செவ்வாய், 31 மார்ச், 2020

ஒன்றுபோல் காட்டி...

ஒன்றுபோல் காட்டி...
============================================================ருத்ரா

நம் மன அழுத்தங்களை நீவி விடுவதற்கு ஒரு வழி இருக்கிறது.
அது நம் அறிவின் நுட்பத்தை சீண்டி விளையாடும் விளையாட்டே அது.
நமக்கு அறிவு இருக்க்கிறதா? அதுவும் நுட்பமான பரிமாணங்களில் நம்மிடம்
இயைந்து உள்ளதா?
இதற்கு நம் முன்னோர்கள் விளையாடும் விளையாட்டு ஏதாவது 
ஒரு தடித்த புத்தகத்தில் இருக்கும் அதைவிட தடிமனான சொற்கூட்டங்களில்
புகுந்து கொண்டு வாழ்க்கையின் உயிரின் உட்பொருள் தேடுகிறேன் என்று
அதற்குள் கண்ணாமூச்சி ஆடுவது தான்.கண்ணாமூச்சி விளையாட குறைந்தது இரண்டு பேர் வேண்டும்.ஒளிந்து கொள்ள ஒருவன்.அவனை தேடிக்கொண்டிருப்பவன் ஒருவன். இதற்கு அவர்கள் கையாண்ட வழியே
 
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.

இதற்கு இம்மை மறுமை ஆத்மா மரணம் மரணத்துக்குப்பின்னும் வாழும் ஆவி வாழ்க்கை என்றெல்லாம் சோழி குலுக்கிப்போட்டுக்கொண்டு அதிலிருந்து சில சிந்தனைப்பாடுகளை சித்தாந்தங்களாக்கிக்கொண்டு அமிழ்ந்து கிடக்கவேண்டும்.தற்கால அறிவு முறை கேள்வி பதில்களாலும் செயல்முறையில் நிகழ்தன்மை உடையதாகவும் இருக்கும் ஒரு பாதையில் தான் பயணிக்கிறது.அதில் மனித சமுதாயம் பல வகைகளில் ஏற்றம் பெற்றிருக்கிறது.இது அறிவியல் எனப்படுகிறது.ஏன் முட்டாள்தனங்களைக் கூட அறிவியல் தன் அறிவியல் கண்கொண்டு தான் பார்க்கிறது. அப்படி ஒரு பரிணாமப்பாதையில் மனிதன் இன்னும் ஒரு விளையாட்டுப்பொம்மையை
கையில் ஏந்திக்கொண்டு அந்த பொம்மையின் அதாவது பொய்மையின் மெய்மையை நோக்கி பயணம் போய்க்கொண்டு தான் இருக்கிறான்.அந்த பொம்மையே இங்கு கடவுள் என்பது. மனிதன் தொட்டில் குழந்தையாய் இருக்கையில் ஒரு "கிலு கிலுப்பையில்"அமைதி கொள்கிறான்.
ஆனால் வாழ்க்கையின் அந்தி வேளையில் ஒரு சாய்வு நாற்காலியில் கிடந்து தவிக்கையில்  அந்த பொம்மையே அவன் உற்ற தோழன் ஆகிறது.மன அழுத்தம் அவனை ஒரு ஆழத்துள் கொண்டுபோய் அமிழ்த்துகிறது.

அது என்ன?
அது எங்கு இருக்கிறது?
இது தான் அதுவா?
அது தான் இதுவா?
பின் 
எது தான் அது?
அது இருக்கிறது என்பவன்
ஆத்திகன்.
அது எதுவாகவும் இருந்துவிட்டுப்போகட்டும்.
அது 
இது என்று உன்னால்
சொல்லமுடியாத போது
அது எதுவும் இல்லை
அது அதுவும் இல்லை
அது இதுவும் இல்லை
அது இல்லவே இல்லை 
என்று 
விளிம்புக்கு வந்து விடுகிறாயே!
அது இல்லை என்று 
சொல்லிவிட்டு
அது ஏன் இல்லை என்று வேண்டுமானால்
ஆராய்ச்சி செய்து கொண்டிறேன்.
இருக்கிறது 
இல்லை 
என்ற இரு முனைகளும்
எதிர் எதிராய் வந்து உன்னைச்சந்தித்து
உனக்கு போக்குக்காட்டலாம்.
நீ போக்கு காட்டப்படுகிறாய்
என்பது தான் மெய்.
மற்றதெல்லாம் பொய்.
சிந்தனையை அடித்து அடித்து
துவைத்து இறுக்கிப்பிழிந்து
காயப்போட்டு விரித்ததில்
ஓட்டை ஒட்டையாய் கந்தல்கள்
தெரிந்தன.
கணித இயலில் அதற்கு
டோபாலஜி என்று பெயர்.
"இடநிலை இயல்"
நீ எங்கே இருக்கிறாய்
என்று 
உன் தேசப்படத்தை அது
விரித்துக்காட்டுகிறது.
அது என்ன?
புத்தகத்தை விரித்தேன்.
என் அருகே
கடிகாரமுட்கள் ஒரு
திருக்குறள் சொன்னது.

"நாள் என‌ ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும் 
வாள் அது உணர்வார்பெறின்"

============================================================



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக