செவ்வாய், 28 ஜூன், 2022

தமிழ் மட்டும் தானே!

 தமிழ் மட்டும் தானே!

_______________________

ருத்ரா



நம்பிக்கை கொள்.

அது உன்னுள்

ஆயிரம் யானைகள்

பிளிறும் குரல்!

அச்சம் அகற்று

அதுவே

உன் விரல்நுனியில்

ஒரு விடியல்.

உள்ளம் பிழிதல்

தவிர்த்து விடு.

அதுவே 

வழியிடறும் பாறைகள்

தவிடு பொடியாக்கும்.

இதயம் துடிக்கும் போது

உணர்ச்சியை 

இளக்கமாய் ஆக்கி

இறுக்கமாய் உடுத்திக்கொள்

தளர்வுகள் ஏதும் 

தலை காட்டாது ஓடும்.

சொற்கள் தோறும் 

கற்கள் பிளந்து 

உறுதியைக்காட்டு

இமயங்கள் கூட தன்

மகுடங்கள் இழந்து

மண்டியிடும் அறிவாய்.

மனிதா!மனிதா!

மந்திரம் சொல்லி உனை

மடக்கும் மொழியை

உடைக்கும் ஓரொலி உண்டு

அதுவே நம்

தமிழே தமிழே 

தமிழ் மட்டும் தானே.

அட! அந்தக் கடவுள்தனை

கையில் எடு!

அதன்

கருத்தினில் நுழை!

அங்கு கருவறையில்

நீயே ஒளி!

கரு மந்திரம் உன்னிடம் உண்டு

இந்த இருள் மந்திரம்

உனக்கேன் உணர்?

அறிவே உன் "அறிவு."

அதை அறியும் வரை

இந்த கற்கள் எல்லாம்

உன் மைல் கற்கள்!

அறிவின் சிகரம் நீ

தொட்டபின்னே

உனக்கு 

வர்ணம் இல்லை.

வகுப்புகள் இல்லை.

பிளவுகள் இல்லை.

பித்தங்கள் இல்லை.

தெளிவே உந்தன் கிழக்கு திசை.

தீர்வே உந்தன் மேற்கு திசை.

தெற்கு எல்லாம் 

நிமிர்ந்து நின்றால்

வடக்கின் ஆணவம்

இங்கே இல்லை.

சோழிகள் குலுக்கி

குருவும் சனியும்

பெயர்ந்தது என்பார்.

பெயர்ந்து வீழ்வதோ

நம்முள் இருந்து 

நம்மைக் கட்டிய‌

கூடு எனும் வீடு.

கூர் தீட்டும் அறிவை

மழுங்க வைக்கவே

இங்கு 

மலிந்து கிடக்கும் புராணங்கள்.

உலகத்தமிழனுக்கு

வேலிகள் இல்லை

வேதனை இல்லை.

கைபர் போலன்

கண்வாய் வழியே

வந்த "பேரிடரே" நம்

வரலாறு சிதைக்கும்

நச்சுப்பேய்கள்.

அந்த‌

நரித்தனம் அழிக்க‌

நம்மிடம் இன்னும் 

இங்கே இருப்பது

தமிழே! தமிழே!

தமிழ் மட்டும் தானே!

_______________________

ருத்ரா


செவ்வாய், 21 ஜூன், 2022

அப்பா ஒரு படம் அல்ல.








                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                             அப்பா ஒரு படம் அல்ல.

____________________________

ருத்ரா                                                                                                                                                                                                                                                                                                                                 

எவ்வளவு தூசி.

இன்று தான் 

துடைத்து மாட்டினேன்.


அப்பாவின் படம்

_________________________________


மகனே!

என்னை எப்படி வேண்டுமானலும்

போற்றித் துதிபாடு.

அப்பா ஒரு "காவி"யம் 

என்று மட்டும் சொல்லிவிடாதே.

கொச்சைப்படுத்தப்படும்

வலியை எனக்குத் தந்து விடாதே.


அப்பா ஒரு காவியம்

_________________________________                                                                                                                                                                                                                                                                                                                            

ஊதுவத்தி மாலையுடன் 

சிரிக்கிறார் அப்பா.

அப்பாக்களுக்கு ஒரு உலக தினம்

மாதிரி இந்த 

ஊதுவத்தி மாலகளுக்கு மட்டும்

உலக தினம் என்றைக்கு

கொண்டாடப்போகிறீர்கள்?

அவர் சிரிப்பு இன்னும்

அடங்க வில்லை.


சிரிப்பு வருது! சிரிப்பு வருது!

_______________________________________


பிரம்பு கையில்  இருந்தால் 

அது ஆசிரியர்.

பிரம்பு கண்ணில் இருந்தால்

அது அப்பா.


அப்பாவும் நீயே!ஆசிரியரும் நீயே!

__________________________________________


கும்பிட்டதெல்லாம் போதும்.

போய் சாப்பிடு.

வடை பாயசம் காத்திருக்கிறது.

நான் போய் கத்தி

என் தோழர்களை எல்லாம்

கூப்பிட வேண்டும்.


காக்கைச்சிறகினிலே..

____________________________________



முதியோர் இல்லத்திலே

சேர்த்து விட்டு

மறந்தே போய்விட்டாய்.

இப்போது எதற்கு படத்தில்

இந்த கண்ணாடிச்சிறை?

காற்று வேகமாய் வீசியதில்

படம் விழுந்து 

கண்ணாடி நொறுங்கியது.

இப்போது வெறும்படத்தை மட்டும் 

மாட்டினான் மகன்.


அப்பாவுக்கு விடுதலை

_______________________________________


வீடெல்லாம் 

சட்டம் போட்டுக்கொண்டிருதவன்

இன்று 

ஒரு சட்டத்துள்

அடங்கி விட்டேன் என்று தானே

பார்க்கிறாய்.

வெறும் சதுரமான செவ்வகமான‌

ஜியாமெட்ரி அல்ல‌

இத்யங்கள்.

உன் துடிப்பில் நானும் 

துடித்துக்கொண்டிருப்பதை

நீ உணர்கின்றாயா?


ஆயிரம் வாசல் இதயம்.

_________________________________






செல்வி கீர்த்திராஜேஷ் பூப்புனித நீராட்டு விழா வாழ்த்து மடல்.

 செல்வி கீர்த்தி ராஜேஷ் பூப்புனித நீராட்டு விழா வாழ்த்து மடல்.!

============================================================

============================================================

============================================================

27.06.2022


செல்வி கீர்த்தி நல்லாள்

செந்தாமரையென 

பூத்து பொலிந்த 

மங்கலம் சிறக்க

நீடூழி வாழ்க! அவள்

நீடூழி வாழ்க! 


பூப்போல் நகை செயும் அவள்

புன்னகை கோடி பெறும்.

அன்பெனும் அகல் வான்

ஒளிரும் அவள் மாண்பு

கோடி கோடி கோடி பெறும்.

அறிவின் புத்தொளி அவள்

ஆளுமையாகும் இந்த‌

உலகம் கூட அவள்

உரை சொல் கேட்கும்.

விரல் நகம் பூசும் அவள்

வண்ணம் கூட ஒரு

எண்ணம் காட்டும் அதில்

இவ்வுலகம் ஆளும்

திண்ணம் காட்டும்...அவள்

பந்து விளையாடினால் அது

பூப்பந்து அல்ல!

புயலே ஒரு குமிழி பூத்து

அவள் சொல்படி கேட்கும்.

அவள்

விருதுகள் குவித்த 

விந்தை கேட்டால்

ஒலிம்பிக் சுடரும் 

கை நீட்டி வாழ்த்தும்.

குறுக தரித்த அவள் சொல்லே

இங்கு இனிமையின் நல்ல‌

இலக்கியம் ஆகும்.

அவள் 

உதிர்க்கும் சொற்களின்

குறுந்தொகைக்குள்ளே 

கலித்தொகை காட்டும்

களித்தொகை உண்டு.

எட்டுத்தொகையுள் ஒரு 

எட்டாத்தொகையும்

செறிந்து காட்டும் அவள்

மங்கலம் அணிநலம்

பொங்கிடும் என்றும்.

மழலையிலிருந்து சிறுபூவாகி

பெண் எனும் பெருமையின்

பெரு மகிழ்வின் வெள்ளம்

பெருகிட நின்றாள்..அவள்

வளம் பல பெற்றிட‌

வாழ்த்திடுகின்றேன்!

வாழ்த்திடுகின்றேன்!

அவள்

பூப்பு நீராட்டு பொன்விழா சுடர‌

வருகை தந்தோர்க்கு எங்கள்

நன்றி!நன்றி!நனி மிக‌ நன்றி!


‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍============================================



அன்புடன் வாழ்த்தும் 

ஆச்சி தாத்தா

கஸ்தூரி பரமசிவன்

________________________________

27.06.2022

திங்கள், 13 ஜூன், 2022

யார் பேசறது?

 யார் பேசறது?

_____________________________________________

ருத்ரா




கொஞ்சம் நில்.

உன்னிடம் பேசவேண்டும்.


என்ன? 

யார் பேசறது?

அம்பாளா பேசுகிறாள்?

பராசக்தி வசனம் அங்கே

அந்த மூளி முனையில் கேட்பது போல்

ஒரு தோற்றம்.


நில்..நில்


இப்போது தெரிகிறது

வெள்ளையாய் ஆவியாய்

கடவுள் தான் பேசினார்.


"நானா சொன்னேன்

உனக்கு பிறவியே வேண்டாம் என்று?

அது தான் 

முக்தியென்றும் பக்தியென்றும்

உன்னிடம் சொன்னவர்கள்

ஊழிகள் தோறும் 

வேராய் கிளையாய் பரவும்

என்னை

வெட்டி வீழ்த்த அல்லவா

சொல்லியிருக்கிறார்கள்.

நான் முதன் முதலாய்

என் மூச்சுக்குமிழியை

வெளியிடும் 

அந்த கருவறை எனும்

கோயில்களுக்கெல்லாம் கோயிலாய்

விளங்கும்

தாய்மை மூலத்தையே அல்லவா

தன் ஆதிக்கக்கோடரியால்

வெட்டி வீழ்த்துகிறார்கள்?

பூஜைகள் ஹோமங்கள்

இத்யாதி இத்யாதி என்று

அழுக்கு மூட்டைகளாய்

என் மீது அமர்ந்து

அழுத்திக்கொண்டிருக்கிறார்கள்.

நீ 

நான் யார் என்று தேடவேண்டும்.

அதன் மூலம்

உன் அறிவு

அகலமாய் ஆழமாய்

இந்த பிரபஞ்சங்களையெல்லாம்

தன் வசப்படுத்தவேண்டும்.

அதற்கு 

உன் குழந்தை குட்டிகள் என்று

உன் குடும்பம் தடை போடக்கூடாது

அதாவது

அவர்கள் உன் தடைக்கற்கள் அல்ல.

அதற்கு அவர்கள் தான் படிக்கட்டுகள்

என்று 

சொல்லி முடிக்குமுன்

இந்த ஆட்டு மூளைக்காரர்கள்

ஆயிரம் சாஸ்திரங்களையும்

சாதிமுறை அடுக்குகளையும் 

உன் மீது அமுக்கி

ஆதிக்க செலுத்தத்துவங்கி விட்டார்கள்

அதனால் 

நானும் கூட இந்த கற்களுக்கு அடியில்

நசுங்கித்தான் கிடக்கிறேன்.

உனக்கு நான் முக்தி எனும் விடுதலை

தருவதற்கு முன்

எனக்கு நீ முக்தி கொடு.

ஆம்!

என்னை நீயே 

இல்லை என்று உணர்ந்து கொண்டு

விழிப்பு  நிலை பெறு.

உன் ஜாக்ரத‌ம் சொப்பனம் சுஷுப்தி

இன்னும் துரீயம் எல்லாம் நீயே.

என்னை இல்லவே இல்லை

என்று உணரும்

அறிவு பெறு

அது போதும்...அப்புறம் பார்.

........

கடவுள் சொல்லிக்கொண்டே போனார்.


அன்று கோவிலுக்கு

அர்ச்சனை சீட்டு வாங்கிச்சென்று

அந்த மந்திரங்களையெல்லாம் கேட்டேன்.

புரிந்து விட்டது.

நீயே நான்.

அப்புறம் எதற்கு இதெல்லாம்?

"அது போதும் ...அப்புறம் பார்"

கடவுள் இல்லை என்று

கடவுளே சொன்னது

இப்போது புரிந்து விட்டது.


___________________________________________________________________




ஞாயிறு, 12 ஜூன், 2022

ஒரு நாவலின் அனாடமி

 


ஒரு நாவலின் அனாடமி

_________________________________‍ருத்ரா


"அவன் என்ன செய்வது என்று

தெரியாமல் 

கைகளைப் பிசைந்து கொண்டிருந்தான்.

ஆனால் பிசையப்பட்டுக்கொண்டிருந்தது 

அவன் மனமே.

அப்படி என்ன சொல்லி விட்டான்.

அவள் விலுக்கென்று

ஒன்றும் சொல்லாமல் 

ஸ்கூட்டியைக் கிளப்பிக்கொண்டு

போயே போய் விட்டாள்.

இது வழக்கம் தான்.

அப்புறம் "ஃபோன் வரும்".

ஆனால் இது அப்படியா? என்று தெரியவில்லை.

அவனுக்கு வயிறு கலங்கியது.

இதயம் இருக்குமிடத்தில்

இதயம் எங்கோ போய்விட்டதாக‌

அவன் உணர்ந்தான்.

அவன் என்ன சொன்னான்?

திருப்பி உள்ளுக்குள்

"ரீ வைண்டி"னான்.

எதுவுமே தவறு இருப்பதாக 

அவனுக்குத் தெரிய வில்லை.

............."

இதற்கு மேல் என்ன எழுதுவது என்று

அவனுக்கு ஒன்றும் தோன்றவில்லை.

இந்த வரிகளுக்கு அவனுள் விழுந்த விதை

எது?

எங்கே?

எப்போது?

என்பதும் அவனுள் பொறி தட்டவில்லை.

அரை குறையாய் எழுதப்பட்ட‌

காகிதங்கள்

கசக்கி எறியப்பட்டன.

இத்தனைக்கும்

அவன் இன்னும் "காதலுக்குள்"விழவில்லை.

அந்த கருங்குழி இன்னும்

அவனது ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பில்

விழவில்லை.

காதல் என்ற கற்பனையை

பிசைந்து மண்பாண்டம் போன்று

ஒரு மனப்பாண்டத்தை 

உருவாக்குவதற்குள்

அவனுக்கு போதும் போதும்

என்றாகி விட்டது.

அந்த கட்டுக்காகிதங்கள்

காற்றில் பறந்து சிதறின.

என்ன செய்யப்போகிறாய்?

என்று சினிமாவில்

ஒரு கதாநாயகன் இப்படித்தான்

சிலுப்பிக்கொண்டு பாடுவான்.

"வெண்ணிலா வெளிச்சம் 

கிண்ணத்தில் விழுந்து..."

அந்த இசை அவனை

சுருட்டி சுருட்டி உள்ளே இழுத்தது.

மூச்சுத்திணறியது..

"அய்யோ"என்றான்."

"என்னடா? கனவா?

பேந்த பேந்த முழிக்கிறாய்."

அம்மா எழுப்பினாள்.


_________________________________________________________________

விக்ரம் 2


விக்ரம் 2

___________________________________

ருத்ரா




உலகநாயகன்

கமல்

நடிப்பின் உலகத்தை

தன் கைக்குள் சுருட்டி மடக்கி

வைத்து விரித்து விரித்தும் காட்டிடுவார் என்று

காட்டி விட்டார்.

அவர் முக ரேகைகளில்

அற்புதம் விரிக்கும்

ஜேம்ஸ் வெப் டெலஸ்கோப்பின்

அதி அற்புத இமேஜ்கள்!

அதை  நடிப்பு என்று

கொச்சைப்படுத்திக்கொண்டிருப்பதை

இனி நாம் நிறுத்திக்கொள்ளவேண்டும்.

கமல் சூரியா

இருவருமே

ஒரு வானமும் சூரியனுமாய்

மாறி மாறி வந்து

நம்மை திகைக்க வைக்கிறார்கள்.

உணர்ச்சிகளின் லாவா

பிழிந்து துவைக்கப்பட்டு

உலர்த்தப்படுகிறது அந்த பிலிம் சுருள்களில்.

படத்தின் வசூல் கூட நம்மை

திகில் கொள்ள வைக்கிறது.

பாகுபலி பாகுபலி என்று

கிராஃபிக்ஸ் களின் பொம்மைக்காட்சிகள்

அவ்வளவு வசூலை குவிப்பது ஒன்றும்

வியப்பல்ல.

இந்தப்படத்தின் கோடிரூபாய்களின்

ஒவ்வொரு பைசாவுக்குள்ளும்

பல கோடிகள் குவிந்து கிடக்கும்.

கதையே உயிரும் உடலும் கொண்டு

நரம்பு துடித்து

அந்த ரத்த ரங்கோலிக்குள்ளும்

பல சர்வதேச விருதுகளைக்குவிக்கும்

ஒரு சிறந்த ஆர்ட் ஃப்லிமாவும்

இந்தப்படம் உலா வருவது

அதிரடியான ஒரு புதிய பரிமாணம் தான்.

லோகேஷ் கனகராஜ் எனும்

அந்த இன்விசிபிள் ஹேண்ட்

ஒரு ஒப்பற்ற அதிச‌யம்.

உயிர்மை நிறைந்த ஒரு ஆக் ஷன் கதை

அடிதடிகளின் இரத்த விளாறுகளுக்கு இடையே

குழந்தையின் மெல்லிய‌ ஒரு பூவின் முத்தமாய்

நம்மை சிலிர்ப்பூட்டுகிறது.

நடிப்பின் ஒரு தேசிய மியூசியத்தை

நம் தமிழ்நாட்டில்

நிறுவி உயர்ந்து நிற்கிறார் கமல்!

இதன் முன்

பாரத ரத்னா கூட‌

ஈயம் பித்தாளைக்கு பேரீச்சம் பழம்

என்று தான் கூவும்.

அது சரி!

நடிப்பின் இந்த மாபெரும் பொக்கிஷம்

இப்படி

மானா நீனா மய்யன்னா வென்று

தேர்தலின்

சந்தை இரைச்சல்களில்

மலிவாக்கப்படவேண்டுமா?


_______________________________________________










சனி, 11 ஜூன், 2022

கத்தரிக்காய்...

 கத்தரிக்காய்...

_______________________________________ருத்ரா


கத்தரிக்காய்

வாழைக்காய்

புடலங்காய்

பூசணிக்காய்

சுரக்காய்

சுண்டக்காய்

வெண்டக்காய்..


என்ன இப்படி எழுதுகிறீர்கள்?


இந்த இந்திய ஊடகங்களுக்கு

வேறு என்னத்தை எழுத?

சுதந்திரம்

ஜனநாயகம்

மானுட நீதி

சமுதாய சமதர்ம நீதி 

என்றெல்லாம்

அச்சுக்கோர்த்தாலே

அது

தேசவிரோதம்.

மத நல்லிணக்கம்

என்பதே இங்கு

ஒரு கெட்டவார்த்தை...

திரித்து எழுதப்படுவதே

பத்"திரிகை" ஆயிற்று.

டார்வினை தலைகீழாய்ப் படித்தார்கள்

பரிணாம வீழ்ச்சிக்கோட்பாடு என்று.

குரங்கிலிருந்து வந்தது

மீண்டும் ஒரு குரங்கு

கதாயுதத்தோடு!


_______________________________________________________‍

11.06.2022

புதன், 8 ஜூன், 2022

அல்ல.. அல்ல..

 அல்ல.. அல்ல..

_____________________________________________‍ருத்ரா


அரபு நாடுகளின் குப்பைத்தொட்டிகளில்

வேறு குப்பைகள் போட இடமில்லை.

நம் நாட்டின் பெருமிதம் எல்லாம்

அதில் நிரம்பிக்கிடக்கின்றன.

நம் நாட்டில்

மாற்று மதத்தினரை அவமதிக்கும்

சொற்கள் எல்லாம்

உலக அரங்கில் நம்மை

தலை குனிய வைத்துவிட்டன.

அந்த குப்பைத்தொட்டியில் கிடப்பது

அவர் இல்லை.

நம் வந்தேமாதரமும்

பாரத் மாதா கி ஜெய் யும் தான்.

யாரோ உதிரிகள் உதிர்த்த சொற்களுக்கு

பாரதம் எப்படி பொறுப்பாகும்?

மீண்டும் இத்தகைய 

வாய்ச்சவடால் ஊடகங்களின்

ஊளைகளும் இங்கு

நிறுத்தப்படுவது இல்லை.

நம்மை ஆளும் பிரதமரின் 

கட்சிக்கு "குரல் கொடுப்பவர்களா" உதிரிகள்?

இந்தியா இப்படி

அவமானப்படுத்தப்படுவது

கடும் கண்டனத்துக்கு உரியது.

அந்த "இறையாண்மை"க்குளத்தில்

இப்படிக்கல் எறிந்தவர்கள்

அதை விடப் 

பெரும் கண்டனத்துக்கு உரியவர்கள்.


"ஜனநாயகம் சர்வாதிகாரமாய் ஆகி விட்டது"

அப்படியா?

அதற்கு காரணம் நான் அல்ல.

என் "அட்மின்".


இப்படி 

"நான் அவனில்லை"

என்று பிலிம் காட்டுவதை

எப்போது நிறுத்தப்போகிறீர்கள்?

அரசியல் சாணக்கியம் என்று

அழிச்சாட்டியம் செய்வது

அழகுடைமை அல்ல.

அறிவுடைமை அல்ல.



________________________________________________________

08.06.2022

நம் முகம் நமக்கு மட்டுமே.

 

 Have you seen the most accurate map of our galaxy? It's about to be further enhanced




நம் முகம் நமக்கு மட்டுமே.

___________________________________________ருத்ரா


முகத்தில் முகம் பார்க்கலாம்

என்று 

விஞ்ஞானிகள் 

பாடத்துவங்கி விட்டார்கள்.

நம் "பால்வழி" எனும்

விண்ணொளி மண்டலம்

இதோ நம் ஃபோம் மெத்தை தலையணை போல்

நம் அருகே இழைந்து கிடக்கிறது.

லட்சக்கணக்கான ஒளியாண்டுகளை

வைத்து திணித்து அடைக்கப்பட்ட‌

தலையணை இது.

நம் முகத்தை நாமே பார்த்து

வியக்கலாம்

களிக்கலாம்

இதன் அளவு பற்றி நினைத்து

திகைக்கலாம்.

ஏறக்குறைய இருபது ஆயிரம் கோடி

விண் ஒளி மீன் கூட்டங்கள்

இதனுள் அலை பரப்பிக்கொண்டிருக்கின்றன.

இதனுள் கைலாசங்களையும் வைகுண்டங்களையும்

நாம் 

மழலையர் பள்ளிக்குழந்தைகளின் 

சித்திரங்களை தீட்டி மகிழ்ந்து கொண்டிருப்போம்.

விஞ்ஞானம் முளைத்த பின் 

மேனாட்டு மழலைகள்

பிரபஞ்சங்களையே 

தம் கைகளில் பந்து விளையாடிக்களிக்கின்றன.

நாம் மட்டுமே 

முதிர்ச்சி பெறாத மூளையின் 

முடக்கு வாதத்தில் 

முடங்கிக்கிடக்கிறோம்.

சாதிகளின் வெறித்தீயில்

சாம்பலாகிக்கிடக்கிறோம்.

இதோ

இந்த "பிரம்மாண்ட" முகம் பார்த்து

நம்மை 

அறிவின் ஒளியால்

அலங்கரித்துக்கொள்வோம்.


___________________________________________________


தெளிந்தது

 தெளிந்தது

______________________________________ருத்ரா



நம் கனவுகள்

பூதங்களைப்போல்

குமிழிகளை ஊதுகின்றன.

எங்கிருந்தாவது 

ஒரு முள் வந்து குத்திவிடுமோ

என்ற பயம்

அந்த குமிழிகளைவிட'

பெரிய குமிழிகளாய்

உள் கிடப்பது கலக்கம் ஏற்படுத்துகிறது.

ஒரு ரோஜா

வானம் விம்ம விம்ம 

பெரிதாய் அருகில் வந்தபோது

மகிழ்ச்சி ஒரு மாபெரும் கொப்புளம் தான்.

ஆனால்

அதுவும் அடியில் முள் தாங்கி அல்லவா

வருகிறது?

எல்லாவற்றையும் நான் பார்த்துக்கொள்கிறேன்

கவலை வேண்டாம்...

என்று ஒரு மகா குமிழி...

ஆயிரம் ஆயிரம் பிரபஞ்சங்களை

லாலி பாப்புகள் போல்

கவ்விக்கொண்டு

இனிமை தூவி வருகிறது....

கடவுள் என்று.

அந்த பெரிய பலூன்

என்னை ஒரு மெல்லிய நிழலுக்குள்

அமர்த்தியது.

அப்பாடா!

ஒரு நிம்மதிப்பெருமூச்சை உதிர்த்தேன்.

அடுத்த நானோ செகண்டில்

அந்தக்கடவுளும் 

"படார்" ஆனார்.

அவர் சொற்கள் நிறைய

கீழே இறைந்து கிடந்தன.

கூட்டி வைத்துப்ப்டித்தேன்.

"நான் ஒன்றுமே இல்லை என்று 

சொல்லவே

உன்னிடம் வந்தேன்."

அந்த படார் என்பது 

இப்பொது புரிந்தது.

என் பயமும் புரிந்தது

தெளிந்தது.


______________________________________________

12.10 A M on 09.06.2022




ஞாயிறு, 5 ஜூன், 2022

அச்சமில்லை அச்சமில்லை

 அச்சமில்லை அச்சமில்லை

__________________________________________ருத்ரா



அருமை நண்பனே!

உன்னிடம் ஒரு கேள்வி.


எப்ப பாத்தாலும் கேள்வி தானா?

தொண தொணக்கும் கொசுக்களே

தூரப்போங்கள்.

என் தூக்கம் இன்னும் மிச்சமிருக்கிறது.


அந்த மிச்சத்தில் தான்

உச்சம் தொடும் உன் துயரத்தின்

கழுமரங்கள் காத்திருக்கின்றன.


என்ன ?


ஆம்!

தூக்கம் கலைக்கும் 

அந்த முட்டுச்  சந்தில் 

உன் விடியல்கள்

கசாப்புக்கு காத்திருக்கின்றன.

சுதந்திரம்

ஜனநாயகம்

சமநீதி

மானிடத்துவம் 

இவை தானே 

உன் வானம்.

உன் கனவு.

உன் "எல்லாம்"..

அவை யாவும் 

நசுக்கப்பட இருக்கின்றன.

ஓட்டுப்பெட்டிக்குள்

கணிப்பொறி கம்பிகள் வைத்த சிறை

உனக்கு.

ஊசிப்போன‌

உளுத்துப்போன‌

சாதி மத வெறித்தீயில்

நீயும் 

பொசுக்கப்பட இருக்கிறாய்.

அதற்கு இங்கே

சட்டதிட்டங்கள்

வார்க்கப்பட இருக்கின்றன.

உன் காதல்..

இனி புராண இதிகாச மத்தாப்பு

விளையாட்டுகளுக்கு மட்டுமே.

சாதி மத ஆபாசங்கள் கழன்ற 

உன் இனிமை.. தனிமை.. நிறைந்த 

உலாவலின் 

எல்லைகள் அற்ற உன் காதலுக்கும்

ஒரு கூண்டு தயார் ஆகிறது.

மொத்தத்தில் இனி

நீ ஒரு கீ கொடுத்த பொம்மை.

இந்த நான்கு வர்ணக்காட்டுக்குள்

திக்கு தொலைத்து

திரியும் ஒரு 

நரம்புகள் புடைத்த‌

வெறி ஏற்றப்பட்ட சவம் மட்டுமே...


"கூடாது..

விடமாட்டேன்.."


அந்த "நண்பன்"கள்

வீறு கொண்டனர்.

எழு ந்து கொண்டனர்.



______________________________________


புதன், 1 ஜூன், 2022

தொட்டனைத்து ஊறும்...

 தொட்டனைத்து ஊறும்...

‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍‍__________________________________________ருத்ரா



"நாளென ஒன்றுபோல் காட்டி உயிர் ஈரும்

வாளது உணர்வார் பெறின்."


பிறக்கும் போது 

நம்மை வந்து துணி சுற்றிக்கொள்ளும் 

முன்னரே

காலம் நம்மை தழுவிக்கொள்ளும்.

அதன் ஆலிங்கனம் நமக்கு

சுகமானது.

அதன் புள்ளிவிவரம் நம் மீது

எழுதப்படும்போது

வயதுகள் என அழைக்கப்படுகின்றன.

வயதுகள் நம் வலிமை.

வயதுகள் நம் இளமை.

வயதுகள் நம் முதுமை.

ஆனாலும் வயதுகளே

நமக்கு நாமே அச்சடித்துக்கொள்ளும்

நம் "பெரிய எழுத்து விக்கிரமாதித்தன் கதைகள்."

வெட்ட வெட்ட வழுக்கிக்கொண்டு ஓடும்

வேதாளங்கள் 

காலம்.

கொஞ்சம் கொஞ்சமாக 

நகம் வெட்டப்படுதல் போல‌

நம் ஆளுமை

நம் ஓர்மை

எல்லாம் வெட்டப்படுகிறது.

வெட்ட வெட்ட தளிர் விடும்

இலைகள் நம்மிடம் உண்டு.

அதுவே

நம் அறிவு.

நம் மூளை எனும் மெமரிப்புதையலில்

ஆயிரம் ஆயிரம் கணிப்பான்கள்

முளைக்கின்றன.

அதன் டிஜிடல் துடிப்புகளில்

எங்கோ 

ஒளிப்பிரளய‌ங்களாக‌

இருட்பிழம்பாக 

இருக்கின்ற‌

பிரபஞ்ச மூலை முடுக்குகள்

பதிந்து கிடக்கின்றன.

நம் அறிவு உமிழ்வின் தடங்களே

கனத்த கனத்த 

இந்த வரலாற்றுத்தடிமனான

புத்தங்கங்கள்.

நம் காலமே நம்மை கசாப்பு செய்து விடும்

ஆயுதக்கிடங்கு 

என்று வள்ளுவர் நம்மை

கிலி கொள்ள வைக்கிறார்.

உண்மையில் அவர்

வாள் காட்ட வரவில்லை.

நம் நாள் காட்டியே அவர் தானே.

உயிரை இரண்டாக பிளக்கும் வாள்

மனிதனை இரண்டாக பிளந்து காட்டுகிறது.

மரணத்தைக்கண்டு அஞ்சும் மனிதன்.

மரணத்தை 

"அடேய்! வாடா! உன்னை என் காலால் மிதிக்கிறேன்"

என்று நெஞ்சை நிமிர்த்தும் "பாரதி" மனிதன்.

நாள் வாளாகிறது.

வாள் நாளாகிறது.

அறிவியல் தீப்பொறி தெறிக்க‌

யுத்தம் தொடர்கிறது.

பார்ப்போம்

இது அந்த செவ்வாய்க் கோள் வரை 

தொடரட்டுமே.

அதையும் பார்த்து விடுவோம்.

"எலான் மஸ்க்" தோளை நிமிர்த்துகிறார்.

நம் பயோ டெக்னாலஜியில்

ஒரு நாள் 

சூரியன் தோன்றும்போது

அது இமைவிரித்து

வியப்பு அடையலாம்.

இறப்பு என்பதே மறந்து போய்விட்ட‌

ஒரு "அல்காரிதம்"

நம் டி என் ஏ ..ஆர் என் ஏ 

"கோட்" சங்கிலியில் தோன்றி விடலாம்.

உயிர் மட்டுமே

பிரபஞ்சம் முழுதும் நிறைந்து வழியலாம்.

இது வள்ளுவர் சொல்லாமல் விட்ட‌

வாள்.

"தொட்டனைத்து ஊறும் அறிவே" அது.


____________________________________________