ஆளுக்கொரு புத்தகம்
வண்ண முகப்புகளில்
அச்சடித்துக்கொண்டு..
ஆயிரம் ரெண்டாயிரம் ரூபாய்கள்
என்று
புள்ளிவிவரங்களின் பூச்சிகள்
பக்கத்துக்கு பக்கம்
படபக்கின்றன.
பொருளாதார பரிமாணங்கள்
இப்படி கொச்சைப்படுத்த படுவதில்
தர்மக்கூட்டணியும் அதர்மக்கூட்டணியும்
போட்டி போடுவதைப்பார்க்கையில்
சமுதாய மனிதன் என்னும்
ஒருவன் அந்த பக்கங்களில்
எள்ளி நகையாடுவது
நமக்கு கேட்கிறது.
வேதனையான வேடிக்கை தான்.
கூச்சமிகுதியில்
அந்த ஜனநாயகம் கூட
கண்களை மூடிக்கொள்கிறது
அப்பட்டமாய் ஆடையே இல்லாமல்
நிர்வாணமாய் நின்று கொண்டு.
இலவசம் என்பதை
உருட்டி உருட்டிப்போட்டு
பகடை விளையாடுவதும் கூட
ஒரு போராட்டவடிவம் ஆகிவிட்டதா
என்ன?
இதை கேலி செய்யும் மையக்கும்பல்களோ
எப்படியாவது
இந்த காக்கைகள் வாய்திறந்து கத்தி
வடையை
அந்த சுரண்டல் நரிகளுக்கு
கொடுத்துவிடட்டுமே என்று
நாக்கில் நீர் ஊறிக்காத்திருக்கின்றன.
மக்களின் உள்ளோளி உள்ளொலி எல்லாமே
இந்த ஜனநாயகம் தானே!
இதற்கும் கொஞ்சம் மீசை முளைத்தால் என்ன?
அந்த ஒவ்வொரு மயிர்க்காலும்
வாளும் ஈட்டியுமாய்
கவிழ்ந்து கிடக்கிற
புறநானூற்றை புரட்டிப்போட்டு
கிளர்ந்தெழட்டுமே!
வாக்காளர்களே..
இந்த போலிகள் உங்களை
பிச்சைக்காரர்கள் என்று
சீண்டிக்கொள்ளட்டும்.
கவலை இல்லை.
சமுதாயத்தின் சமநீதி கூர்மையுற்று
அவர்களின் புரட்டுகளை
குத்திக்கிழிக்கட்டும்.
"விலைஇல்லா"சர்வாதிகாரங்கள்
உங்கள் விலைமதிப்பற்ற
ஜனநாயகத்தை
காவு வாங்கிவிடாமல்
அந்த "கணிப்பொறியின்"
குருட்சேத்திரத்தில்
குந்திக்கிடக்கும் அந்த
இருட்டுக்கண்டத்தை
கண்ட துண்டமாய் வெட்டி வீழ்த்துங்கள்.
தமிழ் வெல்லட்டும்.
மனித நியாயங்கள்
சுடர் வீசட்டும்.
____________________________________________
ருத்ரா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக