அச்சமில்லை அச்சமில்லை
__________________________________________ருத்ரா
அருமை நண்பனே!
உன்னிடம் ஒரு கேள்வி.
எப்ப பாத்தாலும் கேள்வி தானா?
தொண தொணக்கும் கொசுக்களே
தூரப்போங்கள்.
என் தூக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது.
அந்த மிச்சத்தில் தான்
உச்சம் தொடும் உன் துயரத்தின்
கழுமரங்கள் காத்திருக்கின்றன.
என்ன ?
ஆம்!
தூக்கம் கலைக்கும்
அந்த முட்டுச் சந்தில்
உன் விடியல்கள்
கசாப்புக்கு காத்திருக்கின்றன.
சுதந்திரம்
ஜனநாயகம்
சமநீதி
மானிடத்துவம்
இவை தானே
உன் வானம்.
உன் கனவு.
உன் "எல்லாம்"..
அவை யாவும்
நசுக்கப்பட இருக்கின்றன.
ஓட்டுப்பெட்டிக்குள்
கணிப்பொறி கம்பிகள் வைத்த சிறை
உனக்கு.
ஊசிப்போன
உளுத்துப்போன
சாதி மத வெறித்தீயில்
நீயும்
பொசுக்கப்பட இருக்கிறாய்.
அதற்கு இங்கே
சட்டதிட்டங்கள்
வார்க்கப்பட இருக்கின்றன.
உன் காதல்..
இனி புராண இதிகாச மத்தாப்பு
விளையாட்டுகளுக்கு மட்டுமே.
சாதி மத ஆபாசங்கள் கழன்ற
உன் இனிமை.. தனிமை.. நிறைந்த
உலாவலின்
எல்லைகள் அற்ற உன் காதலுக்கும்
ஒரு கூண்டு தயார் ஆகிறது.
மொத்தத்தில் இனி
நீ ஒரு கீ கொடுத்த பொம்மை.
இந்த நான்கு வர்ணக்காட்டுக்குள்
திக்கு தொலைத்து
திரியும் ஒரு
நரம்புகள் புடைத்த
வெறி ஏற்றப்பட்ட சவம் மட்டுமே...
"கூடாது..
விடமாட்டேன்.."
அந்த "நண்பன்"கள்
வீறு கொண்டனர்.
எழு ந்து கொண்டனர்.
______________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக