செவ்வாய், 12 ஜூன், 2018

ஒரு புதிய பயணம்


ஒரு புதிய பயணம் 
=============================================ருத்ரா 

தமிழா! தமிழா!
இப்படி உன்னை விளிப்பது 
உன் செவிகளுக்குள் 
மரத்துப்போயிருக்கலாம்.
ஆனாலும் 
உன் விடியலை காணும் வரை 
இந்த "இடியல்களே"
உன் குறிஞ்சிப்பண்!
ஓட்டுகள் இறைந்து கிடக்கும் 
உன் முட்டுச்சந்தில் 
உன்னை விலங்கிடக்காத்திருக்கும் 
இரைச்சல்களும் 
சாமிகளும் பூதங்களும் சாதிகளும் 
அதன் குண்டாந்தடிகளும் 
உன் தமிழ் மொழியை 
உருத்தெரியாமல் 
சிதைக்க காத்திருக்கின்றன.
உன்னைச்சுற்றி  வலம் வரும் 
நிழற்படத்தெய்வங்கள்
கண்களில் காமிராக்கள் 
மாட்டிக்கொண்டு 
சில "வசனங்களுக்கு"
டப்பிங் குரல் கொடுத்துக்கொண்டு 
இந்த சமுதாயத்தை 
பெயர்த்தெடுத்து 
உன் கையில் 
ஒரு ரோஜாவாய் மாற்றிக்கொடுப்பதாய் 
வாக்குறுதிகளின் மழை 
பொழிகின்றன.
"மாமூல்"அரசியல் கோடாங்கிகளோ 
கரன்சி சத்தங்களைக்கொண்டு 
கோட்டைக்கட்ட காத்திருக்கிறார்கள்.
தமிழா! தமிழா!
இந்த தடவையாவது 
நீ காந்தியின் புன்னகையை மட்டுமே 
பார்த்து 
புரிதல் கொள்வாய்!
இந்த ஜனநாயகம் 
போராட்டத்தின் நரம்புகளால் 
பின்னப்பட்டது என்று நீ 
புரிதல் கொள்வாய்.
தமிழின் செம்மை ஒளி துலங்க 
புறப்படுவாய் 
ஒரு புதிய பயணம்!

==================================================
கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக