யார் பேசறது?
_____________________________________________
ருத்ரா
கொஞ்சம் நில்.
உன்னிடம் பேசவேண்டும்.
என்ன?
யார் பேசறது?
அம்பாளா பேசுகிறாள்?
பராசக்தி வசனம் அங்கே
அந்த மூளி முனையில் கேட்பது போல்
ஒரு தோற்றம்.
நில்..நில்
இப்போது தெரிகிறது
வெள்ளையாய் ஆவியாய்
கடவுள் தான் பேசினார்.
"நானா சொன்னேன்
உனக்கு பிறவியே வேண்டாம் என்று?
அது தான்
முக்தியென்றும் பக்தியென்றும்
உன்னிடம் சொன்னவர்கள்
ஊழிகள் தோறும்
வேராய் கிளையாய் பரவும்
என்னை
வெட்டி வீழ்த்த அல்லவா
சொல்லியிருக்கிறார்கள்.
நான் முதன் முதலாய்
என் மூச்சுக்குமிழியை
வெளியிடும்
அந்த கருவறை எனும்
கோயில்களுக்கெல்லாம் கோயிலாய்
விளங்கும்
தாய்மை மூலத்தையே அல்லவா
தன் ஆதிக்கக்கோடரியால்
வெட்டி வீழ்த்துகிறார்கள்?
பூஜைகள் ஹோமங்கள்
இத்யாதி இத்யாதி என்று
அழுக்கு மூட்டைகளாய்
என் மீது அமர்ந்து
அழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.
நீ
நான் யார் என்று தேடவேண்டும்.
அதன் மூலம்
உன் அறிவு
அகலமாய் ஆழமாய்
இந்த பிரபஞ்சங்களையெல்லாம்
தன் வசப்படுத்தவேண்டும்.
அதற்கு
உன் குழந்தை குட்டிகள் என்று
உன் குடும்பம் தடை போடக்கூடாது
அதாவது
அவர்கள் உன் தடைக்கற்கள் அல்ல.
அதற்கு அவர்கள் தான் படிக்கட்டுகள்
என்று
சொல்லி முடிக்குமுன்
இந்த ஆட்டு மூளைக்காரர்கள்
ஆயிரம் சாஸ்திரங்களையும்
சாதிமுறை அடுக்குகளையும்
உன் மீது அமுக்கி
ஆதிக்க செலுத்தத்துவங்கி விட்டார்கள்
அதனால்
நானும் கூட இந்த கற்களுக்கு அடியில்
நசுங்கித்தான் கிடக்கிறேன்.
உனக்கு நான் முக்தி எனும் விடுதலை
தருவதற்கு முன்
எனக்கு நீ முக்தி கொடு.
ஆம்!
என்னை நீயே
இல்லை என்று உணர்ந்து கொண்டு
விழிப்பு நிலை பெறு.
உன் ஜாக்ரதம் சொப்பனம் சுஷுப்தி
இன்னும் துரீயம் எல்லாம் நீயே.
என்னை இல்லவே இல்லை
என்று உணரும்
அறிவு பெறு
அது போதும்...அப்புறம் பார்.
........
கடவுள் சொல்லிக்கொண்டே போனார்.
அன்று கோவிலுக்கு
அர்ச்சனை சீட்டு வாங்கிச்சென்று
அந்த மந்திரங்களையெல்லாம் கேட்டேன்.
புரிந்து விட்டது.
நீயே நான்.
அப்புறம் எதற்கு இதெல்லாம்?
"அது போதும் ...அப்புறம் பார்"
கடவுள் இல்லை என்று
கடவுளே சொன்னது
இப்போது புரிந்து விட்டது.
___________________________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக