திங்கள், 4 ஜூன், 2018

ரஜனி அவர்களே (2)

ரஜனி அவர்களே (2)
==================================================ருத்ரா

அந்த மஞ்சள் பனியன் காரர்கள்
எய்தது
நம் சட்ட ஒழுங்கை காக்க‌
எய்த அம்புகளா?
அப்படியென்றால்
இங்கே ஏன்
ஜனநாயக பிதாமகர்
அம்புப்படுக்கையில் கிடக்கவேண்டும்.?
பாரத புத்திரர்கள் மீதா
இந்த குரூரமான குருட்சேத்திரம்?
ஜனநாயகம் எனும்
வெறும் பூச்சாண்டிச்சொல்லுக்கு முன்
"மனித உரிமை" என்றோ
"மக்கள் நலம்" என்றோ
ஒரு உயிர்மை பூசி நிற்கும்
கேள்விகள் முளைத்த போது
நம் சட்டத்தின் கண்கள் எல்லாம்
துப்பாக்கித்துளைகளின்
கண்கள் ஆகிவிடுகின்றனவே!
இது அயல் நாட்டு
வெள்ளைக்காரன் தந்திரம் மட்டும் அல்ல.
உள் நாட்டு வெள்ளைக்கார
மனு தர்ம சாஸ்திரமும் கூட.
காலா என்று
அட்டைக்கரி ஜனங்களிடம்
"கிம்பர்லிகளை" சுடரச்செய்வது தான்
படத்தின் நோக்கம் என்றால்
அந்த வியர்வை கரிக்கும்
"கரிகாலன்களின்"
நாடி நரம்புகளில் எல்லாம்
தமிழ் ரத்தம் தானே துடிக்கவேண்டும்.
அதற்குள் "ஒரு சுடுகாட்டின்" படப்பிடிப்பு
எப்படி வந்தது?
எங்கள் அன்பிற்கும் அன்பான
ரஜனி அவர்களே!
இது நிச்சயம் ஒரு "டப்பிங்க்" குரல் இல்லை
என்று தெரிகிறது.
காக்கிச்சட்டை என்பது
நம் பாரத தேசம் அல்லவா!
உங்கள் கொதிப்பின் நியாயம் புரிகிறது.
போராடும் உள்ளங்களில் கூட‌
உழைக்கும் வர்க்கத்தின்
ஒரு மகா பாரதப்போர் தான்
விஸ்வரூபம் காட்டுகிறது.
கார்ப்பொரேட்டுகளின்
"அரே கிருஷ்ணா..அரே ராமா"
பஜனைப்பாட்டுகள் அல்ல அது.
உங்கள் உள்மனத்தின் நெருப்பு
அந்த பாட்டாளிகளின் நீதிக்கு
ஒரு யாகம் என்றும் அறிவோம் நாம்.
அதில் சில மதவெறி மத்தாப்புகள்
தீப்பந்தங்கள் கொளுத்த முனைவதும்
நீங்கள்
புரிந்துகொண்டே ஆகவேண்டும்.
சமுதாய நீதி பரிணாமத்தின் மலர்ச்சியே
இந்த "போராட்டத்தின் ஆன்மீகம்" என்பதும்
நீங்கள்
புரிந்து கொண்டே ஆகவேண்டும்.


"காலா" கர்நாடகத்தில்
திரையிடப்படக்கூடாது என்பது
அடாவடியைத் தவிர வேறு அல்ல.
காடு அழித்து நாடு ஆக்கி
கரைஉயர்த்தி
அன்னை காவிரியின் காற்சிலம்புகளின்
நீர்ப்பரல்கள் ஒலிக்கச்செய்தவன் அல்லவா
அந்த மாமன்னன் கரிகாலன்!
ஆரியச்சேற்றினிலே
அழுந்திக்கிடக்கும் கன்னட சகோதரன்
ஒரு திராவிட உணர்வுகொண்டு
வீறிட்டு எழ வேண்டியவன் அல்லவா.
அவன்
ஒரு சதிக்கும்பலுள் அமிழல் ஆகுமா?

ஏழாம் தேதி
சரித்திரம் படைக்கட்டும்
ரஜனி அவர்களே!

==================================================================









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக