ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

பரவாயில்லை

 பரவாயில்லை

_____________________________________ருத்ரா



எனக்கு சௌகரியமாய் இருக்கிறது

கண்களை மூடிக்கொள்வதும்

கருத்துகளின் கதவுகளை 

அடைத்துக்கொள்வதும்.

ஆளும் நாற்காலிக்கு வந்த பின்

மக்களின் எண்ணம் 

எங்கோ தொலைந்து போய் 

சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே

எல்லாம் போதிக்கிறது.

ராமனின் கோதண்டத்தை விட‌

அது 

கூர்மையாகி விடுகிறது.

தர்ம சாஸ்திரங்கள் 

நியாய அநியாயங்கள்

மக்களையெல்லாம்

நசுக்கும் சூத்திரங்களாக‌

மாறுகின்றன.

அதைப்பற்றி சிந்திக்காமல்

அவர்கள் கிண்டித்தரும் அல்வாவை

தின்பது படு சுகமாக இருக்கிறது.

மாடுகள் போடும் சாணியில்

நம் சரித்திரங்களைக் குழைத்து

பூசி மெழுகும் அலங்கோலங்களை

அழகாய் அனுபவித்துக்கொண்டிருப்பது

இன்னும் சுகமாய் இருக்கிறது.

திடீரென்று 

ஒரு பளிங்கு மேடை அமைத்தார்கள்.

இனி உங்கள் வாக்குகள் பத்திரமாக‌

இதன் அடியில் சமாதியாக‌

சாம்பிராணி சூடம் தீபம் சகிமாதாக‌

பூஜிக்கபடும் என்றார்கள்.

ஆகா! 

திவ்யம்! திவ்யம்!

என்று கன்னத்தில் அடித்து

கும்பிட்டுக்கொண்டேன்.

கண்ணை மூடிக்கொண்டு அந்த ரிஷிகளை

தியானிப்பது

மிகவும் சுகமாக இருந்தது.

எல்லாம் சௌகரியமாய் இருக்கிறது.

கண்களைப்பிடுங்கிக்கொண்டால் கூட‌

மிக சௌகரியம் தான்.

எதையும் பார்க்கவேண்டியதில்லை.

கூக்குரல் கேட்கிறது.

கை கோத்து மனம் ஒப்பி 

கூட இருந்தவர்கள்

வேறு ஏதோ ஓதுகிறர்கள்.

அது ரிக் இல்லையாம் யஜுர் இல்லையாம்

அதனால் அவர்கள்

செதில் செதில்களாய் 

சிதைக்கப்படுவது 

கேட்கிறது.

பரவாயில்லை.

எல்லாம் சௌகரியமாய் இருக்கிறது.

என்ன?

மானுடம் கசாப்பு செய்யப்படுவது

தெரியவில்லையா?

நீதி காக்கப்பட வேண்டாமா?

"ஒரு மண்ணும் வேண்டாம்

எல்லாம் சௌரியமாய் இருக்கிறது.

போங்கள்..

சப்பளாக்கட்டைகளில்

சுகமாக சௌரியமாக நாம்

நசுங்கிபோய்விடலாம்.

பரவா...நஹீம்

என்ன?

அதான் அய்யா

பரவாயில்லை...


_____________________________________________

10.03.2022

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக