ஞாயிறு, 24 ஜூலை, 2022

கலைஞர் பேனா

 கலைஞர் பேனா

‍‍‍‍______________________________ருத்ரா



அடி முடி காணா

சிவனின் சிலை இது.

ஒற்றைக்கால் தவம் இது.

வளைநரல் பௌவம் உடுக்கையாக‌

உடுத்திய போதும்

விசும்பு எனும் விசையை

விரிக்கும் மந்திரக்கோல் இது.

இப்படி எப்படி வேண்டுமானாலும் 

சொல்லிக்கொள்ளுங்களேன்.

இதுக்குள்ளே படியேறிப்போனால்

கைலாசமும் வைகுண்டமும்

காட்டும் பஞ்சுமிட்டாய் 

மேகங்களையெல்லாம்..

அந்த மரணபய தூசி 

துரும்புகளையெல்லாம்...

துப்பறவு செய்து விட்டு

மனிதனின் அறிவே துணிவு

எனும் வெளிச்சம் காட்டும்

ஒரு விளிம்பு வந்து விடும்.

மனிதனின் உச்சிமுனையில்

மறைந்து போகும் 

கடவுள் கற்பனைகள்.

எழுதிய எழுத்துக்குள் இன்னும்

எழுதா எழுத்துக்கள் தேடிப்போகும்

ஓராயிரம் ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்புகளின்

இடம் இதுவே.

அறிவுக்கு "அடி யேது? முடியேது? 

அவதாரங்களின் அரிதாரங்கள்

கரைந்து போகும் 

தூய அறிவின் ஊசிமுனை 

இங்கே உண்டு.

அறியாமைகள் இங்கே

கழுவேற்றப்படும்.

இருட்டுகளே 

கூச்சல் இட்டுக்கொண்டே இருங்கள்.

ஒளியின் ஒளி உங்களை

ஓட ஓட விரட்டட்டும்.


________________________________________












கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக