எழுந்து வா!
________________________________
ருத்ரா
என்னை கவிஞனே?
என்ன எழுதப்போகிறாய்?
உன் மேக மண்டலங்களும்
உன் பிரபஞ்சத்துக் "கருங்குழிகளும்"
உன் சிந்தனைகளையெல்லாம்
விழுங்கித்தீர்த்து விட்டனவே என்ற
மனச்சோர்வு
உன்னை
இந்த படுக்கையில் வீழ்த்திவிட்டதோ?
இந்த மக்களை புடம் போட்டு புடம் போட்டு
மீண்டும்
ஆனா ஆவன்னா...
எழுதுவதாய் எண்ணமோ?
உண்மையான சுதந்திரம்
அச்சமும் பேயாட்டங்களுமாய்
நிறைந்து போய் விட்ட
இந்த சாதி மத இருட்டுக்காடுகளை
பொசுக்கி விடுவது தானே!
ஆனால்
அறியாமையின் இந்த சொக்கப்பனை
ஆகாயம் முழுவதும் தீ நாக்குகளாய்
எழுந்து சாம்பல் ஆக்கத்துடிக்கின்றனவே!
உண்மை தான்.
கவிஞனே!
உன் எழுத்துக்கள் வெறும்
இலக்கண இலக்கிய முகடுகளில்
உலவிக்கொண்டிருப்பதல்ல
என்பதை இப்போதாவது புரிந்து கொள்.
மானிட ஆற்றலின்
உள் எழுச்சியிலிருந்த
அந்த எரிமலைக்குழம்பிலிருந்து
உன் எழுத்துக்களை
அச்சு கோர்க்கும்
ஒரு சீற்றத்தோடு எழுந்து வா!
இந்த மயில்பீலிகளையும்
பட்டாம்பூச்சிகளயும்
வருடிக்கொண்டிருக்கும்
அந்த "ஃப்ராய்டிச"ப்பிறாண்டல்களிலிருந்து
எழுந்து வா!
இவர்கள் எழுப்பும் உயரமான சிலை
அந்தக்கடவுளை இடித்து
காயப்படுத்தியது தான் மிச்சம்.
மனித ரத்தம் பருகவா
கடவுள் அத்தனை உயரத்தில்
காத்துக்கொண்டிருக்கிறார்?
மனிதம் எழுப்பிய அறிவு தாகம்
கடவுளை இன்னும் எட்டவில்லை.
இந்தக் கூச்சல்கள் நிற்கட்டும்.
ஓ! கவிஞனே!
உன் உயிரெழுத்துக்குள்..மெய்யெழுத்துக்குள்
ஓராயிரம் முழக்கங்கள்
மானிடத்து மணி முழக்கங்கள் ஆகி
ஒலிக்கட்டும்.
உன் எழுத்துப்புயலில்
இந்த குப்பைகள் விலகி ஓடட்டும்!
புதிய யுகமாய்
எழுந்து வா!
_________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக