"கோமா"
______________________________________
எத்தனை தடவை எழுதினாலும்
தடங்கள் நிரடுவதில்லை.
பரல்கள் சிணுங்குவதில்லை.
கொலுசுகள் தன் லாவா பிழியல்கள்
கொப்புளிப்பதில்லை.
ஒலிகளின் சிலிர்ப்புகள்
விரலிடுக்கில் வழிந்து விழுதுகள் ஆவதில்லை.
வாழ்க்கையின் சந்தங்கள் சரடுகளை
நீட்டித்தருவதில்லை.
சோகங்களின் அவமான மூலைகளின்
மூக்கறுத்த ரத்த விளாறுகள்
இன்னும் காய்ந்து போகவில்லை.
எழுதிய எழுதாத ஏக்கங்கள்
எழுத்து வடிவங்களில்
மறைத்துக்கொண்ட நிர்வாணங்களை
கொடியில் காயபோட்டு எடுத்து
மடித்து வைத்துக்கொண்டதில்லை.
சுற்றி சுற்றி முறுக்கு பிழிந்து
சுவைகூட்டும் பத்திகளை
எழுதி அரங்கேற்றவில்லை.
ஆயிரம் ஆயிரம் மைல்கள் நீள
நாவல்களில்
நா தீட்டி நிப்புமுனைக் கீறுகளில்
வெள்ளங்கள் நீர்பாய்ச்சி மகசூல்கள்
குவிக்க வில்லை.
வரலாறுகளின் எலும்புக்குவியல்களில்
எழுத்துக்களை பதியமிடவில்லை.
மூளித்தருணங்களின்
முகடுகளில்
மோனம் கூர்பாய்ச்சிய
ரத்தங்களின் விம்மல்களில்
சலவைக்கல் பதித்த
மாடங்களின் அடியில் மடங்கிய
சவப்படுக்கையில் ஒடுங்கவில்லை.
கவிதை என்று ஒரு
கழுமரம் ஏறிக்கொண்டு
சதைக்கூழ்க்கிழியல்களின் கந்தலில்
எதுகைகளும் மோனைகளும்
செதுக்க வில்லை.
இன்னும் எதற்கு
சொற்களும் எழுத்துக்களும்?
அவை அந்த
"கோமா" விறைத்தல்களில்
உறைந்து கிடக்கட்டும்
இறுதியாய் வந்து
அந்த ஈக்கள் மொய்க்க வரும் வரை!
_______________________________________________
சித்தாந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக