செவ்வாய், 27 அக்டோபர், 2020

செதில் செதில்களாய்

 செதில் செதில்களாய்

__________________________________________ருத்ரா


ஆயிரம் ரெண்டாயிரம்

கவரில் செருகி வந்து கொடுத்தார்கள்.

அப்போதும் போட்டோம்.

தாலிக்கு என்று

அரைபவுன் தங்கம் கொடுத்து

கெட்டிமேளம் கேட்காத 

பிய்ஞ்சு போன காக்கைச்சிறகுகள் போன்ற‌

குடிசைக்குள் எல்லாம்

மங்கலம் ஒலிக்க வைத்தார்கள்

அப்போதும் போட்டோம்.

லேப் டாப்

ஆடு மாடு கோழி...

பரிவர்த்த‌னையை இனி

"எந்த ரூம் போட்டு வடிவேலு பாணியில்

தரலாம்" என்று 

தருகிறார்கள்.

தருவார்கள்.

அப்போதும்

போடுகிறோம்

போடுவோம்

போட்டோம்.

நம் மொழியின் உயிர்

பறவைகள் கொத்திக்குதறும்

கோழிக்குடலாய் 

வீதியில் வீசியெறியப்பட்டுக்

கிடக்கிறதே.

மொழியை அழிக்க 

இனத்தை அழி

என்று 

ஒரு கசாப்புக்கார‌

சாணக்கியத்தனத்தோடு

"இதோ பாருங்கள் பொன் முலாம் பூசிய‌

சவப்பெட்டிகள்" என்கிறார்கள்.

எல்லாம் உங்களுக்கே என்கிறார்கள்.

நம் தமிழுக்கு இன்னும் ஒரு கடல்கோளா

இந்த நாசப்பேரலைகளால்?

நூற்றிமுப்பத்திமூணு அடி உயரம் கொண்ட

நம் அய்யன் வள்ளுவனுக்கு

காவி பூசி ருத்திராட்சம் போட்டு

கீழே சலவைக்கல்லில்

"வால்மீகி ரிஷி"என்று

பெயர் பொறிப்பார்களோ நாளை?

சுற்றுலா என்று

அதையும் பார்க்க கியூவில் டிக்கட் வாங்க‌

காத்திருக்கப்போகிறாயா

என் உயிரினும் இனிய தமிழனே!

உன் முதுகில் உன் மரணமா?

இது எப்படி?

உன் விழியில் உன் பார்வை இல்லை.

உன் மொழியில் உன் உயிரும் இல்லை.

அதோ வருகிறார்கள் 

நம் வரலாற்றுச்சருகுகள் சர சரக்க 

மிதித்துக்கொண்டு!

ஏற்கனவே தட்டி விட்டோம் பட்டனை

தொட்டுக்கொடுத்தால் 

போதும்

என்கிறார்கள்.

கணிப்பொறியே கூசுகிறது

இப்படி ஒரு கேவலமான பொய்யை

என் வயிற்றுக்குள்

செருகுகிறீர்களே என்று.

தினம் தினம் நீங்கள் பார்ப்பது

உதிக்கும் சூரியன் அல்ல!

நம் தமிழின் 

ரத்தக்கண்ணீர்ப்பெருக்குகள்

அவை.

ஈசல்களே உங்கள்

சிறகுகளை இன்னுமா

கோடி கோடியாய் குவித்து

ஒரு மயானதேசத்தின்

மணிக்கொடியை பறக்கவிடப்போகிறீகள்.

இவை

ஓட்டுக்கள் அல்ல..ஓட்டுக்கள் அல்ல‌

தேசத்தின் ஜனநாயகத்தை

செதில் செதில்களாய் ஆக்கும்

வெட்டுகள்..வெட்டுகள்

ஆம்.

வெட்டுகளே தான்.


_________________________________________






கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக