திங்கள், 5 செப்டம்பர், 2016

வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா....





வந்து இந்த வண்டிய தள்ளுங்கடா
==========================================ருத்ரா இ பரமசிவன்.

நம்ம நாடு சுத்த மோசங்க!
ஒழுக்கம் கெடையாது.
பக்தி கெடையாது.
எங்க பாத்தாலும்
ஈ மொய்க்கிற மாதிரி
எல்லாத்துக்கும் கூட்டம் தான்.

கீரியும் பாம்பும்
கல்யாணம் பண்ணிக்கப்போவுதுன்னு
கொட்டு அடிச்சு கூட்டம்.

புதுசா நாப்பது ரூவாய்க்கு
ஸ்மார்ட் ஃபோன் தரான்னு
எக்கச்சக்க கூட்டம்

அரை பவுன் வாங்கினா
பத்து கிராம் வெள்ளில‌
லட்சுமி டாலர் தரான்னு
எக்கச்சக்க கூட்டம்.

தமிழ் மாசமே தெரியாத
சன‌ங்களுக்கு
"ஆடித்தள்ளுப‌டி"மூலம்
தமிழ்ப்பஞ்சாங்கம்  அத்துபடி.

சினிமா பத்தி கேக்கவே வேண்டாம்.
"என்ன எழவுடா சுத்த ரோதனையாப் போச்சு"ன்னு
ஒரு படம் வந்தாக்கூட‌
அது என்னமோ "லைக்குங்களாமே"
அது அள்ளுதாம் போங்க.

அது என்னமோ தெரியலீங்க.
எல்லாம் வெவரந்தாங்க!

என்னங்கடா வேடிக்க பாக்குரீங்க‌
வந்து இந்த வண்டிய தள்ளுங்கடான்னு
சொன்னாங்க.
தள்ளுனா
ஆயிரம் ரெண்டாயிரம் கெடைக்கியூம்னாங்க.
அது என்ன பொணம் கொண்டுபோர
வண்டியான்னு கேட்டோமுங்க‌
கெட்ட நாத்தம்.
ஆமாண்டா!ஒங்க பொணங்க தாண்டான்னாங்க!
ஏனுங்க!
நம்ம அரசாங்கத்த நாமே தேர்ந்தெடுக்க‌
நமக்கே ரூவா தர்ராகளாமே..ன்னுட்டு தானே
வந்தோமுங்க!
அந்த எழவுக்கு
என்னதாங்க இங்க  பேரு?.
ஓ ...எலக் ஷன்ங் களா ?"

==================================================




கல் பொரு சிறுநுரை......




கல் பொரு சிறுநுரை.....
================================ருத்ரா

(1) சிறை

அவள் போனபிறகு
அந்த சன்னல் கம்பிகளை
தொட்டு தொட்டு பார்த்தான்.
சிரிப்பென்ற வெள்ளிமுலாம் பூசினாளே
எங்கே அது?
இன்னும் "கம்பிகளை"
எண்ணிக்கொண்டு தான் இருக்கிறான்.
காதல் சிறை !


_________________________________________


(2) வளையல் துண்டுகள்

ஏன் உடைத்து சென்றாய் வளையலை?
பௌர்ணமித் துண்டுகளாய்
அவை கீழே
சிதறிக்கிடந்ததில்
பஞ்சாங்கம் மாறிப்போனது!
வரவேண்டிய
முழு நிலவு முகம் மறைந்து போய்
இன்று அமாவாசை ஆகிப்போனது.


___________________________________________


(3) புதிய விஞ்ஞானம்

வேப்பங்காயாக கசந்த
குவாண்டம் மெக்கனிக்ஸ் இனித்தது.
அன்று நீ கல்லூரி வகுப்புக்கு
நெஞ்சோடு தழுவி எடுத்துவந்த‌
உன் புத்தகத்தை இரவல்கேட்டு
பேராசிரியர் நடத்திய
விஞ்ஞானப்பாடம் அல்லவா அது?


__________________________________________


(4) "கல் பொரு சிறுநுரை"

"கல் பொரு சிறுநுரை" பற்றிய அந்த
"குறுந்தொகை வகுப்பில்"
குளுக்கென்று சிரித்து விட்டு
குனிந்து கொண்டாய்.
அந்த சிறுநுரை பட்டு
என் நெஞ்சத்து பாறாங்கல்
நொறுங்கியே விட்டது.


====================================ருத்ரா
6 நவம்பர் 2013ல்  எழுதியது.

ஞாயிறு, 4 செப்டம்பர், 2016

போதை

4 செப்டம்பர் 2016

போதை
============================================ருத்ரா

காதை கூர்மையாக்கு.
கண்களை அகலமாக்கிக்கொள்.
அப்புறம் மூடிக்கொள்.
அவர் சொல்லிக்கொண்டே போவதில்
உன் பங்குக்கு
என்ன இனிப்புத்துண்டுகள் விழுகிறது
என்று கேள்.
உனக்கு புரியாததை
நீ கேட்கும்போது
உச்சு கொட்டிக்கொள்.
உனக்காக ஒரு சதுரம் வெட்டி
ஒரு சன்னல் செய்து
உனக்கு மட்டுமே கிசு கிசுப்பது போல்
தெரியுமே
அப்போது வேகமாக தலையாட்டு.
உன் பக்கத்தில் இருப்பவர்களும்
அப்படித்தான் தலையாட்டிக்கொண்டிருப்பதாக‌
உனக்குப் படும்.
உன்னிடமிருந்து
ஒரு நீண்ட பெருமூச்சு கிளம்பும்
ஒரு தெளிவு ஏற்பட்டதாய்.......
உனக்கு
ஒரு  ஆறுதல்  கிடைத்து விட்டதாய்.........
அப்போது
அப்பாடா என்று
உன் உடுப்புகளையெல்லாம்
உதறிக்கொண்டு எழுந்து நடப்பாய்.
அப்போது உனக்கு
இந்த உலகமே கால் தூசு.
பெண்ணே !
வாழ்க்கையின் பொருளாதாரம்
உனக்கு தந்தவை
எத்தனை அடிகள் உதைகள் ?
இந்த "ஆத்மீக சொற்பொழிவை"
சுமந்து கொண்டு வீட்டுக்குள் நுழைகிறாய்
வேதாளத்தை வெற்றிகொண்டு
சுமந்து கொண்டு போகிற
விக்கிரமாதித்தன் போல நுழைகிறாய்.
வீட்டுக்குள் கால் வைத்ததும்
வாழ்க்கையின் கன பரிமாணம்
இரும்பு சங்கிலியாய்
உன் கால்களை பிணித்துக்கொள்கின்றனவே !
அந்தக்கூட்டத்தின்
போதையெல்லாம் எங்கே போயிற்று?

அதோ அவனைக்கேள்.
அவனும் வானில் மிதந்து
தள்ளாடி தள்ளாடி வருகிறான்.
லேசாய் காக்காய்சசிறகு போல
வந்து வீட்டுக்குள் விழுகிறான்.
நாளை தான் அவனுக்கு
போதை தெளியும்.
மறுபடியும் அவன்  செக்கு மாடாய்
ஒரு பரிணாமம் எடுத்தாக வேண்டும்.

நாளை மறுபடியும்
நீ கோவிலுக்கு போய் விட்டு வா.
அவன் அங்கே போய்விட்டு
வருவான்.

வாழ வேண்டும் என்ற
உயிர்த்தேவை  கூட
இங்கு ஒரு போதையின் மீது
பயணிக்க வேண்டியிருக்கிறது.

================================================








சனி, 3 செப்டம்பர், 2016

ஓலைத்துடிப்புகள் (4)






3 செப்டம்பர் 2016



ஓலைத்துடிப்புகள் (4)
==========================================ருத்ரா இ பரமசிவன்


சங்கத்தமிழின் தமிழ் எழுத்துக்களின் நாடி நரம்பாய் சுடர்ந்து நின்றவன் கபிலன். அவன்   பாடிய குறிஞ்சிப்பாட்டில் ஒரு நாள் நுழைந்தேன். சொல்லின் அழகு சொட்டும் வரிகளின் காடு அது.தலைவன் தலைவி ஒலி கல் பூ உயிர் புள் மலை மண் என எல்லாவற்றிலும் மின்னலின் ஒரு சாந்து பூசி கட்டியிருந்தான் அந்தப் பாட்டுக்கோடையை.அதில் "கல்" "உயிர்" என்ற இரு சொற்களை அவன் ஆண்ட விதம் என்னை அப்படியே கட்டிப்போட்டது.இவற்றிற்கு"ஒலி" என்ற பொருள் நம் சங்கத்தமிழில் வழங்கியிருப்பது கண்டு நான்வியந்து போனேன்.இந்த "வேர்" வழியே நாம் நம் தமிழ் தொன்மை பற்றி ஆழமாய் இறங்கி ஆராயவேண்டும்.








அவன் அவிழ் ஒரு சொல்
================================================ருத்ரா இ பரமசிவன்


குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய பண்ணின்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்துப் பால்பெய் திங்களில்.
கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.
இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்தவர் என்றுகொல் எதிர்வரும் ஆங்கண்
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் என்செயும்  முயங்கு இழைத்தோழி.


=====================================================



பொழிப்புரை
=================================================ருத்ரா இ பரமசிவன்



குரூஉ மயிர் யாக்கையின் கரடி உரியன்ன‌
நெடுங்கருப் பெண்ணை பழுனிய பைங்காய்
நுங்கின் இழிநீர் படர் தந்தாங்கு
பளிங்கின் சுனைநீர் உகுக்கும் கல்லிடை.
பசிய அடுக்கமும் கான் பொதி ஒடுக்கமும்
நெடிய ஓங்கலின் நிரல் காட்டும் பொதிகை
அண்ணிய குன்றன் அகலம் தோஒய்
நரம்பின் புன்காழ் முடுக்கிய நுண்சுரம்
நளிதரு இசையில் நுடங்கும் மயங்கும்
அற்றை முற்றத்து பால்பெய்த் திங்களில்.



குட்டை மயிர்களால் ஆன உடம்பை உடைய கரடியின் தோல் போர்த்தது போல் இருக்கும் நெடிய கருப்பு பனைமரத்தில் விளைந்த‌ பசுங்காயின் நுங்கு உரித்தபின் அதில் கசியும் நீர்போல அந்த பாறைகளிடையே பளிங்கு போன்ற சுனைநீர் இழைந்து கொண்டிருக்கும்.பச்சைப்பசேல் என்ற மலைத்தொடர்களும் அவற்றின் ஒடுக்கங்களான சரிவுகளின் இடுக்குகளும் அடர்ந்த‌ காடுகள் பொதிந்து கிடக்கும்.நெடியனவாய் ஆனாலும் உயர்ந்த மலை உயரங்களால் அவை வரிசையாய் அமைந்து "பொதிகை"என அழைக்கப்படும்.அந்த மலையின் அருகே உள்ள‌ ஒரு சிறு மலையின்தலைவன் மீது காதலில் நான் கட்டுண்டபோது அவன் திரண்ட மார்பில் தோய்ந்து கிடப்பேன்.அன்றொரு நாள் அந்த முற்றத்தில் பால் போல் நிலவு பொழிய யாழின் மெல்லிய நரம்பின் இழையில் முறுக்கேற்றி இசைக்கப்படும் நுட்பமான பண்ணில் குழைவுற்று மெல்லசைவுகளோடு மயங்கிக்கிடப்பேன்.



கல்லின்று கல்பு உயிரின்று உயிர்பு
கனைகுரல் ஓரும் கண்புதைத்து மாயும்.
அவன் அவிழ் ஒரு சொல் விசும்பு  தூஉய்
எல்லிய திசைகள் ஆர்க்கும் கலிக்கும் .
புல்லிய அரிபரல் பண்ணிய ஓடை
புதல்நீவி என் இறைவளை நெகிழ்க்கும்.
ஊழ் ஊழ் தலைஇ கூழ்தலை ஒக்க‌
மண்ணின் பிளந்து வித்திய காட்டும்.


கல்லிலிருந்து ஒலிக்கும்.உயிரிலிருந்தும் ஒலிக்கும்.
என்ன அந்த நுண்ணொலி?
அந்த ஒலிக்கற்றைகளை உற்றுப்பார்த்துக்கேட்டு கண்கள் மூடி
 கனவுகளில் மறைந்து கிடப்பேன்.ஆம்.அது அன்று அவன் என்னை நோக்கி அன்பொழுக கூறியது. மடல் அவிழ்ந்த மலர் போல் வந்த சொல் அல்லவா அது
 விண்ணெல்லாம் பரவி அச்சொல் வெளிச்சமாய் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கும்படி அதன் துடிப்பு ஒலிகள் கேட்கும். சிறு சிறு கூழாங்கற்களை உருட்டிச்செல்லும்  நீரோடை விட்டு விட்டு ஒலித்து சில குரல் பிஞ்சுகளை தூவிவிடும். அப்போது அது கரையோரத்து புல் புதர்களை
வருடிச்செல்வதைக்கண்டுநான் காதல் நினவில் மெய் நெகிழ்ந்து போக என் முன் கை வளையல்கள் கழன்று  விழும். ஒவ்வோரு பருவத்தேயும்
பயிர் செய்யும் காலச்சுழல்களில் அந்தந்த பருவத்திலும் தலைநீட்டும் பயிர் நாற்றுகளிலும்  விதைக்கப்பட்ட வித்து மண்ணைப்பிளந்து ஒலித்துக் காட்டுவது இந்த உயிரொலியே.அவன் விதைத்த சொல் இதோ இந்த மண்ணின் இதயத்துள்ளிருந்தும் ஒலிக்கும்.



இடி உமிழ்பு இரும்பிழி வானம்
இயைந்த போன்ம் அக்குரல் ஓப்பும்
நாள் ஈரும் வாளது கூர்முள்
என்றுகொல் மலர்தலை சீர்க்கும்?
நின்றுகொல் பொழுது தின்னும் நிணமாய்
கான்றல் பூ காந்தள் விரி இணர்
காட்டும் அழலிடை அவிர்பாகத்தன்ன‌
ஆவியுள் ஆவி ஒளிக்கும் வேகும்.
நோதல்மன் யானே முயங்கு இழைத்தோழி.


இடி முழங்கி அடர்மழை பிழியும் வானமாய் இயைந்தது போல் அக்குரல் என்னை கவர்ந்து கட்டுப்படுத்தும்.அப்போது ஒரு நாள் கழிவதும் வாள் போல்  அறுத்து வதை செய்யும்.அந்த கூரிய முள் எப்போது எனக்கு மென்மலராய் விரிந்து என்னைச் சீர் ஆக்கும்? அது வரை காலம் என்னைத் தின்னும் மாமிசமாய்க் கிடப்பேன்.காந்தள் மலர் கூட வெம்மை வறுக்கும்  பூவின் கொத்துகளாய்  இலங்கும்.அதன் அனல் என்னை அவித்துவிடும். உயிரை உறையாக்கி உள் உயிர் ஒன்றில் நான் ஒளித்த போதும் என்னை இந்த வேக்காடு அகலாது. அன்புத் தோழியே நீ அணிந்திருக்கும் உன் அணிகலன்கள் கூட உன்னோடு ஊடல் செய்தது போல் தான் விலகி விலகி எனக்கு தெரிகிறது. இப்போது என் துயர்தனை நீ அறிவாய்.



===============================================================

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

யார் அது?


2  செப்டம்பர்  2016


யார் அது ?
============================================ருத்ரா இ பரமசிவன்
அந்த மீன் கொத்திப்பறவையின்
சிவப்பு நீலச்சிறகுகள்
தண்ணீர்ப்பரப்பிலிருந்து
செங்குத்தாய் நின்று துடிக்கிறது.
ஒரு மீன் அதன் கண்ணில்
குறி வைக்கப்பட்டவுடன்
உடனே பறப்பது நின்று
நீரில் குத்தீட்டி போல்
அது விழுந்து பாயும்.
அதை உன்னிப்பாய் நின்று
கவனிப்பது என் வழக்கம்.
தாமிரபரணி கன்னடியன் வாய்க்காலில்
குளிக்கும்போது
இடுப்பளவு நனைந்து நின்று கொண்டே
இதைப்பார்த்திருக்கிறேன்.
நான் குளிக்கும் படித்துறையிலிருந்து
கொஞ்சம் தள்ளி இருக்கும்
படித்துறையிலிருந்து தண்ணீர் எடுக்கும்
அவள் யார்.?
தெரியாது.
முகம் பார்க்கவில்லை.
கருகருவென்று அகலப்பரந்து
விழும் கூந்தல் அருவியில்
முகம் தெரியவில்லை.
குமுக் என்று குடம் மூழ்குவதும்
வளையொலிகள் கலந்து
இனிமையாய்
அந்த தண்ணீர் எனும் பளிங்கு விழுதுகள்
என்னை இங்கு வந்து வருடுவதும்.....
நான் இன்னும் அந்த
நீலைச்சிவப்பு சிறகுகளின் துடிப்பையே
பார்த்துக்கொண்டிருக்கிறேன்.
அந்த அந்தரத்து துடிப்பில் என் இதயம்.
கலர்  கலராய் அந்த கண்ணாடி வளையல்களே
அந்த சிறகுகள்.
அது வரை நீரின் அடியில்
இந்த பரும் பரும் மீன்கள்
தங்கள் வாய்களால்
கவ்வி கவ்வி பிடுங்கி கொண்டிருக்கின்றன.
மொசு  மொசு வென்று
அவற்றின் மென்கடிகளில்
யாரோ அடியில் இருந்து
கிச்சு கிச்சு மூட்டுவது  போல் இருக்கும்
மின்னல் வருடல்கள்.
என்ன அது?
யார் அது?
பார்த்து விட்ட முகத்தை விட
பார்க்காமலேயே  விட்டு விட்ட
அந்த முகம் எத்தனை அழகு!

====================================================

வியாழன், 1 செப்டம்பர், 2016

மொண்ணப் பயலுவளா



"மொண்ணப்  பயலுவளா"
===============================================ருத்ரா

ஒரு படத்தின் தலைப்பை
வாசிப்பதற்குள்ளே
இன்னோரு படம்
நம் முதுகைச் சுரண்டுகிறது.
ஐந்து நிமிடப் குறும்படங்களை
ரெண்டரை மணி நேரத்துக்கு
"சவ்வாய் உருட்டித் திரட்டி இழுத்து"
இளிக்கிற இனிப்புச் சவ்வு  மிட்டாய்கள்
ஆக்குகிறார்கள்.
புதிய தலைமுறைகள்
புகுகின்ற வாசலாய்
சினிமா ஒரு பரிணாமம் உற்றது
என்ற மகிழ்ச்சி மட்டுமே மிஞ்சுகிறது.
இந்த புற்றீசல்கள்
படைப்புத்திறனை
கொள்ளை மலிவு ஆக்கலாம்.
புது  முகங்கள் வரவேற்கப் படவேண்டியவர்களே!
ரசிகர்கள் அதே  "விசில்"பறவைகள் தானே.
"உப்புமா"ப்படங்களில்
உப்பும் இல்லை  ஒறப்பும்  இல்லை என‌
ஓடிவிடமாட்டார்களா என்ன!
"அட மொண்ணப்  பயலுவளா இதுக்கு மேலே
என்னடா படம் எடுக்கிறது ?"
பயப்படாதீர்கள்
இந்த தலைப்பிலும் படங்கள் வரலாம்!

========================================================





நெட்டைப் பகல் கனவில்.....




1 Sep 2016



நெட்டைப் பகல் கனவில்...
=====================================ருத்ரா இ.பரமசிவன்.


கபாலி

சூட்டு கோட்டுக்குள்
நெருப்பை வைத்து
தைத்தது.


காவேரி

தண்ணீர்ப்பாம்பு விளையாட்டிலும்
அவனே பாம்பு
நாமே தவளைகள்.


ரஜனி

தமிழன்
படுத்தே கிடக்க
"பஞ்ச்" போதும்.



கமல்

"மேக் அப்" போடு
கழுதையாயும் உலகின்
கவனம் ஈர்ப்பேன்.



ஜனநாயகம்

தலை குனிந்தே
மேஜைகள் தட்டினார்கள்.
சட்டம் ஆனது.



ஈஷா

அகப்பட்டால்
"இந்தியத்தாய்" கூட
"சன்யாசினி" தான்.



ஒரு கைது

சரஸ்வதியின்
வீணைக்குள்ளும்
கருப்புக்கரன்சிகளா ?



நிதி

110 ஏ யின்கீழ்.....
வாய்ப்பூட்டுகள் வாங்கியதற்கு
ரெண்டாயிரம் கோடி ஒதுக்கீடு.


ஈழம்

ஊமைகள் பேசினர்.
செவியிலிகள் கேட்டனர்
தமிழ் வாழ்க!


எதிர்க்கட்சிகள்.

குப்பைத்தொட்டிகளில்
விழுவதற்கு மட்டுமே அனுமதி
அந்த 49 விழுக்காடுகளுக்கு








நட்பைப்பற்றி ஒரு கவிதை,