குலை குலையாய் முந்திரிக்காய்..
___________________________________________ருத்ரா
"குலை குலையாய் முந்திரிக்காய்
நரியே நரியே சுற்றிவா...."
எல்லாவற்றையும் விழுங்கலாம்.
நரியே நரியே ஓடிவா!
இந்த சாணக்கியர்களின்
ஆட்டம் துவங்கி விட்டது.
மக்கள் என்றால் வெறும்
கணிப்பொறிகளில் விழும் குப்பைகள்
தானே!
கடவுள் புராணங்களோடு
மதவெறித் தீ மூட்டி
அதையே தேசியம் ஆக்கி
ஆயிரம் கூச்சல்கள் போடலாம்.
அவ்வளவும் நமக்கு ஓட்டுக்கரன்சிகள்.
அதை வைத்து
கீரி பாம்பு வித்தை காட்டி
நம் ஜனநாயக முற்றங்களில்
மசோதாக்குப்பைகளை
மனம் போனபடி வாரி இறைக்கலாம்.
அவை சட்டங்கள் எனும்
பாறாங்கல்லாய் இந்த ஓட்டுப்புழுக்களை
நசுக்கி கூழாக்கலாம்.
அப்புறம் ஓட்டுக்கரன்சிகள் விழுவதில்
தடங்கல் ஏற்பட்டால்
நாம் போட்ட அந்த மசோதாக்குப்பைகளை
மீண்டும் அகற்றி
"தூய்மை நாயகன்"களாய்
வலம் வரலாம்.
நாம் எதற்கும் அஞ்சவேண்டாம்.
நம் கையில் கண்ணுக்குத்தெரியாத
அந்த சூலமும் வில் அம்பும் இருக்கிறது.
ரத்தம் வழிய வழிய
அதன் மிரட்டல் பிம்பங்களும் இருக்கின்றன.
அந்த "மாட்டுச்சாணத்தை விடவா"
வலிமையான பீரங்கிக்குண்டுகள்
நமக்கு வேண்டும்?
நான்கு வர்ண புகை மூட்டமும்
இருக்கிறது.
அப்புறம் என்ன?
"குலை குலையா முந்திரிக்காய்"
விளையாட்டு தான்.
___________________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக