செவ்வாய், 4 ஜூன், 2019

என்ஜிகே

என்ஜிகே
==============================================ருத்ரா


உண்மையில் இதற்கு
நகோகு என்று தானே
வைத்திருக்கவேண்டும்.
தமிழையெல்லாம்
நாம் ஆங்கிலத்தில் தான்
ஒலித்துக்கொண்டிருக்கிறோம்.
போகட்டும்


செல்வராகவன் இயக்கம்.
திறன் மிக்க சூர்யாவின் நடிப்பு.
இதற்குள்
அடைபடும் கதையோ
சல்லடையில் ஊற்றிய தண்ணீராய்
நழுவிவிடுகிறது.
ஒரு சினிமாவின்
உண்மையான நடிகன்
யார் என்றால்
கதை...கதை.. மட்டுமே.
இது மாதிரி கரைவேட்டி அரசியல்..
அதற்குள்ளிருந்து
சத்யராஜ் மாதிரி ஒரு நாகராஜ சோழன்
அவதாரம் செய்வது
அப்புறம்
ஏதாவது ஒரு சண்டைக்காட்சி.
இதற்கு இடையில்
குத்தாட்டப்பாடல்களுடன்
காதலை கொச்சைப்படுத்துவதையும்
இது தான் ட்ரெண்டி என்பது போல்
சாதிப்பது...
இந்த "அரச்ச மாவு"அரைக்கும் உத்திகளை
வைத்துக்கொண்டு
திரைப்படங்களில்
இலக்கியத்தனமாக விருது பெறும்
எச்சில் ஊறல்களையும்
வைத்துக்கொண்டு என்ன செய்வது?
கார்ப்பரேட் என்றால் ஏதோ
ஏலியன் என்று
அதன் சுரண்டல் மிக்க உள்ளடக்கத்தை
நீர்த்துப்போக வைத்து விட்டு
சினிமாத்தனமான வில்லன்
ஒருவனை விஸ்வரூபம் செய்து
பிலிம்குள்ளேயே ஒரு பிலிம் காட்டும்
வித்தையைத்தான் இயக்குனர்
திறம்பட செய்கிறார்.
என்ஜிகே என்றால்
ஏதோ அதிவேக ரயில் எஞ்ஜினை
எதிர்பார்க்கவைத்துவிட்டு
வெறும் "ரேக்ளா ரேஸ்" விடுவது போல்
ஒரு ஏமாற்றத்தை தான்
இப்படம் தந்திருகிறது.
இருப்பினும்
நீயா? நானா? என்பது போல்
சூர்யாவோடு
ரகுல் ப்ரீத் சிங்கை
உரச விட்டிருப்பது போன்ற‌
விறு விறு காட்சிகள்
செல்வராகவனின் முத்திரைகள் தான்.
சூர்யாவின் மாமூலான மசாலா நடிப்பை மீறி
அரசியல் அக்கினியின் கொழுந்துகள்
அவருக்குள் ஒரு
வெப்பத்தை கர்ப்பமாக்கியிருக்கிறது
இப்படம்.
இருப்பினும் வெறும் "லாம்" தான்.
அதாவது
படத்தை பார்க்க"லாம்".
அவ்வளவு தான்.

============================================================




எதைப்பற்றி...






எதைப்பற்றி...
=======================================ருத்ரா

எதைப் பற்றி கவலைப்படுவது?
அல்லது எழுதுவது?
இதோ மூச்சிறைக்கும் ஏக்கவிழுதுகளின்
இறகுப்பேனாவில்
கிறுக்கத்துவங்கினேன்.
இளம்பிராயத்தின் இடுப்பு அரைஞாண் கயிறுகள்
திடீரென்று ஒரு நாள்
மின்னல் கயிறுகள் ஆனபோது...

அந்த பூச்சி மயிர்களின்
மீசை வரிசை
திடீரென்று
ஏதோ ஒரு வானத்தின்
ஏதோ ஒரு விண்மீன் கண்ணடிப்புகளில்
பிரளய அலைகளாய்
புரட்டி போடும்போது...
வெறும் கூழ்ப்பூச்சியும் சிறகுமாய்
இருப்பதை
"பட்டாம்பூச்சியாய்" ஆக்கி
தன் பகல்கனவுகளின்
ஹார்மோன் எழுச்சிகளை
அதில் "பிக்காஸோ" ஓவியக்கூடமாக்கி
பிரமை தட்டிப்போய் கிடப்பது...
எதற்கு
இப்படி வார்த்தை ஜாலங்களைக்கொண்டு
என்னைச்சுற்றி
ஒரு "கோக்கூன்"கட்டிக்கொண்டு...
சட்டென்று
புதிய சிறகுகளைக்கொண்டே
பழைய சிறகுகளை முறித்துத் தள்ளிவிட்டு
ஒரே சொல்லில்
உயிரோடு எனக்கு
பளிங்கு சதையில் பொன் குழம்பு ரத்தத்தில்
கல்லறை கட்டிக்கொண்டேன்
சாக அல்ல‌
சாகாமல் சாவதை
ஒத்திகை பார்க்க..
காதல் என்று....

============================================
22.12.2016

ஞாயிறு, 2 ஜூன், 2019

வட போச்சே!

வட போச்சே!
======================================ருத்ரா

இப்படிச்சொல்லி
உங்களை கலாய்க்கிறார்களே
தினமலர்க்காரர்கள்...
எங்கள் அன்பான அதிமுகவே!

அந்த அமைச்சர் பதவியை வைத்து
இன்னும் உங்களுக்கு
தூண்டில் எறிகிறார்கள்.
நம் தமிழின் பொங்கு மாப்பெருங்கடலை
"இந்து" மகா சமுத்திரமாக்கி
நம்மை
சாதி மதங்களின் கொட்டாங்கச்சியில்
குறுக்கப்பார்க்கிறார்கள்.
திராவிடக்கோட்டையின்
குறுக்குச்சுவர்கள்
விரிசல் விழுந்ததையே இன்னும்
விழா எடுத்துக்கொண்டிருக்கிறார்கள்
அந்த ஆதிக்க மொழிக்காரர்கள்.
திமுகவும் அதிமுகவும்
தமிழ்ச்சுடரில் ஒரே நெருப்பின்
கொழுந்துகள் தானே.
இனந்தெரியாத ஒரு இனக்காழ்ப்பில்
அன்று சொல்லப்பட்ட
தீயசக்தி எனும் சொல்லை
உங்களுக்குள்
இன்னும்  சொக்கப்பனை
கொளுத்திக்கொண்டிருக்கிறீர்களே!
அதில்....இன்று
தமிழையே எரித்துச்சாம்பலாக்க‌
கிளம்பியிருக்கிறார்கள்
தமிழ்ப்பகைவர்கள்.
இ.வி.எம்முக்குள்
என்ன இருந்தது?
என்ன இருக்கிறது?
என்ன இருக்கும்?
இதுவும்
அந்த கீதை  நாயகன்
கிருஷ்ணனுக்கே தெரியும்.
அப்படி இருந்தது எல்லாம்
நன்றாகவே இருந்தது.
அப்படி இருக்கிறது எல்லாம்
நன்றாகவே இருக்கிறது.
அப்படி இருக்கப்போவதும்
நன்றாகவே இருக்கும்.
அந்த வாக்கியங்களில்
மரத்துப்போன நமக்கு
குருட்சேத்திரத்தின் கூரிய
அம்புமுனைகள்
நம் ரத்தத்தை ருசிப்பதும் கூட
இன்னும் உறைக்கவில்லை.

இவர்களின்
சொக்கட்டான் உருட்டலில்
ஜனநாயகத்துக்கு அது
"அரக்கு மாளிகையா?"
அறத்தின் மாளிகையா?"
"பட்டன்" தட்டிய
வியாசர்களுக்கே  வெளிச்சம்.

==========================================================







இளையராஜா அவர்களே

இளையராஜா அவர்களே
============================================ருத்ரா

உங்களுக்கு எங்கள்
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
இசைக்கு நீங்கள் ஒரு ஞானி
என்று
இசை ஞானியாக அழைக்கப்படுகிறீர்கள்.
ஆரம்ப காலங்களில்
சமுதாய ஏற்றத்தாழ்வுகளை
எதிர்த்து பாடல்கள்
முழங்கிக்கொண்டிருந்தீர்கள்,
அப்புறம்
சினிமா என்ற மாயைக்குள்
புகுந்தபின்னே
ஞானியாகி விட்டீர்கள்.
அதுவும்
ஜனனி ஜனனி என்று
கண்ணை மூடிக்கொண்டு
உருக்கமாக படத்தொடங்கியதும்
ஞானி என்ற பெயரே
உங்களுக்காக ஏற்படுத்தப்பட்ட‌
பெயர் மட்டும் தான் என‌
நினைக்கத்தொடங்கி விட்டீர்கள்.

யாரோ சொன்னது போல்
நீங்கள்
இசைப்பெருங்கடல் தான்.
நானா இசையமைத்தேன்?
நான் எதுவுமே
இசை அமைக்க வில்லை
என்று
ரமண ரிஷி எனும் ஆவிக்குள்
புகுந்து
கோவணம் கட்டாத குறையாய்
தத்துவங்கள் பேச முற்பட்டீர்கள்.

இசைக்கு கால கட்டங்கள் உண்டு.
நீங்கள் இப்போது
ஒரு கால கட்டத்தில் இருக்கிறீர்கள்.

சங்கீத மும்மூர்த்திகள்
தண்பபாணி தேசிகர்
பாபநாசம் சிவம்
ஜி ராமநாதன்
கே வி மகாதேவன்
வெங்கடராமன்
ராஜேஸ்வர ராவ்
மதுரை சோமு
சுந்தராம்பாள்
மெல்லிசை மன்னர்
ஏன் உங்கள் குருவான‌
ஜி கே வெங்கடேஷ்
என்று எத்தனயோ
இசை ஞானிகள்
இசை ஞானிகள் என்ற
பெயர் இல்லாமலேயே
இசைக்கடலைக் கடைந்து
அமுதம் எடுத்து இருக்கிறார்கள்.
இந்தி இசை உலகில்
இதைப்போல் இன்னும்
அற்புதமான பட்டியல் இருக்கிறது.
ஆனால்
நீங்கள் மட்டுமே
அந்த சிவன் மாதிரி
அமுதோடு நஞ்சையும் சேர்த்து
எடுத்தீர்கள்.
அதாவது
அந்த காப்புரிமை பிரச்னைகள் தான்.
இசைக்கடல்
என்னவோ திடீரென்று வற்றி
ஒரு கொட்டாங்கச்சிக்குள்
அடைந்து கொண்டதோ என்று
ரசிகர்கள் சஞ்சலப்பட்டுப் போனார்கள்.
உங்களைப்பார்த்து தான்
இந்தக்குயிலும்
காக்கையும்
மற்றும் ஏப்பமும் இருமலும் செருமலும்
இன்னும் கடல் அலைகளும் கூட‌
தங்கள் காப்புரிமையைப்பற்றி
குரல் கொடுக்க ஆரம்பித்து விடுமோ?
தெரியவில்லை.
கால கட்டங்கள்
உங்களை தாண்டிக்கொண்டு
நகர்ந்து விட்டன.
உங்கள் பக்கம் ஆயிரம் நியாயங்கள்
இருக்கின்றன.
இருப்பினும்
அந்த "இனிய ஒலியின் அதிர்வு எண்கள்"
ஆகாயத்துக்குள் ஆகாயமாக‌
ஆகி விட்ட பிறகு
அந்த "நாதப்பிரம்மத்துக்கு"
இப்படி சன்னல் கதவுகளை சாத்தலாமா?
இந்த மின்காந்தத்தை
உங்கள் மணிப்பர்சுக்குள்
வைத்துக்கொள்வதில்
எங்களுக்கும் மிக மிக சந்தோஷமே.
நீங்கள் ஞானியா? ஞாநியா?
தெரியவில்லை.
ஞாநி ஆகிவிட்டீர்கள் என்றே தெரிகிறது.
அதில் அந்த ஞாநியின்
சமுதாயப்பார்வையின்
சீற்றமும் இருக்குமேயானல்
நீங்கள் இசைஞாநியும் தான்
என்பதில் ஐயம் ஏதும் இல்லை.
உங்கள் உரிமைக்குரல் வாழ்க!
உங்கள் உறவுக்குரலும் வாழ்க!
நூற்றண்டு எல்லாம் தாண்டிய‌
இசையின் பெரு யுகமாய்
நீங்கள் நீடூழி நீடூழி வாழ்க!!

=================================================================






நம்பிக்கை என்னும் ஒரு அவநம்பிக்கை.

நம்பிக்கை என்னும் ஒரு அவநம்பிக்கை.
=====================================================ருத்ரா

நம் இந்து மதத்துள்
எல்லா மதங்களும்
உண்டென்றால்
"நாத்திகம்"
மதமும் இருக்கிறது
என்று தானே அர்த்தம்.
அப்புறம்
ஏன் இவர்கள்
மனம் புண்பட்டது என்று
பிலாக்கணம் வைக்கிறார்கள்.
இறைவன் இருக்கும் ரகசியம்
என்னவென்றால்
இறைவன் இல்லாத‌தே ஆகும்
என்பது தானே.
சிதம்பர ரகசிய திரை விலகியதில்
வெற்றிடம் தானே
அடுக்குத்தட்டுகளின்
அலங்கார தீப ஆரத்தியுடன் தெரிகிறது.
ஆம்.
அது போல்
நம்பிக்கையின் அடித்தளம்
அவநம்பிக்கையே.
என்னவோ இருக்கிறது
என்ற நம்பிக்கையில்
அந்த என்னவோ என்பதே
அவநம்பிக்கை.
விஞ்ஞானிகளுக்கு
இந்த அவ நம்பிக்கையில்
தான்
குவாண்டம் எனும்
ஆற்றல் குழம்பியத்தின்
சமன்பாடுகளுக்கு
தீர்வு காணப்படுகிறது.
மெய்ஞானியோ
கட்டாந்தரையில்
அவநம்பிக்கையுற்று
மான் தோல் விரித்து
அமர்ந்தவுடன் தான்
அவநம்பிக்கையை
பொறுமையாய் உரித்து உரித்து
தனக்குள் அமிழ்ந்து போகிறான்.
அந்த மன உருவெளியில்
ஏதோ நெருடுகிறது.
அதை குண்டலினி என்கிறான்.
அந்த பிரம்மாந்தரம்
ஏறியவர்கள் என்று சொல்பவர்கள்
அவநம்பிக்கையுடன் தான்
ஒலிக்கிறார்கள்.

ஈஸாவாஸ்யம் 12 வது மந்திரம் இது.

அந்தம் தமஹ ப்ரவிஸந்தி
யே அஸ்ம்பூதிம் உபாஸதி.
ததோ பூய இவ தே தமோ
ய உ சம்பூத்ய ரதாஹ‌

இந்த பிரபஞ்சம் இல்லை என்பவன்
ஒரு இருட்டில் தான் விழுகிறான்.
ஆனால்
இந்த பிரபஞ்சம் இருக்கிறது என்பவன்
அதை விட இன்னொரு இருட்டில் வீழ்கிறான்.

அதாவது தூய பிரம்மம் என்பது
தூய இருட்டு எனும் தூய வெளிச்சமே

பார்த்தீர்களா?
கடவுள் இருக்கிறது என்பவனும்
கடவுள் இல்லை என்பவனும்
இன்னும் நாம் எதையும் அறியவில்லையே
என்னும் இருட்டுக்குள் தான்
கிடக்கின்றனர்.
நாத்தின் இருப்பது சாதாரண இருட்டு.
ஆத்திகன் இருப்பதோ கும்மிருட்டு.

நாத்திகன் கிடைக்கும்
கொஞ்ச வெளிச்சத்தில்
எல்லாவற்றையும்
அறிந்து கொள்கிறான்.

ஆத்திகனோ அந்த‌
கும்மிருட்டே போதும் என்று
கண் மூடி கிடக்கின்றான்.

நம்பிக்கை அவநம்பிக்கை

கடவுள் கடவுளில்லை

ஆத்திகம் நாத்திகம்

ஆகிய அதுவும்

அர்த்தங்கள் இழந்து நிற்கின்றன.

======================================




अन्धं तमः प्रविशन्ति येऽसम्भूतिमुपासते ।
ततो भूय इव ते तमो य उ सम्भूत्या रताः ॥

andhaṃ tamaḥ praviśanti ye'sambhūtimupāsate |
tato bhūya iva te tamo ya u sambhūtyā ratāḥ ||

(12th mantra, Isha Upanishad)

‘Into deep darkness do they enter who worship the asambhuti. (the world of Becoming as detached from Being). Into still greater darkness, as it were, do they enter who delight in sambhuti. (pure Being or Brahman).’


==========================================================

https://www.wisdomlib.org/hinduism/book/isha-upanishad/d/doc122467.html

==========================================================

பட்டாம்பூச்சிகள்

பட்டாம்பூச்சிகள்
================================================ருத்ரா

பட்டாம்பூச்சிகள்
இரண்டு
கலந்து உறவாடியதை
கவிதை ஆக்கினேன்.
மரகதப் புல்விரிப்பை
மனத்துள் போர்த்திக்கொண்டேன்.
தர்பூசணி பழத்துண்டுகள்
விதைகளின் கண்களால்
தாகமெடுத்த மக்களை
உறுத்து விழித்தன.
வெயில் வெள்ளமெடுத்துப்
பெருகியதில்
மனிதர்களின் உடல்
அணைக்கட்டுகளில்
வியர்வையின் நீர்த்தேக்கம்
உயரம் மீறின.
தாகம் தீர்க்க வழியில்லை.
ஏரிகளின் வறண்ட படுகைகளில்
கானல் நீர் ஆடி அசைந்தன.
அந்த நீருக்குள்ளும்
அரசியலின் டி.எம்.சி
இத்தனை கன அடிகள் என்று
டிவிக்களின் அந்த‌
நான்குபேர்கள் பேசித்தீர்த்தனர்.
அடேய் கவிஞா!
சொற்களில் பிரியாணி தின்றது போதும்.
கொட்டிக்கவிழ்த்தாயிற்று ஓட்டுகளை.
கவிழ்ந்து கிடப்பது
வானத்தோடு சேர்ந்த விடியல்கள்.
அதைப்பார்த்தாயா?
இருட்டு வர்ணத்தில்
தேசக்கொடி பறந்ததில்
இமயங்கள் கூட‌
இடறி வீழ்ந்து
தலைகுப்புறக் கிடக்கின்றன.
கனவுகளே! லட்சியங்களே!
நீங்களும்
இடறி வீழ்ந்திடாதீர்.
வெள்ளைக்காரர்கள் போயினர்.
வெள்ளைக்காரர்கள் வந்தனர்.
அதென்ன சமூக நீதி?
அதெல்லாம்
புருஷ சூக்தம் பார்த்துக்கொள்ளும்.
சாதிகளின் வெள்ளை வர்க்கம்
திரை போட்டு விட்டது.
கவிஞன்
பேனா தேடினான்.
காகிதம் தேடினான்.
பயனில்லை.
மயானங்களின் ஆந்தைகள்
"மோக்ஷ கானம் " பாடின.

=====================================================



















சனி, 1 ஜூன், 2019

"ஹேப்பி பெர்த் டே டு..."


"ஹேப்பி பெர்த் டே டு..."
=================================================ருத்ரா

ஒரு ஒற்றை ரோஜாப்பூவை
அதன் இலைக்கொத்துகளோடு
அவள் தன் விரல்களில்
நளினமாய் பிடித்துக்கொண்டே
நடந்தாள்.
ஜாக்கிரதையாகத்தான்
எதனோடும் மோதிவிடாமல்
எதிரே வருபவர்களின்
ஆச்சரியப்பார்வைகளையும்
தாண்டி வருகிறாள்.
ஹேப்பி பெர்த் டே சொல்லிவிடவேண்டும்
அவனிடம்!
ஏதோ ஒரு அகல்விளக்கை
அணையாமல் கைக்குள் குவித்து
வருவது போல்
தன் இதயச்சிமிழுக்குள்
இன்னொரு இதயத்தை
அமர்த்திக்கொண்டு...

அவனும் ஒரு ஒற்றை ரோஜா நாற்றை
பூவோடு அந்த சின்ன‌
வண்ண வண்ண வேலைப்பாடுகள்
இழைக்கப்பட்ட தொட்டியோடு
கைகளில் ஏந்தி...
எதிரே ஏதோ ஒரு
விளக்குக்கம்பத்தோடு மோதிக்கொண்டு
எதிர்த்து கவனமின்றி வருவோர்
சிலர் மீதும் மோதிக்கொண்டு...
அவர்களின்
கிறுக்குப்பசங்கடா என்ற‌
சொல்விருதுகளையும்
பரிசாக தன் சட்டையில்
ஆனால் எதையும் சட்டைசெய்யாமல்
குத்திக்கொண்டு....
வந்து கொண்டிருந்தான்
ஹேப்பி பெர்த் டே சொல்ல‌
அவளிடம்.

அது எப்படி இருவருக்கும்
ஒரே தினத்தில் "பிறந்த நாள்?"
அந்த ஆவலின் வியப்பில்
இந்த வானமும் வாய்பிளந்து
வேடிக்கை பார்த்தது.
மேலே இரண்டு பெரிய மேகப்பிழம்புகள்
இரண்டு உதடுகள் பிரிந்தது போல்
காட்சி அளித்தது.
அவனும் அவளும்
நெருங்கிக்கொண்டிருந்தார்கள்.
இதோ ஒரு மோதல்.
அவர்கள் மோதிக்கொண்டார்கள்.
அப்புறம் ஆரத்தழுவிக்கொண்டார்கள்.
"ஹேப்பி பெர்த் டே டு..
ஹேப்பி பெர்த் டே டு.."

..டு அவர் லவ்"

ஆம்
இன்று தான்
இதே பார்க்கில் தான்
இதே நேரத்தில்
இதே தூங்கு மூஞ்சி மரத்தின் நிழலில்
விழித்துக்கொண்டது
ஒரு காதல்
இந்த இரண்டு உள்ளங்களில்.

====================================================