ஜனநாயகம் வெல்லட்டும்
_________________________________ருத்ரா
ஜனநாயகம்
ரோஜாவா?
தாமரையா?
அந்த இரண்டும்
இல்லாமல் இருக்கலாம்.
ஆனால்
அது இனிப்பான
ஒரு ஆப்பிள்.
அந்த ஆப்பிள்களை
கொள்(ளை)முதல் செய்ய வந்த
அரசுவின் செல்லப்பிள்ளைகளாய்
கார்ப்பரேட்டின் சூட் கோட்டு அவதாரத்தில்
இருந்து கொண்டு
கொடூர ரத்த உறிஞ்சிகளாய்
வந்து அச்சம் ஊட்டியதில்
விவசாயிகள் எனும் சிங்கங்கள்
சிலிர்த்து எழுந்தன.
"அதன் கர்ஜனை அலைகள்
நாளை
அந்த கணினிப்பட்டன்களில்
அமர்ந்திருக்கும்
நம் நாற்காலிகளின் கால்களை
முறித்துப்போட்டுவிட்டால் என்ன செய்வது?"
இது ஏற்படுத்திய அந்த
நரம்பு நடுக்கமே
வேளாண் சட்டங்களின் வாபஸ் அரங்கேற்றம்.
விவசாயப்போராளிகளின்
உறுதியான நோக்கங்கள்
அந்த ஆப்பிள் கனிகளை
ஜனநாயகம் காக்கும் கேடயமாய்
பரிணாமம் அடையச்செய்து விட்டன.
இந்த சாணக்கியர்களோ
எம் எஸ் பி எனும்
உயிர்க்கவசத்தை தந்திரமாய்
உடைத்து நொறுக்கவே
இத்தனை நாடகமும் நடத்தினர்.
பேச்சு வார்த்தை என்கிற
ரப்பர் வடம்பிடித்து
அந்த "பொம்மைத்தேரை" இழுப்பதாய்
பாவனைகள் காட்டினர்.
எத்தனை பழிச்சொற்களை
கூர் தீட்டிய அம்புகளாக்கி எய்தனர்.
தன் உயிரை உழைப்பை
வேர்வைச் சேறாக்கி அதில் இந்த
தேசத்தின் சோறாக்கி தந்தவர்களை
தேசவிரோதிகள் எனத்தூற்றிய
அந்த வன்முறைச்சொல்லாடலை
தூள் தூளாக்கினார்களே!
அவர்களின்
கலப்பைகளே இங்கு
கனரக பீரங்கிகள்!
கோடிக்கணக்கான கிசான்கள்
அப்பாவித்தனமாய் அந்த முண்டாசுகளில்
இருக்கட்டும்
நம் "ராம பாணத்தை"வைத்து
இவர்களை அந்த கார்பரேட்டுகளின்
அடிமைகள் ஆக்கி விடலாம்
என்று தானே அந்த
பண்ணைச்சட்டங்கள்
அவசர அவசரமாய் "குரல்"வாக்கெடுப்பில்
பிரசவிக்கப்பட்டன.
ஆனால் அந்த அரைகுறைப்பிரசவத்தில்
குரல்வளை நெறிக்கப்பட்டது
நம் ஜனநாயகம் அல்லவா.
அந்த அழுக்கு முண்டாசுகளின்
உள் சீற்றம் காட்டிய சுநாமியில்
இவர்கள் கட்டி வைத்த
"அரக்கு" மாளிகைகள் அடித்துச்செல்லப்பட்டனவே.
எழுநூறு உயிர்களை ஆகுதியாக்கி
வளர்த்த இந்த அக்கினி உழவர்களின்
வேள்விகளில்
அவர்களின் தந்திர சனாதன வேள்விகள்
எல்லாம் சாம்பல் ஆகட்டும்.
ஜனநாயகத்தின் அறுவடையை
அர்த்தம் உள்ளதாக ஆக்கிய
ஏர் உழவர்கள் இந்த
போர் உழவர்கள்!
ஒற்றுமையே ஜனநாயகம்.
இந்த
ஜனநாயகமே என்றும்
வெல்லட்டும்.
______________________________________
28.11.2021
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக