வெள்ளி, 28 பிப்ரவரி, 2020

டெல்லி எனும் காடு.

டெல்லி எனும் காடு.
==============================================ருத்ரா


நம் தலை நகரம்
தலை கொய்யப்பட்டு
முண்டமாய்
அநீதியின் பிண்டமாய்
மரண ஓலங்களின்
காடுகள் ஆகிப்போன‌
காட்சி அல்லவா இது!

தன் குறைகளை
வெளிப்படுத்தும் மக்கள்
இங்கே
குப்பையாக்கப்பட்டார்கள்.
குதறப்பட்டார்கள்.
துப்பாக்கிகள்
"ஜெய்ஸ்ரீராம் "கள் ஆகி
அந்த மக்களை தின்று தீர்த்தன.
தீ மூட்டி
டெல்லியையே
சுட்டு சாப்பிடத்துடித்தன‌
அரக்கத்தனங்கள்.
நெருப்பின் வாய்ப்பட்ட
மிச்ச சொச்சங்கள்
பிய்த்து எறியப்பட்ட‌
பறவைகளின் சிறகுகளாய்
கருகிய காய் கறி பழக்குப்பைகளாய்
வெந்தும் வேகாத கட்டிட எலும்புக்கூடுகளாய்
வாகனங்களின்
உடைந்த விலாஎலும்புகளோடு
கிடந்தன.
"மாட்டிக்கிட்டயா?
என் துப்பாகிக்குறிக்கு
உன் குறியைக்காட்டு"
என்ற‌
அசுரக் குரல் எச்சங்கள்
அந்த நகரை ஆபாசங்களால்
கறைப்படுத்திக்கிடக்கின்றன.
அந்த
அசிங்கங்களை
சுத்தப்படுத்தாதீர்கள்.
அப்படியே கிடக்கட்டும்
இவை தான்
இனிமேல் நம்
அற்புத மியூசியங்கள்.
சதி எனும் உடன் கட்டை "ஏற்றும்"
மதச் சடங்கை
நம் ஜனநாயகத்தாய்க்கு
நடத்திப்பார்க்கும்
பாசிச வல்லூறுகளின் நிழல்
நம்
தலை நகரை
கற்பழித்துவிட்டுப் போய்விட்ட‌
சுவடுகளின்
அநாகரிக‌ மியூசியங்கள் இவை.
உலகத்தீரே
உங்கள் சுற்றுலாத்தினவுகளுக்கு
எங்கள்
வாக்குப்பெட்டிகளின்
சிதறிய குடல்களும் ரணங்களும்
குருதி கொப்பளிக்கக்கிடந்து
காட்சி தருவதை
கண்டு மகிழ வாருங்கள்.
கை நிறைய டாலர்களோடு
வாருங்கள்.
அதிதி தேவோ பவ.

=============================================

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக