கவிஞர் ருத்ரா
____________________________________________________________
அரசியல் விழிப்புணர்ச்சி
இன்று அதிகமா?
இது என்ன கேள்வி?
இந்தக் கணினியுகத்திலா
இந்தக் கேள்வி?
ஆம் கணினிகள் கூட
மழுங்கடிக்கப்படுகின்றன
சிலர் சாணக்கியத் தந்திரங்களால்.
அன்று
கொடுமை கண்டு
வெகுண்டெழுந்த சமுதாய
அறச்சீற்றங்கள்
எங்கும் அணிவகுத்தன.
அப்புறம் அது
அடுத்த "சீனுக்கு" தாவுவதில்லை.
வடுப்பட்ட
காயம்பட்ட ஜனநாயகம்
வலியையே உந்து சக்தியாய்
மாற்றிக்கொண்டு
அந்த புயல் மூச்சை
ஓட்டுகளுக்குள் ஊதி
உயிர்ப்பு தந்திருக்கின்றன.
இன்று அது
கையகல "பேசி"களுக்குள்ளேயே
பேசித்தீர்த்துக்கொள்கிறது.
குறு குறு காட்சிகளின்
குறுகுறுப்பிலேயே
எல்லாவற்றையும் கொறித்துக்கொள்கிறது.
பெரும்பசியின் ஊழித்தீ கூட
சில்லறைக்காணொளிகளில்
காணாமல் போய்விடுகிறது.
இன்று நம் அரசியலமைப்பின்
அடித்தளம் ஆட்டம் கண்டிருக்கிறது.
ஆனாலும்
வெறும் சிற்றெரும்புக்கடிகளாய்
அவை மரக்கப்படுகின்றன.
நம் குடியரசுதேர்தலைப்பாருங்கள்.
அந்த நுட்பமான அரசியலில் கூட
நாம் குடை சாய்ந்து
விழுந்து கிடக்கிறோம்.
சாதி மதங்கள்..
விடுங்கள் சார்.
இவை வெறும் பட்டிமன்றத்தினவுகளுக்கு
அரிப்பெடுக்கும் தலைப்புகள்
என்று
பேசி பேசி "புசிக்கிறோம்".
அர்சியலின் பசி தீரவில்லையே.
இன்னும் முப்பது நாப்பது வருடங்களுக்கு
எங்கள் செங்கோல் தான்
என்று
மூளித்தனமான மொக்கை வசனங்கள்
பூதம் காட்டுகின்றனவே.
இப்போது சொல்லுங்கள்
அன்று மொத்தப்புரட்சி என்று
முழங்கினானே
ஒரு அரசியல் தலைவன்
அவன் இடம் இன்னும் இங்கு
வெறுமையாய்த் தானே இருக்கிறது?
ஏற்கனவே நம் அரசியல் அமைப்பில்
செத்தபாம்பாய்க் கிடக்கும்
சோசலிசம்
இன்னும் அடித்துக்கொல்லப்படவேண்டும்
என்று கூப்பாடு போடும்
வலது ஊளைகள் தானே
வண்ண வண்ணமாய்
ஊடகங்களில்
காவடி ஆடிக்கொண்டிருக்கின்றன.
ஆம்
இன்று எதுவும் இல்லை.
உண்மை அரசியலும் இல்லை.
விழிக்க வேண்டும் என்ற
உணர்ச்சியும் இல்லை.
____________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக