ஒரு கண்ணீர் அஞ்சலி
________________________________________
எங்கள் அன்பிற்கினிய
திரு ஹரிஹர சுப்பிரமணியன் அவர்களே!
மண்ணுயிர் நீத்து
விண்ணுயிர் கலந்த
மனிதர் குல மாணிக்கமே!
உங்கள் இழப்பு
எங்களிடையே
உள்ள வெளியை எல்லாம்
வெற்றிடம் ஆக்கி விட்டது.
கனிவான பேச்சு
பொருள் பொதிந்த உரைவீச்சு
இவற்றின் உருவகம் அல்லவா
நீங்கள்.
தாமிரபரணி என்னும்
அந்த பளிங்குநீரின்
ஒரே தொப்புள் கொடியை
பிடித்துக்கொண்டு நாம்
ஊஞ்சல் ஆடுவதாக கூறுவீர்கள்.
ஏனெனில் எனது ஊர் கல்லிடைக்குறிச்சி.
உங்களைப்பார்த்து விட்டு வரும்போதெல்லாம்
எனது ஊரான அந்த கல்லிடைக்குறிச்சியின்
மண்ணையும் கன்னடியன் வாய்க்கால்
நுரைப்பூக்களையும் அள்ளிக்கொண்டு
வருவதாகவே ஒரு பிரமை.
அந்த தாமிரபரணி ஆற்றுத் தண்ணீர் எல்லாம்
இன்று கண்ணீராகத் தெரிகிறது.
அந்த தண்ணீரை
நேசிக்கும்
சுவாசிக்கும்
உபாசிக்கும்
ஒரு பக்தனை
இன்று இழந்து விட்டதே!
நம் ஜனனத்தையும் மரணத்தையும்
வேதத்தால் முடிச்சு போட்டுக்கொண்டு
ஒரு ஆழ்நிலைத்தியானத்துள்
அடங்கிக்கொள்வதே வாழ்க்கை எனும்
ஒரு தத்துவத்தை நீங்கள்
எப்போதும் சுடர் விட்டுக்கொண்டிருப்பீர்கள்.
எங்களோடு நீங்கள் பழகிய அன்பான
ஒரு பிரம்ம சூத்திரத்தின்
அந்த மூன்றெழுத்துச்சூத்திரம்
எப்போதும் இதுவே தான்.
"கே ஹெச் எஸ்"...
உங்கள் அன்பு கெழுமிய வாழ்த்துக்கள்
எங்களுக்கு எப்போதும் இதில்
மழையாக பொழிந்து கொண்டிருக்கட்டும்!
_________________________________
அன்புடன்
இபியெஸ் எனும் இ.பரமசிவன்.
(எல் ஐ. சி ஓய்வு)
15.03.2021
_____________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக