அந்தி
____________________________ருத்ரா
என் பேனாவைக்கொண்டு
உன்னைப்பற்றி
எத்தனை தடவை எழுதியிருப்பேன்?
அப்போதெல்லாம்
எனக்குத்தெரியாது
அந்தப் பேனா
இந்த வானத்திலும் கடலிலும்
தோய்த்துக்கொண்டு வந்திருக்கிறது
என்று.
எனக்குத்தெரியாது
சூரிய்ன் எனும் சோப்புக்குமிழியை
தன் கன்னம் புடைக்க ஊதும்
சிறுவன்
கொஞ்சம் மூச்சு விட்டுக்கொண்ட போது
ஒளி அந்த செம்பஞ்சுக்குழம்பை
கடலில் கலந்து "தாளிக்க" ஆரம்பித்து விட்டது
என்று.
இன்று என்னவோ ஏதோ
ஒரு "க்ளுக்" சிரிப்பொலி
நாணத்தின் படுதாவுக்குள்
மறைந்து கொண்டு
இந்த ரங்கோலியை என் முகம் மீது
பீய்ச்சுகிறது
என்று துணுக்குறுகின்றேன்.
யார் அது?
ஓ! ஞாபகம் வந்து விட்டது.
ஆம்..
அன்று என் எதிரே
குனிந்து கொண்டே வரும் அந்த
பெண்மீது
நான் மோதிவிடக்கூடாதே
என்று
விலகியே நடந்ததில்
அந்த விளக்குக்கம்பத்தோடு
மோதிக்கொண்டதைக்கண்டு தான்
அந்த "க்ளுக்".
அது சரி!
அது எப்படி சூரியனில்
இப்படி ஒரு கள்ளப்பார்வையை வைத்து
என் கண்களை கூச வைக்கிறது.
என் மனம் பிசைகிறது
அந்த அலைகளைப்போல!
சில தருணங்களில்
அந்த இருளோடு கண்ணாமூச்சி
ஆடப்போய்விடுவாயே!
உன் வண்ணச்சிறகுகள் அந்த
இமை படபடப்புகளில்
என் இதயத்தோடு நுழைந்து விடும்போது
நாமே நமக்குள் அஸ்தமனமாகி
உதயமும் ஆகி
இந்த உலகம் முழுவதும்
ஒவ்வொரு கட்டங்களாய்
பாண்டி விளையாடுவோம்!வா!
_____________________________________________