கனவு
_____________________________________________ருத்ரா
மனதின் விளிம்பு நோக்கி
ஒரு பயணம் இது.
வாழ்வின் சந்து பொந்துகளில்
அடைந்து கிடக்கும்
தங்கக்குமிழிகளை
கைக்கொண்டு ஏதோ ஒரு சாதனை
புரிந்ததாய்
மனதுள் மத்தாப்பு கொளுத்திக்கொள்ளும்
வானவில் ஓரங்களின்
சந்திப்பு முனை இது.
இதன் சுவடு இல்லாமல்
மனித வாழ்க்கை என்பது வெறும்
நிகழ்வுகளின்
எலும்புக்கூடு தான்.
ரத்தமும் சதையுமாய் வண்ண வண்ண
ஆசைகள்
மனிதனை எப்போதும்
பட்டாம்பூச்சியின் புழுக்கூட்டு மண்டலமாய்
சுற்றிச் சுற்றிப் பின்னிக்கொள்கின்றன.
ஓ!மனிதா!
உடைத்துக்கொண்டு வெளியே வா!
உன் சிறகு மூச்சுகளில்
ஏழு வண்ணத்தோகையின் சிலிர்ப்பாய்
ஒரு இனிய புயல்
வீசி வீசி உன்னை
உயரங்களுக்கு கொண்டு செல்லட்டும்.
இந்த வாழ்க்கை அவலங்களின்
பள்ளத்தாக்குகளில் வீழ்ந்து
புலம்பல் சேற்றில் புதைந்து விடாதே!
எழுச்சிகளின் பறவையாய்
இதோ எழுந்து விடு.
இந்த வானங்கள் உன் பாதைக்கு
ரத்தினக்கம்பளம் விரித்துக்கொண்டு
காத்திருக்கின்றன.
உன் ஆசைகள்
உன் ஆவேசங்கள்
உன் எண்ணங்களின் மின்னல் கீற்றுகள்
எல்லாம்
இதோ உன்னை
உனக்கே ஒரு விஸ்வரூபமாய்
எல்லாம் காட்டுகின்றன.
எழுச்சி கொள்!
இதுவே உன் முகம்.
இதுவே உன் அகம்.
இந்த உலகம் உனக்கு அசைபோட
சுவைகளை
ஒரு வேர்க்கடலைப் பொட்டலமாய்
இதோ உனக்கு
வீசி வீட்டு ஓடுகிறது.
வாழ்கையின் சுவையே
வாழ்க்கையின் அர்த்தம்.
புரிந்துகொள்.
உன் கனவு உனக்குள்
உன்னை பிரசவம் செய்து
உன்னை உனக்குத்தரும்
அற்புத தருணங்களின் பூங்கொத்து இது.
மனிதா!
உன் சிற்பத்தை நீயே
செதுக்கிக் கொண்டே இரு!
________________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக