சனி, 31 ஜனவரி, 2026

பி எஸ் ராமையாவும் வண்ணதாசனும்

Vannadasan Sivasankaran S

2ம.நே

 ·

ரொம்ப நேரமாக ரயில்வே கேட் அடைத்திருந்தது.

இருப்புக் கொள்ளவில்லை.

ஒரு டீ சாப்பிடலாம்.

ஆட்டோ ட்ரைவரையும் அழைத்தேன்.

வரவில்லை.

கைபேசியில் ரீல்ஸ் பார்த்தபடி மறுத்தார்.

ஒரு மருத மரத்தடியில் இருந்தது டீக் கடை.

மருத மரத்தின் சாம்பல் நிறத் தோல் பிடிக்கும்.

டீக் கடையில் கூட்டம் நின்றது.

மூக்குத்தி அணிந்த கனத்த பெண் டீ போட்டுக் கொண்டிருந்தார்.

கருப்புக் கண்ணாடி, தொப்பியுடன் எம் ஜி ஆர் படம் தொங்கியது.

எம் ஜி ஆருக்கு கோணலான வசீகரமான சிரிப்பு..

முழுக்கைச்சட்டை நுனியில் மிக அகலமான கைக்கடிகாரம்.

எனக்கான டீ இன்னும் வரவில்லை.

கடைக்குள் கேஸ் சிலிண்டர் பக்கம் சாம்பல் பூனை.

என் பக்கம் ஒதுங்கியவர் சூடான டீயின் மேல் குனிந்திருந்தார்.

என் கால் பக்கம் நான்கைந்து கோழிக்குஞ்சுகள் ஓடின.

என் முன் நீட்டப்பட்ட டீயை எடுத்துக்கொண்டேன்.

எம் ஜி ஆர் சிரிக்கிற, கோழிக் குஞ்சுகள் ஓடுகிற டீ நன்றாக இருந்தது.


_____________________________________________________________________


பி எஸ் ராமையாவும் வண்ணதாசனும்

_______________________________________________


இப்படித்தான்

ஒரு நாவலையும் சிறுகதையையும்

விரித்து பிரித்துக்காட்டினார்

பி எஸ் ராமைய்யா அவர்கள்.


காதலர்கள் இருவரும் காதலித்தனர்

என்றால் அது சிறுகதை.

அப்படியே

கல்யாணம் பண்ணி குடும்பத்தில்

வத்தக்குழம்பும் சுட்ட அப்பளமும்

சேர்த்து சாப்பிட்டால்

அது நாவல்.


வண்ணதாசன் 

அந்த ரயில்வே கேட்டில்

கோழிகுஞ்சுகள் சகிதம்

எம் ஜி ஆரின் அந்த 

தோசைக்கல் சைஸ் கைக்கடிக்காரத்துடன்

சிரித்துக்கொண்டு

சூடான டீ யில் சினிமா காட்டினால்

அதுவே

ஆகச்சிறந்த கவிதையின் 

ஒரு "நெடுந்தொகை" என்பதில்

ஐயமே இல்லை.

நான் இன்னும் அந்த மந்திரமூர்த்தி

ஸ்கூலின் 

கருக்கு அழியாத வாசனையுடன் தான்

வாகையடி முக்கின் 

கவித்துவத்தை

முகர்ந்து கொண்டிருப்பது வழக்கம்.

சொற்கள் எறும்புகளாய்

ஊர்ந்து ஊர்ந்து தான்

கருங்கல்லையும்

நுங்குகளாய் குழைத்து விடுகின்றன.


________________________________________________

சொற்கீரன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக