ஆர்ப்பரித்து வா!
________________________________ருத்ரா
மானிடனே
நீ மரம் ஏறினால் மட்டும்
போதாது.
அதன் உச்சியில் ஏறி
பழம் பறித்துப் போடுவது
இருக்கட்டும்.
உன் தலையில் விண் இடிக்கும்
ஒரு உணர்வு தட்டுப்பட வேண்டும்.
அதுவே
உன் கேள்வியின் திரிமுனை.
உன் அறிவு கிளர்ந்து ஒளிர்ந்து
பரவ வேண்டிய முனை.
மனிதன் என்று
நீ தலை நிமிர்த்திய போதே
உன்னை அமுக்கிக்கொண்டிருந்த
ஆதிக்கப்பின்னல்கள்
கட்டறுத்து விழும் காட்சி
கண்முன் தெரிகின்றதே!
இதை மறைக்கும் அபினி மூட்டங்கள்
பொய்மைக்கதைகள் பேசி
உன்னை இன்னும்
கீழே கீழே புதைக்க
மந்திரங்கள் பொழிகின்றார்கள்.
இது வரை நீ கேட்ட
நரகாசுரன்கள் எல்லாம் நீயே தான்!
உன்னை நீயே வெடித்துச்சிதறி
விளையாடும்
இந்த அறியாமை விலகும் வரை
உனக்கு விடியலும் இல்லை.
குளியலும் இல்லை.
அடர்த்தியான இந்த அமாவாசை இருட்டே
உன் கண்களில் குடியிருக்கும்.
தமிழா! விழி!
வெடித்த பட்டாசுகளின்
காகிதக்குப்பையா நீ?
இந்த காகிதக்கூளங்கள் தான் இனி
உன் அரசியல் சாசனம் ஆகிபோகும்
ஆபத்து
உன் பிடறியை உந்தித்தள்ளுவதை
உணர்ந்திடு தமிழா!
டன் டன்னாய்
சுலோகங்களை உன் மீது
கொட்டிக்கவிழ்த்து
உன் முகமே
அடையாளம் இழந்துவிடும் முன்
தமிழ் எனும் கோடிச்சுடர்
முகமாய் பூத்து வா!
அண்டமே அதிர
உன் தமிழை
ஆர்ப்பரித்து வா!
தமிழா!
நீ ஆர்ப்பரித்து வா!
______________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக