சனி, 30 ஏப்ரல், 2022

உள்ளே வெளியே விளையாட்டு

 உள்ளே வெளியே விளையாட்டு 

(காஸ்மாலஜிக்கல் பஸ்ஸில் )    ( 1 )

-----------------------------------------------------------------------

ருத்ரா


 

நகர்ச்சியியல் விண்வெளி (டைனாமிகல் யுனிவர்ஸ்) என்பது நாம் இருக்கும் விண்வெளி அதாவது பிரபஞ்சம் ஆகும். அப்படியென்றால் பெருவெடிப்புக்கு முந்திய இந்த விண்வெளி நகரச்சி  இயல் உடையதா? இல்லையா? என்பது பெரும் கேள்விக்கு உரியதாகும்.விண்வெளியின் பெருவெடிப்புக்கு முன் "காலமும் வெளியும்" ஏறக்குறைய சுழியம் அல்லது சுழியத்தை தோட்ட நிலையில் தான் இருக்கும் என்பது எல்லா இயற்பியல் வல்லுநர்களின் கருத்தாகவே உள்ளது.அவர்களில் "பிரான்ஸ் டைக்" என்ற இரட்டையர்களின் கோட்பாடான "நிலைத்த விண்வெளி" (ஸ்டேடிக் யுனிவர்ஸ்) என்பது மிகவும் புகழ் பெற்ற கோட்பாடாகும்.பொதுவாக ஈர்ப்பின் அடிப்படையில் இந்த பிரபஞ்சங்கள் இருவகைப்படும். ஒன்று ஈர்ப்பு அல்லது உள்நோக்கி ஓடும் பிரபஞ்சம் (இம்ப்ளோஸிவ் ).இன்னொன்று "வெளியே நோக்கி ஓடும் பிரபஞ்சம்"(எக்ஸ்ப்ளோசிவ்). ஆமாம்!இது என்ன "உள்ளே வெளியே" விளையாட்டு போலிருக்கிறதே என்று நீங்கள் வியப்படைவது இயல்பான ஒன்று தான்.இன்னும் கணித முறையில் சமன்பாடுகளைக்கொண்ட "கருந்துளை"யும் அதன் வடிவகணிதமும் (பிளாக் ஹோல் ஜியாமெட்ரி) இதில் மைய அச்சாக இருக்கிறது.பிரபஞ்சம் ஒன்றல்ல.பல அடங்கிய ஒரு கொத்துவெளி பிரபஞ்சங்களே (மல்டிவெர்ஸ்) இருப்பதாக இயற்பியலாளர்கள் கருதுகின்றனர். என்ன பிரபஞ்சம் என்பது ஒரு முந்திரிக்கொத்தா? 

பார்க்கலாம் ..சுவைக்கலாம்.

----------------------------------------------------------------------------------------------------------------------------





















f

செவ்வாய், 26 ஏப்ரல், 2022

என் சிலேட்டுப் பலகை.

 என் சிலேட்டுப் பலகை.

_________________________________ருத்ரா

ஒண்ணாப்பு படிக்கையிலே
கங்காருக்கு குட்டி போல்
வகுப்பில்
என்னைத் தொத்திக்கொண்டிருக்கும்.
இது.
எங்களுக்கு
இந்த கறுப்பு ச‌ன்னல் தான்
முதல் வெளிச்சம் தந்தது.
அரைகால் டவுசரும் சட்டையுமாய்
இதனோடு நாங்களும்
தமிழுக்கு
ஒரு புதை பொருள் ஆராய்ச்சி
நடத்தியிருக்கிறோம்.
அ ஆ என்று ஒலித்து அதை
எட்டு கோணல் ஓவியமாய்
எழுதி எழுதி
அந்த சிலேட்டுப்பலகையில்
செதுக்கி இருக்கிறோம்.
"வால் எயிறு ஊறிய"
என்று
நாளைக்கு கல்லூரியில்
சங்கத்தமிழை
படித்துக்களிப்பதை
அன்றே ஒத்திகை பார்த்திருக்கிறோம்.
அந்த கருப்புக்குச்சி எழுத்துகளை
அழித்து அழித்து
மீண்டும் எழுதுவதைத்தான்
சொல்கிறேன்.
இந்த எச்சிலில்
எந்த மின்னலும் தெறிக்கவில்லையே!
எந்தக் கரும்பும் இனிக்கவில்லையே.
இந்த சிலேட்டு
ஒரு நாள் கூட்டுப்புழுவைப்போல்
உடைந்து போன போது தான்
அதன் ஓட்டைகள் வழியே
பட்டாம்பூச்சிகள்
பறப்பது தெரிந்தன.
ஏன் அந்த தெளிவான வானம் கூட‌
கிழிந்து போயிற்று.
அப்புறம் தான் தெரிந்தது
கிழிந்தது வானம் அல்ல‌
என் இதயம் என்று.
அந்த எதிர் பெஞ்சு எலிவால்
இளமையின் பூரிப்பில்
புலி வாலாய் மாறி
என்னை
துரத்து துரத்து என்று
துரத்தியது.
வயதுகளின் பூப்புக் காடுகளில்
மூழ்கிய கனவுகள்
பற்றி எரியத்தொடங்கியது.
சில நேரங்களில்
பளிச்சென்ற காலைச்சூரியனின்
சிதறலில்
பனித்துளிகள் கூட‌
ஏழுவர்ண ரோஜாவை
என் மீது எரிந்தது.
என் சிலேட்டுப்பலகையில்
இன்னும் அவள் சிரிப்பின்
கிராஃபிக்ஸ்
என்னை சல்லடையாக்கிவிட்டது.
சட்டை உரித்த பாம்பாய்
என்னை உரித்துக்கொண்டு
நான்
எங்கோ ஊர்ந்துகொண்டிருக்கிறேன்
அந்த‌
மாணிக்கச்சிரிப்பைத்தேடி.
___________________________________
03.09.2021

ஞாயிறு, 24 ஏப்ரல், 2022

ஒரு நினைவு கூரல்..

 


ஒரு நினைவு கூரல்..

______________________________ருத்ரா 

("கொரானா" ஏற்படுத்திய காயங்கள்)



ஒரு நினைவு கூரல்..

அல்ல‌

இது நம் நினைவு கீறல்.


எஸ் பி பி

--------------



தேன்குரலின் உயிர்க்கூடே.

உன் உயிரை கழற்றிக்கொண்டு

நீ போய்விட்டாய்.

ஆனால் அந்த இனிமைக்குரல்கள் எனும்

தேனீக் கொடுக்குகளின்

"கொட்டு"மழையில்

அந்த இன்ப வலி 

பொறுக்க முடியவில்லையே!


விவேக்

------------------------------------


நகைச்சுவை அரசே!

உன் காமெடி கலாய்ப்புகளுக்கு

மொத்த காப்பி ரைட்டும் 

எனக்கே வேண்டும்

என்று 

அள்ளிக்கொண்டு போய்விட்டானோ

அந்த மரணக்காரன்.

உன் இடம் இன்னும் இங்கே

வெறுமை தான்.

உன் சிரிப்பு 

ஒரு பல்கலைக்கழகம் அல்லவா!

இங்கே கூச்சல்கள்

குப்பை சேர்த்துக்கொண்டிருக்கின்றன.



"வசந்த்"எனும் அங்காடி அரசன்

----------------------------------------------------


தவணை முறையில்

எங்கள் 

வாழ்க்கைவசதிகளுக்கு

வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்தாய்.

உன் டிவியில்

கம்பீரமாய் அந்த 

சுழல் நாற்காலியில் அமர்ந்து

காட்டுவாயே!

தமிழ் நாட்டு "வணிக வளாகத்தின்"

"அலெக்சாண்டர் தி கிரேட்"அல்லவா நீ!

மகத்தான மனிதர் அந்த‌

காமராஜர் அவர்களின்

மிச்ச சொச்சத்து புகழில்

தமிழ் நாட்டை நிமிர்த்திவைக்க‌

நிமிர்ந்து நின்றாயே .

"பை ஒன் கெட் ஒன் ஃப்ரீ"

என்ற சந்தை உத்தி கூட 

உன்னிடம் மாறிப்போனது.

"பை ஒன் கெட் ஆல்  ஃப்ரீ"

என்று 

உன் சிரிப்பு வெள்ளத்தை 

விட்டுச் சென்றாய்.


------------------------------------------------------------------------------




கயங்களி முளியிடை . . . .

 

கயங்களி முளியிடை. . . .

------------------------------------------------------


கயங்களி முளியிடை பரலிய நனந்தலை

வெய்ய கரிய அழல் சுரம் ஆர்ப்ப‌

அம்பு மூசி மன்னுயிர் சிதைக்கும்

ஆறலை கள்வர் ஆறு தோறும் நிரம்ப‌

பொறிகிளர் பொறையிடை கடாஅத்தந்து

சிலம்பு பொரிய இமிழ்க்கும் ஆரிடை 

பொலங்கிளர் ஒண்ணுதல் நெஞ்சுள் வரிக்கும்.

பொருள்செய் வேட்டல் மறைவ போன்ம்

இறைமுன் நெகிழும் அவள் வளையூடு

நெரிக்கும் நினைவொடு வேர்த்தே மயங்கும்.

முட்புதல் புழையுள் முயல் படுத்தன்ன‌

முரணிய நெஞ்சத்துக் குணில் பாய் முரசின்

அறை படு தலைவ.ஓம்பு மதி ஊக்கம்

நின் வென்றி மாட்டே இந்நெடு விழி நோக்கும்.


____________________________________

"சொற்கீரன்"


பொருள் தேடி சென்ற தலைவன் வழியில் எதிர்ப்படும்

துயர்களால் தளர்வுறும்போது ஊக்கப்படுத்துவதாகத் 

தோன்றும் தோழியின் கூற்று.

_____________________________________________

சங்கநடை செய்யுட்கவிதை.

(எழுதியது பகல் 1.23 மணி.24.04.2022)

சனி, 23 ஏப்ரல், 2022

நூலகம்

 நூலகம்

________________________________

ருத்ரா


(உலக புத்தக தினம்)



கணினி யுகம் உன்னை

தூசிக்கிடங்கில் தள்ளி விட்டிருக்கலாம்.

புத்தகக்கண்காட்சிகளில்

உன் உயிர் புதுப்பிக்கப்படுகிறது.

புத்தகப்பக்கங்களை 

தொட்டு மலர்ச்சியுறும் 

அந்த விரல்கள் 

கைபேசிகளிலேயே

முடங்கிப்போய்விடுகிற‌

"பரிணாமத்தின்"ஒரு முடக்குவாதம்

எப்படி ஏற்பட்டது.

பல்கலைக்கழகங்களையே

விழுங்கிப்புடைத்திருக்கும்

ஆன் லைன் நூலகங்களால்

ஆலமரம் போன்று விழுதூன்றி நிற்கும்

மெய்யான நூலகங்கள்

நூலாம்படைகளால் நெய்யப்பட்டுக்

கிடக்கின்றன.

"ஒரு புத்தகத்தை வெளியிட்டுக்காட்டு

அப்போது தான் உனக்கு பட்டம்"

என்று ஒரு சட்டம் தேவைப்படுகிறது.

அப்போது தான் இந்த 

புத்தகங்கள் எனும் காகித சடலங்களிலிருந்து

நம் வரலாற்றின் உயிர்ப்பான‌

நூற்றாண்டுகளை

நிமிர்த்தி வைக்க முடியும்.

வாழ்க புத்தகங்கள்!

_______________________________________________________




வியாழன், 21 ஏப்ரல், 2022

"தூளியிலே ஆடவந்த..."

"தூளியிலே ஆடவந்த . . . ."

__________________________________ருத்ரா


இசையால்

தாலாட்டுபவர் தான்.

ஆனால்

அந்த ஒப்பீடு மூலம்

குழந்தையையும் கிள்ளிவிட்டு

தாலாட்டுப‌வர் அல்லவா

ஆகி விட்டார்

இசையின் ராஜா!


__________________________ 

செவ்வாய், 19 ஏப்ரல், 2022

இளையராஜா

 


இளையராஜா

_____________________________________ருத்ரா


கர்நாடக சங்கீதம் என்றால்

மும்மூர்த்திகளின் பேர்கள் தான்

உச்சரிக்கப்படும்.

தமிழ்த் திரையிசை என்றால்

இளையராஜா என்ற பெயர் மட்டுமே

இசைஞானியாய் தமிழ் நாட்டில்

எதிரொலிக்கும்.

இப்போதும் அவர் எதிரொலிக்கிறார்.

ஒப்பீடு என்ற ஒரு 

செயலைத்துவக்கி

இரு முனையிலும் 

எதிர் முனையாக இருப்பவர்களை

"வச்சு செஞ்சிருக்கிறார்" என்று

சொல்லவேண்டும்.

இப்போது பட்டி தொட்டியெல்லாம்

இந்த "டக் ஆஃப் வார்"

நெருப்புப்பொறிகளோடு

பற்றியெரியத்தொடங்கும்.

இப்போது தமிழர்கள்

முகமூடி போட்டுக்கொண்டிருப்பவர்கள்

யார் என்று புரியத்தொடங்கி இருப்பார்கள்.

2024 ஆம் பாராளுமன்ற தேர்தலுக்கு 

ஒரு புரிந்துணர்வையும் விழிப்புணர்வையும்

இது ஏற்படுத்திவிடும்.

டாஸ்மாக் டம்ளரில்

கோ மூத்திரம் கூட‌

நல்ல "சரக்கு"தான்

என்று 

விற்கும் ஒரு சந்தை யுத்தி தான் இது.

சிக்கிமுக்கிக்கல்லில்

ஒரு தீ யை "ஜனிக்க வைத்து"

ஜனனி ஜனனி என்று

பாடுகிறார் என்று நாம் எடுத்துக்கொள்வோம்.

இசை நுணுக்கங்களை ரகசியமாய் 

"நோட்ஸ் " எழுதுவதில் இவர் வல்லவர் தானே.

அந்த இமயத்துக்கு இந்தக்கூழாங்கல் இணையாகுமா?

இந்த உட்கருத்தை கசியவிட்டிருக்கிறார் என்பதே உண்மை.

"போடா போடா புண்ணாக்கு 

போடாதே தப்புக்கணக்கு"என்ற பாடலுக்குதான் 

இந்த ஒப்பீடு இசையமைப்பு.

இவர்கள் வேண்டுமானால்

நான்கு வர்ணத்தில் மத்தாப்பு 

கொளுத்துவார்கள்.

நமக்கு தெரியும் தீயின் வர்ணம் 

ஒன்றே தான்.

பிறப்பொக்கும் "ஒன்றே குலம்"தான்.

இசை ஞானி

இசை "ஞானி"தான்.


__________________________________________________________

திங்கள், 18 ஏப்ரல், 2022

அமுத பாரதி

 அமுத பாரதிக்குள்

ஒரு அமில பாரதி

கனன்று கொண்டிருக்கிறார்

என்று 

கவிதை காட்டுகின்றது.

அவருக்கு என்

சிரம் தாழ்ந்த பாராட்டுகள்.

________________________________ருத்ரா


இதோ கவிதை:

சலவைச் சட்டைக்குள் 
சல்லடை பனியன்.

வெள்ளி, 15 ஏப்ரல், 2022

அழகர் எதிர்சேவை

அழகர் எதிர்சேவை

__________________________________ருத்ரா


"வாராரு!வாராரு!

அழகர் வாராரு!..."

இனிய கொட்டு முழக்கோடு

பல்லக்கு வந்து விட்டது.

அழகர் மலையானை

தரிசிக்க‌

கூட்டம் அலை மோதுகிறது.

சஞ்சீவி மலையையே பெயர்த்த 

அனுமன்

இங்கு வேடத்தில்

"கை நீட்டி" "கை நீட்டி"

கேட்டுக்கொண்டிருந்தார்.

விளம்பர வண்டிகள்

"பை ஒன் கெட் டூ"என்று

ராட்சத முகத்தில் பல் காட்டி

சிரித்தது.

சினிமாப்பாட்டு 

டண் டணக்கா..டண் டணக்கா

என்றது.

கொத்து கொத்தாய் பலூன்கள்

வண்ணங்கள் காட்டின.

அந்த விற்பனையாளன்

தன் பசியையும் கனவுகளையும்

அந்த பலூன்களில் அடைத்து

வைத்திருந்தான்.

ஓரத்தில் நின்று

பல்லக்கில் செல்லும்

அழகனைப் பார்த்துவிட‌

அல்லாடினேன்.

தள்ளு முள்ளுவில்

என் கைபேசிக்காமிராவும்

நானும் ஒன்று பட முடியவில்லை.

கள்ளழகன் முகம் தெரியவே இல்லை.

எந்த கோணத்தில் பார்த்தாலும்

பல்லக்கை வியாபித்துக்கொண்டு

நூல் சகிதமாய்

பஞ்ச கச்சத்தில்

அவர் தொந்தி தெரிந்தது.

இல்லாவிட்டால்

பின்புறம் தெரிந்தது.

பிரம்மம் மட்டும் இன்னும்

தெரியவே இல்லை.


__________________________________________ 

புதன், 13 ஏப்ரல், 2022

தலை நிமிர் தமிழா!


தலை நிமிர் தமிழா!

_____________________________________ருத்ரா


தமிழன் என்று சொல்லடா.

கண்ணாடி பார்த்துக்கொண்டாவது 

அன்றாடம் நீ சொல்லடா.

உன்னையே மரக்கடித்து

கல்லும் மண்ணும் ஆகி நீயும்

காற்றாய் மறையும் முன்

விழித்து எழு தமிழா நீ

விழித்து எழு தமிழா நீ!

பிலவ போய் சுபகிருது..

இன்னும் 

அந்த சனாதன உச்சிக்குடுமி 

வாத்தியார் போட்ட‌

சமஸ்கிருத "இம்போசிஷனையா"

உச்சரித்து உச்சரித்து 

எழுதிக்கொண்டிருக்கிறாய்?

தலைகுனிந்து நீ

இதை நீ கிறுக்கிக்கொண்டிருந்தது 

போதும்!

தலை நிமிர் தமிழா!

தமிழ் "வருஷம்" வந்ததென‌

இந்த "சித்திரையை" நீ

எப்படி ஒலித்தாலும் 

நித்திரை தான் அது உனக்கு.

விழித்தெழு தமிழா விழித்தெழு!


____________________________________


செவ்வாய், 12 ஏப்ரல், 2022

சீர்பெறும் தமிழணங்கே!

 சீர்பெறும் தமிழணங்கே!

______________________________________ருத்ரா



கால ஓட்டத்தில் காணாமல் போன 

ஆரியம்  வென்ற தமிழணங்கே!

ஆரியம் என்பதன் வேர்ச்சொல்லே

"ஆர்" என்பதை ஆரும் அறிவர்.

"ஆர்" எனும் சிற்றுளித் தமிழே 

உங்கள் ஆரியப்பெருங்கடல் அறிவீரோ?

எங்கள் உரிச்சொல் "ஆர்" ஈன்ற‌

சொல் உரிந்து சொல் பிறந்ததே

உங்கள் ஆரியம் அறிவீரோ? 

தமிழால் உண்டு தமிழில் செரித்த‌

தமிழே தானே சமக்கிருதம்!

எத்தனை எத்தனை சொல்லோ

சமக்கிருதம் ஒலித்தபோதும்

அதன் வேரொலியில் கிளை நீட்டி

அதனை தழைக்க வைத்ததும்

தமிழே!தமிழே!அறிவீரோ?

மக்கள் வழக்கில் உயிரொலியில்

ஊடிநிற்கும் வலுவின்றி

முறிந்து வீழ்ந்ததே சமக்கிருதம்.

அயல் ஒலிச்சுமையும் பளுவாகி

அழிந்து போனதே சமக்கிருதம்.

தமிழின் ஊற்றும் உயிரும்

உலகம் எங்கும் சுடர் பூக்கும்.

மந்திரம் என்று ஒலிகிளப்பும்

தன்னலக்கூட்டம் மட்டுமே இங்கு

தறி கெட்டு ஆடி தலையில் தாங்கும்

கூச்சல் மொழியே சமக்கிருதம்.

காலம் வென்று ஞாலம் வென்று

"இருந்த பெரும் தமிழணங்கே!"..

என்றும் நீயே இங்கு 

வென்று காட்டி நின்று காட்டும்

செம்மொழிச் சீர்பெறும் தமிழணங்கே!

வாழி!வாழி! நீ நீடூழி வாழி நீ!


_______________________________________________________



ஞாயிறு, 10 ஏப்ரல், 2022

நடு கற்கள்




நடு கற்கள்

====================================ருத்ரா



அது எந்த வருடம்?


ரெண்டாயிரத்து சொச்சம்


இருபத்தஞ்சா?


முப்பத்தஞ்சா?


ஏதோ ஒன்று விடுங்கள்.


மதுரையிலிருந்து


ராமேஸ்வரம் செல்லும் பாதை


அல்ல அல்ல..


ஃபோர் வே ரோடு...


மைல் கற்களில்


இந்தி மட்டுமே..


வழியில் ஒரு ஸ்வச்சாலய்க்கு இறங்கி


இயற்கைக் கடன்..


மீண்டும் காரில் ஏறும் போது


அந்த மைல் கல்லை


இந்தியை எழுத்துக்கூட்டி படித்தேன்.


கீ...ழ..டி..


என்ன தமிழனின் தொன்மை


அடையாளம் அல்லவா?


காரை நிறுத்திவிட்டு


அதைச்சுற்றி பார்க்க நினைத்தேன்.


அங்கே இருந்த


தகவல் பலகைகளின் 


இந்தியில்


என்னென்னவோ எழுத்துக்களை


வடாம் பிழிந்து வைத்திருந்தார்கள்.


வரவேற்பு தோரணத்தில் பெரிய இந்தி எழுத்து.


அதன் கீழ் ஆங்கிலத்தில்.


"திஸ் சைட் இன்டிகேட்ஸ் அவர் "ஆர்யன்" சிவிலிசேஷன்"


ஐயகோ!


தமிழின் தொன்மை


வடமொழிக்குள் தொலைந்து போய் விட்டதோ?


காரில் பயணம் தொடர்ந்தேன்.


ராம..ராம..ராம....ராம....


ராமேஸ்வரம் வரைக்கும்


அந்த மைல்கற்களில் எல்லாம்


ரத்தம் வழிந்தது.


தமிழன் தமிழை மறந்ததால்


அவன் பயணத்தின் மைல்கற்கள் எல்லாம்


இங்கே


அவன் அழிவை  அடையாளப்படுத்தும்


நடுகற்களாகவே தோன்றின!


திடுக்கிட்டேன்.


................


.....................


சட்டென்று விழித்துக்கொண்டேன்.


தூக்கத்திலிருந்து தான்!


இந்த‌ வரலாற்று திருத்தங்களிலிருந்து


நாம்


எப்போது விழித்தெழுவது?


==================================================

06.04.2017


எதைப்பற்றி. . . . .

 எதைப்பற்றி.. . . . 

=======================================ருத்ரா


எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...
அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...
வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...
எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று....


============================================
22.12.2016

பரவாயில்லை

 பரவாயில்லை

_____________________________________ருத்ரா



எனக்கு சௌகரியமாய் இருக்கிறது

கண்களை மூடிக்கொள்வதும்

கருத்துகளின் கதவுகளை 

அடைத்துக்கொள்வதும்.

ஆளும் நாற்காலிக்கு வந்த பின்

மக்களின் எண்ணம் 

எங்கோ தொலைந்து போய் 

சீட்டுகளின் எண்ணிக்கை மட்டுமே

எல்லாம் போதிக்கிறது.

ராமனின் கோதண்டத்தை விட‌

அது 

கூர்மையாகி விடுகிறது.

தர்ம சாஸ்திரங்கள் 

நியாய அநியாயங்கள்

மக்களையெல்லாம்

நசுக்கும் சூத்திரங்களாக‌

மாறுகின்றன.

அதைப்பற்றி சிந்திக்காமல்

அவர்கள் கிண்டித்தரும் அல்வாவை

தின்பது படு சுகமாக இருக்கிறது.

மாடுகள் போடும் சாணியில்

நம் சரித்திரங்களைக் குழைத்து

பூசி மெழுகும் அலங்கோலங்களை

அழகாய் அனுபவித்துக்கொண்டிருப்பது

இன்னும் சுகமாய் இருக்கிறது.

திடீரென்று 

ஒரு பளிங்கு மேடை அமைத்தார்கள்.

இனி உங்கள் வாக்குகள் பத்திரமாக‌

இதன் அடியில் சமாதியாக‌

சாம்பிராணி சூடம் தீபம் சகிமாதாக‌

பூஜிக்கபடும் என்றார்கள்.

ஆகா! 

திவ்யம்! திவ்யம்!

என்று கன்னத்தில் அடித்து

கும்பிட்டுக்கொண்டேன்.

கண்ணை மூடிக்கொண்டு அந்த ரிஷிகளை

தியானிப்பது

மிகவும் சுகமாக இருந்தது.

எல்லாம் சௌகரியமாய் இருக்கிறது.

கண்களைப்பிடுங்கிக்கொண்டால் கூட‌

மிக சௌகரியம் தான்.

எதையும் பார்க்கவேண்டியதில்லை.

கூக்குரல் கேட்கிறது.

கை கோத்து மனம் ஒப்பி 

கூட இருந்தவர்கள்

வேறு ஏதோ ஓதுகிறர்கள்.

அது ரிக் இல்லையாம் யஜுர் இல்லையாம்

அதனால் அவர்கள்

செதில் செதில்களாய் 

சிதைக்கப்படுவது 

கேட்கிறது.

பரவாயில்லை.

எல்லாம் சௌகரியமாய் இருக்கிறது.

என்ன?

மானுடம் கசாப்பு செய்யப்படுவது

தெரியவில்லையா?

நீதி காக்கப்பட வேண்டாமா?

"ஒரு மண்ணும் வேண்டாம்

எல்லாம் சௌரியமாய் இருக்கிறது.

போங்கள்..

சப்பளாக்கட்டைகளில்

சுகமாக சௌரியமாக நாம்

நசுங்கிபோய்விடலாம்.

பரவா...நஹீம்

என்ன?

அதான் அய்யா

பரவாயில்லை...


_____________________________________________

10.03.2022

வியாழன், 7 ஏப்ரல், 2022

அப்பா

 


அப்பா

=========================================ருத்ரா




தந்தையை நினைவு கூர்வது

வைரத்தை எப்போதும்

பட்டைத்தீட்டிக்கொண்டிருப்பதை போல் தான்.

ஒவ்வொரு ஆண்டும்

ஒரு கதிர் துடிப்பு.

இன்று நான் தந்தையாக இருப்பது

மிக்க மகிழ்ச்சி

எனக்கு இப்போது 

தந்தை இல்லாத போதும்.

கால வகுத்தல் வாய்ப்பாட்டில்

மிச்சம் விழாத எண் அல்லவா அவர்.

வகுக்க முடியாத "ப்ரைம் நம்பர்"அவர்.

ஒரு கோணத்தில் நாத்திகராய் நிற்பார்.

இன்னொரு கோணத்தில்

புராணங்களை

ஒரு கீற்று விடாமல்

இழை பிரித்துக்காட்டுவார்.

எங்களுக்கு படிப்பு வழங்கினால் போதும்

வேறு சொத்து எதற்கு என்று

பொருளாதாரக்கடலில்

நீந்த விட்டு 

ஆனால்

நம்பிக்கையின் கட்டுமரமாய்

கூடவே மிதப்பார்.

என் தந்தை பட்டங்கள் வாங்கியதில்லை.

பத்திரிகைகளின் பத்திகளில்

புரண்டு கிடந்ததில்

அவர் எங்களுக்கு ஒரு பல்கலைக்கழகம்.

தத்துவங்கள் கடவுளைக் கண்டுபிடிக்கும்

என்பது ஒரு சித்தாந்தம்.

என் தந்தைப் பேச்சைக்கேட்ட போது

தத்துவங்கள் கடவுளைச்சுரண்டும்

வெறும் சொற்கள் தான்.

சுரண்டி சுரண்டி

சிந்தனைச்செதில்கள் உதிர்ந்ததே மிச்சம்.

சிந்தனை மட்டுமே அங்கு மிஞ்சும்.

கடவுள் இல்லை என்பதே

அங்கு ஒரு புன்சிரிப்பாய் காட்டிநிற்கும்.

என் தந்தை சொன்னார்.

விபூதி என்பது

மனிதனை வெறும் வெட்டியானாய் ஆக்க‌

தரப்படுவதில்லை.

பயப்படாதே கடவுளைக்கண்டு கூட‌

என்பதே அதன் உட்கிடக்கை.

கடவுளே

வா உன்னைக்கண்டு பயப்படவும்

நான் தயார்.

அதற்காக சுனாமியையும் கொரோனாவையும்

வைத்து பூச்சாண்டி காட்டாதே.

நீ

என்ன அறிவின் ஒளிப்பிழம்பா?

இல்லை

அறியாமையின் முரட்டுத்திரையா?

எப்படி இருந்தாலும்

நீ எங்கள் எதிரில் வா.

வந்து 

உள்ளேன் ஐயா சொல்லு.

இல்லை நான் இல்லை என்று சொல்லு.

என் அப்பா 

இப்படியெல்லாம்

பாஷ்யம் சொல்லவில்லை.

ஆனாலும்

இல்லை என்று 

சொற்களில்

தூவிவிட்டுப் போய்விட்டார்.

எதை நான் இல்லை

என்று சொல்வது

என் அப்பாவையா?

கடவுளையா?

அப்பா இல்லை என்றால் கூட‌

அப்பா இருக்கிறார் என்று சொல்லும்

ஆத்திகன் நான்.

அப்பாவுக்கே கடவுள் இல்லை

என்று நான் தெரிந்து கொண்டபோது

நான் ஒரு நாத்திகன்.


================================================

28.06.2020 

புதன், 6 ஏப்ரல், 2022

புளிமாங்கனி

புளிமாங்கனி

_________________________________ருத்ரா



இந்த இறைவன் படைப்பில்

எல்லாம் இன்பமயம்.

காக்கைச்சிறகுகள் கூட‌

நந்த லாலாக்களின் 

கிச்சு கிச்சு மூட்டல்கள்.

தீக்குள் விரல் வைத்தால்

அவனை அவளாய் 

அல்லது 

அவளை அவனாய்

தொட்டு மகிழ்வுறும்

இன்பக்கடல் தான்.

எனக்குள் ஒரு இதயக்கூடு செய்து

அதற்குள்

அந்த இன்சிட்டுகளின்

ரெக்கைத்துடிப்புகளை

அடைத்து வைத்து

வான மண்டலத்தையும்

வடித்து வைத்த அவன் அல்லது அது

வாழ்க வாழ்கவே!

........

அந்தக்கட்டில் காலியாகவே கிடக்கிறது.

எத்தனை கோடி இன்பம் வைத்தாய்?

மூச்சு விட்டுக்கொண்டிருந்த‌

அந்த நம்பிக்கையின் சுவடு மட்டுமே

அங்கே!

"நியூரான் முடிச்சுகளின்

சினாப்டிக் ஜன்க்ஷனில் உள்ள‌

பர்கிஞ்சே செல்களுக்குள்ளும்"

ரத்தப்புற்று நோயாம்..

அந்தக்குரல் கீச்சுகளின் 

கடைச்சித்துளி வரைக்கும்

வயதுகளின் அந்த இளம்பக்கங்களுக்கு

இன்னும் முற்றும் எழுதவில்லை.

அப்படித்தான் அங்கே ஒரு 

விடியாத விடிவின்

யாப்பிலக்கணத்தோடு

தேமாங்காயும் புளிமாங்கனியும்

இன்னும் கூவிளங்கனியின் கூக்குரல் ஒலிக்க 

செய்யுள் துப்பிக்கொண்டு கிடந்தன!


_____________________________________________________

திங்கள், 4 ஏப்ரல், 2022

இன்று...

 இன்று...

______________________________________ருத்ரா



இன்று நாள் நல்ல நாள்.

நேற்று அந்த தந்திக்கம்பத்து சிட்டுக்குருவி

ஜோஸ்யம் சொல்லிவிட்டது.

மனசுக்குள் இந்த இன்பச்சுமையை

திணித்து திணித்து சுமையாக்கி

சுமப்போம் வாருங்கள்.

எல்லா நிகழ்வுகளுக்கும்

நாம் "சந்தோஷம்" என்றே பெயர் சூட்டுவோம்.

பாருங்கள்

நம் பாரங்கள் இலேசாகி விட்டன.

இன்றுகளின் 

முகமூடிகள் தான்

நேற்றுகளும் நாளைகளும்!

இப்போது

அந்த சுட்டெரிக்கும் கண்ணீர்த்துளிகள் 

கூட‌

நம் முகத்தின் எதிரே படலம் காட்டும்

மனத்திரையில்

நிறப்பிரிகை செய்து காட்டுகிறது.

புற ஊதாக்கதிர்களும் அகச்சிவப்புக்கிரணங்களும்

"சந்தோஷ"ப்பிசிறுகளை

மாலையாக்கி விட்டது.

அழுவதும் ஆனந்தம்.

ஆனந்தமும் அழுகை.

தீம் திரிகிட..தீம் திரிகிட..

அக்கினிக்குஞ்சுகளும்

அல்வா இனிப்புகள்.

சாம்பலாய் விழுவதிலும்

சண்பக‌ப்பூ பனித்துளியை 

சுமந்து நிற்கிறது.

விஞ்ஞானிகளின் "க்ராண்ட் யூனிஃபிகேஷன்"

இந்த எல்லா பிரபஞ்சங்களையும்

க்ரஷ் செய்து அதோ கோப்பையில் நீட்டுகிறது.

அந்த ஜனன மரண ரசம்

பஜகோவிந்த ரசமாய் மழைபெய்கிறது.

ஏமாந்து கொள்வதே பரம சுகம்.

அதுவே எல்லாவற்றையும் நனைக்கட்டும்.

அறியாமை அறிவை விழுங்கித்தீர்க்கட்டும்.

சுபம்..சுபம்..சுபம்!


______________________________________________________

தரிசனம்

 தரிசனம்

_____________________________________ருத்ரா



உன்னிடம் 

என் அழுகைகளை

கண்ணீர்ப்பூக்களாக்கி

மாலை தொடுத்துவிட்டேன்.

என் ஒப்பாரிகளை 

மந்திரங்கள் ஆக்கினார்கள்.

கும்பங்களில் நீர் நிறைத்து

நூல்கள் சுற்றி 

மாவிலைகளை தோய்த்து 

அந்த "பிரம்மனை"

அதில் கொண்டுவந்து விட்டோம்

என்று 

முழங்கி முழங்கிச்சொன்னார்கள்.

பாருங்கள் திவ்ய தரிசனம் 

என்றார்கள்.

அந்த நீரும் நிழல் காட்டியது

அழுகின்ற என் முகத்தை 

அசைந்து நெளியும் பிம்பமாய்.


__________________________________________

ஞாயிறு, 3 ஏப்ரல், 2022

மீண்டும் தொடங்கு...

 மீண்டும் தொடங்கு...

____________________________________________ருத்ரா



ஆம் எல்லாம் போட்டாச்சு.

பேட்டரி கட்டை..நவச்சாரம்

பாம்புராணி பல்லி ..ஏன் 

பாம்பும் கூடத்தான்.

எல்லாம் கொதிக்கிறது.

ஆவி நிலையில் 

இந்த உலகத்தையே துண்டு துண்ட்டாக்கி

மசாலா சேர்த்து..காய்ச்சி

இறக்கி வடிகட்டி 

அறுசீர் கழிநெடிலடி 

ஆசிரிய விருத்தம் 

இல்லை சிந்தியல் வெண்பா

இல்லை அகவல் பா துண்டுகள்

இதெல்லாம் வேண்டாம் என்றால்

நவீனத்துவம் பின் நவீனத்துவம்

மாயாவாதம் கலந்து பிசைந்த‌

தனிமை இருட்டின் யதார்த்தம்

சமூக விடியலின் விழியல் யதார்த்தம்

கிறுக்குப்பிடித்த ஹாலூசினேஷனின் 

கலர் கலர் குமிழிகளுடன்

சிக்மண்ட் ஃப்ராய்டின் அகக்குகை பிறாண்டல்கள்

இன்னும் என்ன 

எல்லாம் இந்த காகிதத்தில் 

பேனாவைக்கொண்டு

வாந்தியெடுத்து...

இந்த துன்பியல் கசாப்புகளைத்தாண்டுவது...

ஓ! மனிதா!

உன் பரிணாமத்தை மீண்டும் 

தொடங்கு....!


___________________________________________

சனி, 2 ஏப்ரல், 2022

அலைகள்

 

அலைகள் 

------------------------------------------------------ருத்ரா 



கிலு கிலுப்பை 

அம்மா கொடுத்தாள் 

நானும் குலுக்கினேன்.

நான் புரிந்து கொண்டேன்.

அது நான் இருந்த 

அவள் கர்ப்பப்பை.

அதன் ஒலிகள் 

அத்தனையும் வலிகள்.

இவர்களின் 

சிற்றின்பங்களையும் 

பேரின்பங்களையும் 

மொழி பெயர்க்க வந்த

மொழியற்ற 

ரேடியோ அலைகள்.


---------------------------------------------------------


வெள்ளி, 1 ஏப்ரல், 2022

மயிலே! மயிலே!

FACE BOOK BY SRI BALAVINAYAGAM SUBRAMANIAN.  "THANKS FOR THE LINK"



Có thể là hình ảnh về ngoài trời
மிக அழகு.
தயவுசெய்து எங்கள் குழுவில் சேருங்கள்: Interesting Life
 
அசலைக் காட்டு
 
இந்த மொழிபெயர்ப்பை மதிப்பிடவும்
நீங்கள் மற்றும் 1 நபர்
1 கருத்து
விரும்பு
கருத்துத் தெரிவி
பகிர்
1 கருத்து
  • E Paramasivan Paramasivan
    மயிலே! மயிலே!
    இறகு போடு!
    நீ போடாவிட்டால்
    நான்
    ஒன்றும் உன்னைப்
    பிய்த்துப்பிடுங்க மாட்டேன்.
    எனக்குத் தெரியாதா என்ன?
    அது இறகு அல்ல‌
    கண்கள் மொய்த்த கற்பனையின்
    கவிதைப்பிஞ்சு என்று!
    ______________________ருத்ரா
    • விரும்பு