மழைக்கும் வெயிலுக்கும்
குடை நான் தான்.
கடலில் தத்தளிக்கும் போது
மிதக்கும் கட்டை நான் தான்.
பசியில் குடல்கள் சுருண்டு
உனைச் சுருட்டிய போது
அமுத வடிவில் கவளச்சோறும்
நான் தான்.
எல்லாம் உனக்கு நான் தான்.
ஆனால்
நீ எழுத்துக்கூட்டி படித்து
புத்தகங்களிடையே பயணித்து
உன் மைல் கற்களை
கடந்து
கால நிகழ்வுகளின்
நாடித்துடிப்புகளை
நீயே அறிந்து தெளியும் போது
நான்
குறுக்கே வரமாட்டேன்.
உன்னை நீ அறியும் போது
என்னை உன் மீது
வர்ணம் பூச மாட்டேன்.
நீ
அறிந்து கொண்டபோது
உன்னிடம் நான் வரும்
தருணங்கள் உண்டு.
நீ என்ன அறிந்தாய்
என்பதை
நான் அறிந்து கொள்ளவேண்டும்
என்ற
தினவும்
வினவும்
உன் மீது நானாய் மொய்ப்பது உண்டு.
அதை
அப்போது கொச்சைப்படுத்தி விடாதே
கடவுள் என்று.
________________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக