எந்திரன் 3
______________________________
ருத்ரா
சினிமாவில்
ஜனநாயகம் அல்லது தர்மம்
வெற்றி மாலை சூடும்போது
வில்லன்கள்
அடித்து நொறுக்கப்படுவதை
பார்க்கிறோம்.
நமது மனஎழுச்சி உயரே
விசில் அடித்துக்கொண்டு
பறக்கிறது.
அந்த ரெண்டேமுக்கால்
மணிநேரத்துக்குள்
நம் மத்தாப்புகளை எல்லாம்
கொளுத்தி விட்டுவருகிறோம்.
நம் மனங்களில் எதோ ஒரு
விடியலின் கீற்றுகள்
தையல் போட்டு விட்டது
என்று
பூரிப்பு கொள்கிறோம்.
ஆனால் இதோ
எதிரே ஒரு எந்திரம்
விழி துருத்திக்கொண்டு
கணிப்பொறியாய்
நிற்கிறது.
என்ன வேண்டுமானாலும்
நடக்கலாம்.
கண்ணுக்குத்தெரியாத
ஒரு கிளிஜோஸ்யக்காரன்
ஒரு கிலி சோதிடம் சொல்லி
நம் வயிற்றை கலங்கடிக்கலாம்.
இங்கே வெற்றியும் நம்பிக்கைகளும்
நாம் குவித்து வைத்துக்கொண்டபோதும்
அந்த மாய எந்திரம்
எதுவும் செய்யும்.
எதுவும் நடக்கும்.
கை நிறைய மசோதாக்களை
குவித்து வைத்துக்கொண்டு
நம் அடிப்படை ஜனநாயகத்தையே
அடி சரக்காய் துவம்சம் செய்யும்
சாதி மத வெறியின் சம்மட்டி கொண்டு
நொறுக்கி விடும் சித்தாந்தங்கள்
வவ்வால்களைப் போல்
நம் பார்லிமெண்ட் மண்டபங்களில்
தொங்கிக்
கொண்டிருக்கின்றனவே!
ஓ! வாக்காளனே!
அந்த சினிமா எந்திரனை
நீ அசை போட்டுக்கொண்டு
இந்த "ஹேக்கர்களின் சாம்ராஜ்யத்து"
கணினி எந்திரனுக்குள்
இரையாகி விடாதே!
எப்படியும்
நம் மக்களின் ஜனநாயகத்தை
ஒரு சமதர்ம சமநீதியில்
தழைக்கச்செய்ய
நீ
தளர்ந்து விடாதே!
"விடாமுயற்சியே" உன் எந்திரம்.
செவ்வாய்க்கோளின் அந்த
"பெர்சிவியரன்ஸ்" எந்திரன் போல்
அந்த மொட்டைப்பாறைகளையும் துருவிப்பார்.
எல்லாவற்றையும்
சீராக்கி விட
ஒரு சீற்றம் கொள்!
உன் அரசியல் நுண்ணறிவின் கூர்மையில்
சூழ்ச்சியாளர்கள் தொலைந்து போகட்டும்.
வெற்றி உனதே!
________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக