புதன், 6 ஜூன், 2018

அப்பா என்றால்...

அப்பா என்றால்...
=============================================ருத்ரா

"அம்மா என்றால் அன்பு"
அப்பா என்றால் என்பு!
ஆம்
என் முதுகெலும்பே அவர் தான்!
இந்த குருத்தெலும்பு
ஓடும்போது ஆடும்போது
எங்கே முறிந்து விழுந்து இடுமோ
என்று
அணைத்து அரண் அமைக்க‌
உள்ளத்தால் உருக்கி வார்க்கப்பட்ட‌
எலும்புக்கூட்டமே அவர்தான்.

கண்ணீர் என்றால்
பூப்போல் கசங்குவாள் அம்மா!
அதை கருங்கற்கோட்டை ஆக்க‌
கற்றுத்தருவார் அப்பா!

வாழ்கையின் கரடுமுரடுகளில்
கால் பதிக்க வைத்து
அதன் கல்லும் முள்ளும்
தரும் புண்களை
தன் நெஞ்சில் ஏற்றுக்கொள்வார்.

நான் கல்வியின் உயரம் எட்டச்செய்ய‌
எந்த இமயத்துச்சிகரம் என்றாலும்
விரல் பிடித்து ஏற்றி
விண்ணையும் கூட அதிரவைப்பார்.

கோபமும் கடும் சொல்லும்
கொப்பளிப்பது உண்டு.
அது அவரது உயிரின் சீற்றம்.
என் உயிரும் உயர்வும்
காக்கப்படவேண்டும்
என்ற அவர் ரத்தமே
அப்படி லாவாவாய் உருகிப்பாயும்!

தந்தை சொல் போல்
மன் திறம் இல்லை!
நம் மனத்தை
அடி அடி மேல் அடி அடித்து
வார்க்கும் கலையே
அந்த மந்திரம்.
அப்பா!
விடுதலை வேண்டும் எனவும்
நாம்
நினைப்பது உண்டு!
அது
அவர் நுரையீரல் பூங்கொத்திலிருந்து
நம் உயிர்க்காற்றுத்துளிகளை
இழந்து விடுவதற்கு சமம்.

வாழ்க்கையின் கான்வாஸில்
என் தூரிகைகள்
தற்செயலாய்
தடுக்கிவிழுந்து தடுக்கி விழுந்து
இழையும் ஓவியத்துக்கு
அவரே "ஃபினிஷிங் டச்".

அவர் முடிந்து போனாலும்
என்னை எப்போதும்
ஒரு வெற்றிக்கு
ஆரம்பம் செய்துவைத்துக்
கொண்டே இருப்பவர்.

வாழ்வின்
என்
பந்தய ஓட்டங்களில்
"அப் ..அப்..அப்.."
எனும் என் "அப்பா"
உருவமாயும் அருவமாயும்
குரல் கொடுத்துக்கொண்டே இருப்பது
தெரிகிறது.
அதோ நிற்கும் அவர்..
என் அப்பா.
என் முதுகு வருடி
என் முகம் புதுப்பித்து
உதயத்துச் சூரியன் போல்
"புல்லை நகைஉறுத்தி பூவை வியப்பாக்கி"
நான் எழுதும் காகிதத்துள்ளும்
கால் பதித்து என் அருகே
நடந்து வருகின்றார்.

=====================================================
19.06.2016

1 கருத்து:

ruthraavinkavithaikal.blogspot.com சொன்னது…

மிக்க நன்றி நண்பரே!

கருத்துரையிடுக