செவ்வாய், 27 அக்டோபர், 2020

செவிமடுப்பீர் நண்பர்களே

 செவிமடுப்பீர் நண்பர்களே

________________________________________________ருத்ரா


இன்று சொற்கள் எங்கும் எதிலும் தூவிக்கிடக்கின்றன.தொலைக்காட்சிகளில் செய்திகளாய் வழக்குரைகளாய் "அரசியலே ஒரு சாக்கடை" என்று அரசியலுக்குள் இன்னொரு அரசியலாய்

பல ஆளுமைகளின் சொற்பொழிவுகளாய் நிரம்பி வழிகின்றன.நம் ஜனநாயக மண்டபத்தில்

தூண்கள் எல்லாம் கரையான்களால் நச்சுப்பூச்சிகளால் பாழ்படுத்தப்படுகின்ற‌ன.அதில் எங்கோ

ஒரு செய்தித்துளியாய் யாரும் அந்த மூலைக்கு போகவிடாத படிக்கு மிரட்டப்பட்ட ஊடகங்களால்

மறைக்கப்பட்டு கிடக்கிறது இது.அது தான் தேர்தல் கணிப்பொறி மோசடி.ஆதாரம் இல்லை என்பார்கள்.புகை இல்லை அதனால் தீ இல்லை என்பார்கள்.இல்லாவிட்டால் தீயும் இல்லை புகையும் இல்லை என்பார்கள்.மற்ற அன்றாட செய்தி இரைச்சல்களைக்கொண்டு இதை மழுங்கடிப்பார்கள். ஒரு பேச்சுக்கு வைத்துக்கொள்வோம். முழுக்க முழுக்க உண்மையாய் இது இருந்த போதிலும் ஒரு விழுக்காடு தான் உண்மை இருப்பதாகவே வைத்துக்கொள்வோம்.அப்படி எனில்

அந்த ஒரு விழுக்காட்டு உண்மை வெளியே வராமல் போனால் இவர்களின் சட்டத்திற்குப்புறம்பான ஆட்சி பலப்பல ஐந்தாண்டுகளையும் விழுங்கிக்கொண்டு முன்னேறத்தானே செய்கிறது.அது சர்வாதிகாரத்தின் உச்ச கட்டம் அல்லவா.அது வெளியே தெரியவே கூடாது.பல படிகளையும் தாண்டி

அத்தி பூத்தாற்போல் இது வரை ஆட்சி செய்தது தவறு என்று ஒரு பெரிய தீர்ப்பே வந்து விட்ட போதும்

அந்த சர்வாதிகாரத்தின் கடந்துபோன நச்சு நிழல்களை அழித்துவிடுகிறார்களா என்ன? 

இதற்கு என்ன தீர்வு?

வரும் காலங்களில் இந்த ஜனநாயகம் தூய்மை பெறுமா? இல்லை ஏற்கனவே செய்தது தானே.ஆளும்

எந்திரத்தின் எல்லா நட்டுகளும் போல்ட்டுகளும் நம் கையில் தானே என்று அதே அரக்கன் புனிதமான‌

மஞ்சள் குங்குமதோடு சிம்மாதனத்தில் நிரந்தரமாய் கோவில் கொண்டுவிடுவானா? என்பதே

நமக்கு இப்போதைய பில்லியன் டாலர் கேள்வி ஆகும்.ஏனெனில் நமக்கு கோவில் பூஜைகள் அர்ச்சனைகள் கும்பாபிஷேகங்கள் இவையெல்லாம் தானே வாழ்வாதாரம் என்று பிம்பம் கட்டி வைக்கப்பட்டிருக்கிற்து.ஐநூறுக்கும் மேல் சீட்டுகள் ஜெயிக்கும் "மாந்த்ரீக தாந்த்ரீகங்கள்"எல்லாம் செய்து தரும் செல்லப்பிள்ளைகளான கார்ப்பரேட்டுகள் உதவிக்கு வரத்தயார்.சித்தாந்த வலிமை இல்லாத கட்சிகளின் ஊழல் சுக போகங்களும் இந்த அநீதிக்கு கவரி வீச காத்திருக்கின்றன.

இனி என் செய்வது?

அன்றைய தொழிற்புரட்சி நம் முகத்தை அகத்தை எல்லாம் மாற்றியது.

நாம் யதார்த்தங்களுக்குள் வந்தோம்.இன்றைய மின்னணுப்புரட்சியோ நம்மை நாமே ஏய்த்துக்கொள்ளும் ஒரு மாயாபஜார் என்னும் ஃபன்டாசி உலகத்தில் உலவ விட்டுக்கொண்டிருக்கிறது.

மொத்தமாய் சமூக மனமுறிவு உற்ற ஒரு மெய்மை என்ற பொய்மைக்குள் (வெர்ச்சுவல் ரியாலிடி) நம்மை தள்ளிவிட்டது.துர்நாற்றம் வீசுகின்ற வியர்வையின் உழைப்பு தான் உண்மையான நம் முகம் அகம் எல்லாம்.ஜிகினா அழகும் போலித்தூய்மையும் (ப்யூரிடானிசம்) தான் இன்னமும் நம்மை முடக்குகிறது.இது ஒரு பக்கம்....இன்னொருபக்கம்...


இளைஞர்கள் குத்தாட்டம் போடுகிறார்கள்.

சினிமாக் கதாநாயகர்களை தோளில் ஏற்றிக்கூத்தாடுகிறார்கள்.

இல்லத்தரசர்கள் இல்லத்தரசிகள் பஞ்சுமிட்டாய் போன்ற துணுக்கு செய்திகளில்

புரண்டு கிடக்கிறார்கள்.

சமூக ஊடகங்களும் சாணக்கிய ஊடங்களாய் மௌனித்து காய் நகர்த்துகின்றன.

வைக்கல்படப்புக்குள் விழுந்துவிட்ட இந்த "நீதி" எனும் ஊசியை

எப்படி இனம் பிரிப்பது?

நீதி தேவன் மயக்கம் என்பது கூட சரியாகாது.

நீதி தேவதையின் "கோமா"வில் கிடக்கிறது நம் அரசியல்கள் எல்லாம்.

நம் சிந்தனை தெளிவது எக்காலம்?

நம் சுதந்திரம் மீள்வது எப்படியோ?


===========================================================







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக