சனி, 17 அக்டோபர், 2020

"உன்னையே நீ எண்ணிப்பார்"

 "உன்னையே நீ எண்ணிப்பார்"

====================================ருத்ரா


நம் மைல்கற்கள்

களைத்து விட்டனவோ?

இனி அந்த 

குழியைத்தவிர வேறு

எதற்கும்

இனி நடப்பதற்கு மைல்கற்கள்

நடுவதற்கும் அவசியம் இல்லையோ?

மனித மலர்ச்சியின் 

பயணம் இதற்குமேல்

நடைபோட இயலாமல்

மனிதம் தன்

சுவாசத்தையெல்லாம் 

இழந்து விட்டதோ?

அதோ பாருங்கள்

முக கவசங்கள் மற்றும் 

கவச உடைகளின்

உடைந்து போன 

செயற்கை சுவாசக்கருவிகளின்

குப்பைமேடுகள் எல்லாம்

இமயமலைகளையும் விழுங்கி விடும்

உயரத்துக்கு

சென்று விட்டனவே!

அஞ்சத்தேவையில்லை.

பயங்களை உதறி விடுங்கள்.

கொரோனாவுக்குள்

ஒரு ரகசிய சங்கீதத்தின்

சுருதி ஒன்று

மனிதனுக்கு

மெல்லிதாய் கேட்கத்தான்

செய்கிறது.

ஓ! மனிதா!

என்னை விடவும் கொடியதான‌

மூடத்தனத்தின் அரசியல்

உன்னை மூடிக்கிடக்கிறதே!

என்னால்

உன் கூட்டுக்குள்ளேயே 

முடங்கிக்கிடந்தாவது

அந்த ஒளியை

அந்த ஒலியை

அந்த விஞ்ஞான நுட்பத்தை

நீ

புரிந்து கொள்ள முயலக்கூடாதா?

வானம் அளந்து

பிரபஞ்சங்களையெல்லாம் 

உரித்துக்கொண்டு

கிளர்கின்ற அறிவின் ஒளி

உன் மீது

புதிய வெளிச்சத்தை படரவில்லையா?

பூஜை நைவேத்தியங்கள்

பக்தர்கள் இன்றி எளிமையாக‌

நடந்தன.

பிரம்மோற்சவங்கள் எல்லாம்

அப்படியே

பிரம்மங்கள் இன்றியே

இன்னும் 

எளிமையாக நடந்து கொண்டிருக்கின்றன.

ஆம்.

கடவுள்கள் இன்றி

அவற்றின் பேரால் பொய்மை போற்றும்

சாதி மதங்கள் இன்றி

காழ்ப்புகள் கழன்று

இந்த உலகம் எளிமையாக‌

சுழன்று கொண்டிருக்கிறது.

மனிதா!

உன் மூளையை எல்லாம் 

கழற்றி 

கொரோனாவாய் ஆகிய 

இந்த அடகுக்காரனிடம்

கொடுத்துவைத்திருக்கிறாய்.

ஏதோ ஹெல்மெட்டைக் கழற்றி 

கொடுத்து வைத்திருப்பது போல.

போதும்!

நீ பயந்து பயந்து செத்தது.

எப்போது

உன் உயிர்களை

சிந்தனையால் சாகடிக்கவே முடியாத‌

உன் அறிவின் செல்களை

இந்த "அடகிலிருந்து" மீட்டுக்கொள்ளப்போகிறாய்?

இதற்கு 

அசலும் வேண்டாம் வட்டியும் வேண்டாம்.

"உன்னையே நீ எண்ணிப்பார்"

உன் சமுதாயத்தையே நீ எண்ணிப்பார்"

அது போதும்.


============================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக