ஒரு நாள் போதுமா?
______________________________________________
ருத்ரா
பெண்ணே!
பெரும் யுகமே நீ.
உனக்கு இந்த
ஒரு நாள் போதுமா?
காலப்பிழம்பின்
ஒவ்வொரு நானோ செகண்டிலும் கூட
உன் பங்கு தான்.
உலகத்துடிப்புகளின்
அதிர்வுகளே
இங்கு இயக்கி எனும் இசக்கியாய்
இருப்பதாய்
கிராமத்து ஆலமரத்தடிகள்
சொல்லிக்கொண்டிருகின்றனவே.
எது எப்படி இருப்பினும்
வீடுகளில் இன்னும் காட்டுமிராண்டிகளாய்
இருந்து கொண்டு
உனக்கு நாங்கள்
கிடாய் வெட்டி பொங்கல் வைக்கிறோமே.
தெய்வம் என்று
கூப்பாடு போடுகிறோமே.
கணிப்பொறி எனும் கனமான கல்வியில்
திளைத்த போதும்
மனிதனை
ஆர்டிஃபிஷியல் இன்டெலிஜென்ஸ்
என்று
உரித்து உரித்து ஆய்வு செய்தபோதும்
மனிதம் என்பதன்
உட்பொருளை உணரவில்லையே
இந்த மனிதன்.
பெண் என்றவுடன்
ஆண் பால் பெண் பால்
என்று ஒரு பூதம் வளர்ந்து
தீ மூட்டுகிறதே!
அறிவு எனும் ஆற்றலுக்கு கூட
பிகினி மாட்டி
விளம்பரம் செய்து
மிருக வதையை பங்கு மூலதனமாய்
பெருக்கி
லாபம் எனும் சப்பு கொட்டும்
சரித்திரத்தை தானே
ஓ!மனிதா
உன் முகமும் அகமும்
வரி வரியாய் எழுதிக்குவிக்கிறது.
பச்சையாய் ஒரு
புல் கீற்று அந்த மண்திட்டை
கிழித்துக்கொண்டு சிரிக்கிறதே
கிளர்ந்துகொண்டு ஒலிக்கிறதே
அது
உனக்கு புரியும் வரை
உன் புண்ணாக்கு
நாகரிகங்களையெல்லாம்
கொண்டுபோய்
குப்பையில் கொட்டு.
எரிமலைத்தினவுகளை
சிந்தனையின் தீக்குச்சி முனைகளில்
கர்ப்பம் தரித்துக்கொண்டு
எரிந்து காட்டும் பெண்மையை
மகளிர் தினக்கொண்டாட்டங்கள் எனும்
உன் மத்தாப்புகளைக்கொண்டு
அவிக்க முற்படும் வேடங்களைத்
தூக்கி யெறி.
பெண்மை எனும் கனலை
கனவு எனும் வர்ணக்குமிழியாய் ஆக்கும்
குப்பைமேடா
இந்த சமுதாயம்?
பெண்மையின்
அல்ல..அல்ல
உண்மையின் அந்த
யுகத் தீயில்
கழற்றி எறி
உன் முகமூடிகளை!
________________________________________________
________________________________________________________