வெள்ளி, 30 அக்டோபர், 2020

கரையில்லாத கடல்

 கரையில்லாத கடல்

________________________________________ருத்ரா


அது என்ன?

அலைகள் பொங்கினால்

அதில் உன் சிரிப்பு தெரிகிறது.


ஒதுங்கும் கிளிஞ்சல்களும் நண்டுகளும்

காகிதம் தேடி செல்லவில்லை.

அன்று நாம் நடந்த‌

அப்புறம் அழிந்த அந்த‌

அமுதச்சுவடுகளை கவிதை எழுத.

அந்த மணல் படுகையே

மாணிக்க ஓலைகள்

அவைகளுக்கு.

எழுதி எழுதி மறையும் அந்த வரிகளை

கவ்வி கவ்விச்சுவைக்கும்

அலைத்திவலைகள்.


அந்த கடல் எனும் துணிவிரிப்பில்

உன் மயிலிறகு முந்தானை.

அந்திகள் தோறும் 

மருதாணிக்குழல் பிதுக்கிய உன்

மனவெளிச்சித்திரங்கள்

எத்தனை? எத்தனை?


எனக்கு எப்போது உன் இதழ்கள் 

பிரியும்?

ஆம் என்று.


காத்திருக்கிறேன்.

களைப்பு எனக்கு இல்லை.

கால் கடுக்க நிற்கிறேன்.

கொஞ்சம் கவனி என்கிறது

காலத்தின் செங்குத்துக்கோடு.

குதிரையின் பிடறிமயிர்களாய்

மணலோர நுரை வருடல்களில்

கிச்சு கிச்சு மூட்டும்

தருணங்களுக்கும் தெரியும்

உன் சொல் உதிர்வு ஒவ்வொன்றும்

கோடி யுகங்களின்

விழுதுகள் போல் நீளும் என்று.


சரி என்று

கெட்டி மேளங்களுக்குள்

நாம் முடங்கிக்கொள்ளத்தேவையில்லை.

கிழிந்த தவில் முதுகுகளுக்கு

தையலும் போட வேண்டியதில்லை.


தூரத்து அடி வான விளிம்பு

ஒரு உதடு.

தளும்பும் நீர்ப்பிம்பம்

இன்னொரு உதடு.

அந்த முத்தத்தின்

அதிர்வு

துல்லியமாய்

என்னை நிமிண்டுகிறதே.

அது போதும்.

மொத்தமாய் இந்த பிரபஞ்சம் முழுதும்

நரைத்துப்போகட்டுமே.

காதல் தீயில்

காதல் குளிக்கிறது.

கோடி நிலாப்பிறைகள்

குஞ்சம் கட்டி கவரியாய் குழைந்து

ஒரு மௌனத்தின் மேல்

ஒரு மௌனத்தை முலாம் பூசி

கலித்தொகை காட்டுகிறது.

கடல் தெரியாத கரையில் உட்கார்ந்து

கரையில்லாத கடலில் நீந்துகிறோம்.

காட்சிகளின் "சவ்வூடு" பரவலில்

வெறுமை எனும் "ஹோலோகிராஃபி"

நம் உள்ளங்களை இழையூட்டம் செய்கிறது.

அந்தக் காதலை

நாம் இருவரும் 

பார்த்துக்கொண்டே இருக்கிறோம்.

பார்த்துக்கொண்டே இருந்தோம்.

பார்த்துக்கொண்டே இருப்போம்.


_____________________________________________________









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக