ஞாயிறு, 6 மார்ச், 2022

இழுத்துச்சென்றன எழுத்துக்கள்.

 


இழுத்துச்சென்றன எழுத்துக்கள்.

__________________________________________ருத்ரா



உன்னைப் பற்றித்தான் 

எழுதத் துவங்கினேன்.

ஒரு இனிய மென் விடியல் போல...

பூஞ்சாரல் போல...

அந்த பவளமல்லியின் வலைவீசும்

அற்புத மணத்தைப்போல...

தன் சிறகின் அதிர்வுகளால் 

இந்த பிரபஞ்சத்தையே

உலுக்கி உதிர்க்கும் அந்த‌

ஊசிச் சிட்டுக்குருவியைப்போல...

எதைச் சொல்வது?

எதை என் மௌனத்தூரிகை கொண்டு

உன் மோகன வெள்ளத்தை வண்ணம் குழைப்பது?

எதை வருடி வருடி 

சொற்களின் அர்த்தங்களுக்குள் எல்லாம்

அர்த்தம் விளங்காமல் அர்த்தம் சிந்திக்கொண்டிருக்கும்

அந்த அர்த்தத்தை வெளியே இழுத்துக்கொண்டு வருவது?

அல்ல அல்ல..

அதோ அது

அந்த உன் விழியோரத்து

மின்வெட்டுப்பார்வையின் 

சரிந்த‌ கோணத்து

ஒரு மாணிக்கத்தருணத்தின் விளிம்பின்

எழுத்துக்குள் ஒரு நுண்ணெழுத்து அல்லவா

என்னை 

இழுத்துக்கொண்டு செல்கிறது.

நான் எழுதியதா?

நீ எழுதியதா?

தெரியவில்லை.

மண்டை உடைக்கும் கணித சமன்பாடுகளில்

ப்ளாக் ஹோல் எனும் அந்த கருந்துளை

ஒரு விஞ்ஞான அதிசயத்தை

தேனில் குழைத்த கசப்பு சூரணத்தைப்போல்

நாவில் சொட்டுகளாய் ஊறி

உள்ளிழுப்பது போல்

அந்த எழுத்துக்கள் என்னை

ஒரு இனிய சூனியத்துக்குள்

இழுத்துக்கொண்டு சென்றன.


_______________________________________________

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக