சனி, 28 மார்ச், 2020

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.!

நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.!
==================================================ருத்ரா


ரிபோ நியூக்ளிக் ஆசிட்
சங்கிலி
பற்றி பாடம் நடத்தி
அதன் படம் வரைந்து
பாகங்கள் குறித்து
பரீட்சையை அந்த‌
சுடுகாட்டு சிதையில்
வைத்திருக்கும்
ஓ! கண்ணுக்குத் தெரியாத‌
கண்டிப்பான‌
ஆசிரியனே!
எங்களைப்பார்த்து
நீயும் கட்டாயம் ஒரு
பாடம் படித்துக்கொள்ளவேண்டும்.
உனக்காக‌
ஊரடங்கு நடத்தி
பரீட்சைகளையும் கூட‌
ரத்து செய்திருக்கிறோமே!
நீயும்
அந்த மரண பரீட்சையை
ரத்து செய்து விடு.
மனித உயிர்களுள் நுழைந்து
மனிதனாக வாழ்ந்து பாரேன்.
இந்த நுரையீரல் பூங்கொத்துகளை
நட்போடு தான்
நாங்கள் உனக்கு நீட்டுகிறோம்
அதை தின்று தீர்க்கவா
இப்படி புறப்பட்டு வந்தாய்?
எங்கள் கோவில்கள் கூட‌
அடைத்துக்கொண்டு விட்டன.
எங்கள் கடவுள்களிடம் உன்
பாச்சா பலிக்கும் என்று நினைக்காதே.
முடிந்தால்
அவர்களின் கல்லால் ஆன‌
இதயத்தையும்
நுரையீரலையும்
தின்று பாரேன்.
மனிதர்களை கொத்து கொத்து ஆக‌
நீ தின்பதை பார்த்தும்
அந்தக்கல் கல்லாகவே தானே
இருக்கிறது.
எங்கள் அறிவும் நம்பிக்கையும்
முயற்சியும்
தீரம் காட்டவே நீ
வீரம் காட்டுகிறாயா?
எங்கள் தோல்வி உன் வெற்றி அல்ல.
எங்கள் ஆராய்ச்சியில்
உன் முள் முகம் தொலைந்து போகும்.
உன் பூமுகம்
ஒரு புதியதோர் வாசல் காட்டும்.
முக கவசம் வீசியெறி
வா
அன்போடு கை  குலுக்கு!
தீதும் நன்றும் பிறர் தர வாரா.
நோதலும் தணிதலும் அவற்றோரன்ன.!

=================================================






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக