திங்கள், 16 மார்ச், 2020

ரஜினி எனும் ஆனை

ரஜினி எனும் ஆனை
=================================================ருத்ரா

இதோ இந்த‌
பட்டத்து யானை
தும்பிக்கையில் மாலையுடன்
நமக்கு
ஒரு அரசரைத்தேர்ந்தெடுக்க‌
வீதியில் இறங்கி விட்டது.
ஊடகங்களின் வெங்கலக்கடைகளில்
பண்ட பாத்திரங்கள்
கல கலக்கத்தொடங்கி விட்டடன.
இதோ இங்கு ஒரு நல்லவர்.
அதோ அங்கு ஒரு நல்லவர்.
ரஜினி மிகக்கவனமாக‌
மனித சம நீதியை
உரத்து முழங்கும்
திராவிட நல்லாட்சிக்கு
சமாதி கட்டும் வேலைக்கு
எங்கோ
ஒரு தூரத்தில் காமெராவை
நிறுத்தி வைத்துக்கொண்டு
படப்பிடிப்புகளைத் துவங்கி விட்டார்.
போராட்டம் நாட்டை
சுடுகாடு ஆக்கும் என்று
கர்ஜித்தவர்
இன்று
புரட்சிக்கு
ஒரு புள்ளியைத்துவக்கி விட்டதாக‌
அள்ளி விட்டுக்கொண்டிடுக்கிறார்.
இப்போது பொருளாதாரம்
ஒரு சுடுகாட்டில்
சிதைமீது மல்லாந்து கிடக்கிறது
என்ற காட்சி
அந்த "மதம் பிடித்த" ஆனைக்கு
ஏன் தெரியவில்லை?
கொரானாவைக்கூட‌
ஒரு "சர்ஜிகல் ஸ்ட்ரைக் செய்வதாய்"
விளம்பரத்தட்டிகள் வைத்து
ஒரு பீதியின் மூலம்
ஜனநாயகத்தின் "ஆத்மா"வுக்கே
முகக்கவசம் மாட்டிவிடும்
நடவடிக்கைகள்
அவருக்கு உறுத்துதல்
ஏற்படுத்த வில்லையே?
மற்ற மதத்தில்
ஒரு ஆயிரம் பேர்களை
தாக்க வேண்டும் என்றால்
நம் மதத்தின்
ஒன்றிரண்டு
பேர்கள்  மீது
தாக்குதல் நடத்து
என்பதே
மத வெறிக்கட்சிகளின்
சித்தாந்தம்.
இதற்கு பெட்ரோல் தான்
பக்தியும் பஜனையும்.
ரஜினி அவர்களே!
இந்த ஆன்மீகத்தைக்கொண்டு
தொடுத்த மாலையைத் தான்
உங்கள் தும்பிக்கையில் வைத்து
சுழற்றிக்கொண்டிருக்கிறீர்களா?
மக்களின் கபாலங்களை
குவிக்கப்போகும்
அந்த சுநாமிகளுக்குத்தான்
மாலை சூட்ட‌
களம் இறங்கியிருக்கிறீர்களா?
உங்கள் "ஊழல்" இலக்கணத்தில்
வர்ணம் ஏற்றாத‌
நான்கு வர்ண சாதி மத‌ நீதிகள்
இங்கு இருக்கின்றனவா?
தூய்மை ஆட்சியில் தான்
வங்கி இருப்புகளை எல்லாம்
"சுத்தமாக" துடைத்துக்கொண்டு ஓடிய‌
திருடர்கள் பெருகிப்போனார்கள்.
ரஜினி அவர்களே
நீங்கள் முதலமைச்சர் ஆவதற்கு
ஆசை காட்டாமல் இருக்கலாம்.
மக்கள் செல்வங்களை
விழுங்கும் முதலைகளின்
நீலிக்கண்ணீர் மீது படகு விடும்
சினிமா செட்டிங்கை வைத்துக்கொண்டு
பிலிம் காட்டுவதில்
எந்த நோக்கமும் நிறைவேறப்போவதில்லை.
இருந்த போதும்
உண்மையின் உள் வெப்பம்
ஏதாவது ஒரு கதிர்  வீச்சை
உங்கள் முயற்சிகள்
வெளிப்படுத்தும் என்றால்
அந்த இயக்கம்
வெற்றி பெற எங்கள் வாழ்த்துக்கள்!


========================================================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக