட்டி"
கேட்டுக்கொண்டிருந்தார்.
விளம்பர வண்டிகள்
"பை ஒன் கெட் டூ"என்று
ராட்சத முகத்தில் பல் காட்டி
சிரித்தது.
சினிமாப்பாட்டு
டண் டணக்கா..டண் டணக்கா
என்றது.
கொத்து கொத்தாய் பலூன்கள்
வண்ணங்கள் காட்டின.
அந்த விற்பனையாளன்
தன் பசியையும் கனவுகளையும்
அந்த பலூன்களில் அடைத்து
வைத்திருந்தான்.
ஓரத்தில் நின்று
பல்லக்கில் செல்லும்
அழகனைப் பார்த்துவிட
அல்லாடினேன்.
தள்ளு முள்ளுவில்
என் கைபேசிக்காமிராவும்
நானும் ஒன்று பட முடியவில்லை.
கள்ளழகன் முகம் தெரியவே இல்லை.
எந்த கோணத்தில் பார்த்தாலும்
பல்லக்கை வியாபித்துக்கொண்டு
நூல் சகிதமாய்
பஞ்ச கச்சத்தில்
அவர் தொந்தி தெரிந்தது.
இல்லாவிட்டால்
பின்புறம் தெரிந்தது.
பிரம்மம் மட்டும் இன்னும்
தெரியவே இல்லை.
__________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக