என் சிலேட்டுப் பலகை.
______________________________ஒண்ணாப்பு படிக்கையிலே
கங்காருக்கு குட்டி போல்
வகுப்பில்
என்னைத் தொத்திக்கொண்டிருக்கும்.
இது.
எங்களுக்கு
இந்த கறுப்பு சன்னல் தான்
முதல் வெளிச்சம் தந்தது.
அரைகால் டவுசரும் சட்டையுமாய்
இதனோடு நாங்களும்
தமிழுக்கு
ஒரு புதை பொருள் ஆராய்ச்சி
நடத்தியிருக்கிறோம்.
அ ஆ என்று ஒலித்து அதை
எட்டு கோணல் ஓவியமாய்
எழுதி எழுதி
அந்த சிலேட்டுப்பலகையில்
செதுக்கி இருக்கிறோம்.
"வால் எயிறு ஊறிய"
என்று
நாளைக்கு கல்லூரியில்
சங்கத்தமிழை
படித்துக்களிப்பதை
அன்றே ஒத்திகை பார்த்திருக்கிறோம்.
அந்த கருப்புக்குச்சி எழுத்துகளை
அழித்து அழித்து
மீண்டும் எழுதுவதைத்தான்
சொல்கிறேன்.
இந்த எச்சிலில்
எந்த மின்னலும் தெறிக்கவில்லையே!
எந்தக் கரும்பும் இனிக்கவில்லையே.
இந்த சிலேட்டு
ஒரு நாள் கூட்டுப்புழுவைப்போல்
உடைந்து போன போது தான்
அதன் ஓட்டைகள் வழியே
பட்டாம்பூச்சிகள்
பறப்பது தெரிந்தன.
ஏன் அந்த தெளிவான வானம் கூட
கிழிந்து போயிற்று.
அப்புறம் தான் தெரிந்தது
கிழிந்தது வானம் அல்ல
என் இதயம் என்று.
அந்த எதிர் பெஞ்சு எலிவால்
இளமையின் பூரிப்பில்
புலி வாலாய் மாறி
என்னை
துரத்து துரத்து என்று
துரத்தியது.
வயதுகளின் பூப்புக் காடுகளில்
மூழ்கிய கனவுகள்
பற்றி எரியத்தொடங்கியது.
சில நேரங்களில்
பளிச்சென்ற காலைச்சூரியனின்
சிதறலில்
பனித்துளிகள் கூட
ஏழுவர்ண ரோஜாவை
என் மீது எரிந்தது.
என் சிலேட்டுப்பலகையில்
இன்னும் அவள் சிரிப்பின்
கிராஃபிக்ஸ்
என்னை சல்லடையாக்கிவிட்டது.
சட்டை உரித்த பாம்பாய்
என்னை உரித்துக்கொண்டு
நான்
எங்கோ ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
அந்த
மாணிக்கச்சிரிப்பைத்தேடி.
______________________________
03.09.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக