நம் முகம் நமக்கு மட்டுமே.
___________________________________________ருத்ரா
முகத்தில் முகம் பார்க்கலாம்
என்று
விஞ்ஞானிகள்
பாடத்துவங்கி விட்டார்கள்.
நம் "பால்வழி" எனும்
விண்ணொளி மண்டலம்
இதோ நம் ஃபோம் மெத்தை தலையணை போல்
நம் அருகே இழைந்து கிடக்கிறது.
லட்சக்கணக்கான ஒளியாண்டுகளை
வைத்து திணித்து அடைக்கப்பட்ட
தலையணை இது.
நம் முகத்தை நாமே பார்த்து
வியக்கலாம்
களிக்கலாம்
இதன் அளவு பற்றி நினைத்து
திகைக்கலாம்.
ஏறக்குறைய இருபது ஆயிரம் கோடி
விண் ஒளி மீன் கூட்டங்கள்
இதனுள் அலை பரப்பிக்கொண்டிருக்கின்றன.
இதனுள் கைலாசங்களையும் வைகுண்டங்களையும்
நாம்
மழலையர் பள்ளிக்குழந்தைகளின்
சித்திரங்களை தீட்டி மகிழ்ந்து கொண்டிருப்போம்.
விஞ்ஞானம் முளைத்த பின்
மேனாட்டு மழலைகள்
பிரபஞ்சங்களையே
தம் கைகளில் பந்து விளையாடிக்களிக்கின்றன.
நாம் மட்டுமே
முதிர்ச்சி பெறாத மூளையின்
முடக்கு வாதத்தில்
முடங்கிக்கிடக்கிறோம்.
சாதிகளின் வெறித்தீயில்
சாம்பலாகிக்கிடக்கிறோம்.
இதோ
இந்த "பிரம்மாண்ட" முகம் பார்த்து
நம்மை
அறிவின் ஒளியால்
அலங்கரித்துக்கொள்வோம்.
___________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக