அப்பா ஒரு படம் அல்ல.
____________________________
ருத்ரா
எவ்வளவு தூசி.
இன்று தான்
துடைத்து மாட்டினேன்.
அப்பாவின் படம்
_________________________________
மகனே!
என்னை எப்படி வேண்டுமானலும்
போற்றித் துதிபாடு.
அப்பா ஒரு "காவி"யம்
என்று மட்டும் சொல்லிவிடாதே.
கொச்சைப்படுத்தப்படும்
வலியை எனக்குத் தந்து விடாதே.
அப்பா ஒரு காவியம்
_________________________________
ஊதுவத்தி மாலையுடன்
சிரிக்கிறார் அப்பா.
அப்பாக்களுக்கு ஒரு உலக தினம்
மாதிரி இந்த
ஊதுவத்தி மாலகளுக்கு மட்டும்
உலக தினம் என்றைக்கு
கொண்டாடப்போகிறீர்கள்?
அவர் சிரிப்பு இன்னும்
அடங்க வில்லை.
சிரிப்பு வருது! சிரிப்பு வருது!
_______________________________________
பிரம்பு கையில் இருந்தால்
அது ஆசிரியர்.
பிரம்பு கண்ணில் இருந்தால்
அது அப்பா.
அப்பாவும் நீயே!ஆசிரியரும் நீயே!
__________________________________________
கும்பிட்டதெல்லாம் போதும்.
போய் சாப்பிடு.
வடை பாயசம் காத்திருக்கிறது.
நான் போய் கத்தி
என் தோழர்களை எல்லாம்
கூப்பிட வேண்டும்.
காக்கைச்சிறகினிலே..
____________________________________
முதியோர் இல்லத்திலே
சேர்த்து விட்டு
மறந்தே போய்விட்டாய்.
இப்போது எதற்கு படத்தில்
இந்த கண்ணாடிச்சிறை?
காற்று வேகமாய் வீசியதில்
படம் விழுந்து
கண்ணாடி நொறுங்கியது.
இப்போது வெறும்படத்தை மட்டும்
மாட்டினான் மகன்.
அப்பாவுக்கு விடுதலை
_______________________________________
வீடெல்லாம்
சட்டம் போட்டுக்கொண்டிருதவன்
இன்று
ஒரு சட்டத்துள்
அடங்கி விட்டேன் என்று தானே
பார்க்கிறாய்.
வெறும் சதுரமான செவ்வகமான
ஜியாமெட்ரி அல்ல
இத்யங்கள்.
உன் துடிப்பில் நானும்
துடித்துக்கொண்டிருப்பதை
நீ உணர்கின்றாயா?
ஆயிரம் வாசல் இதயம்.
_________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக