இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
_________________________________ருத்ரா
விழா என்று
வரிசை வரிசையாக
தீபங்கள் ஏற்றுகிற நாட்டில்
அவை ஒவ்வொன்றும்
ஒரு விடியல் குஞ்சு என்ற
ஓர்மை அந்த திரியில்
பற்ற வில்லையே அது ஏன்?
அந்த எண்ணெய்க்குள் துடிக்கும்
நம் இதயவிளிம்புகளின்
எண்ண ஓட்டத்தின் ரத்தம்
வழிவதில்லையே ஏன்?
எழுபது ஆண்டுகளுக்கும் மேலாய்
நம் சிந்தனையின் சதுப்புக்காடுகளில்
சாதி மதங்களே
அசுரன்கள் ஆகி கோரைப்பல்
காட்டுகின்றன.
அதன் வேர்களின் வயது
ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல்
என்று
நம் அறிவின் கீற்றுகளை நசுக்கி
கூழாக்கி
மூச்சுத்திணறும் பாரமாய்
நம்மை அமுக்கிக்கொண்டிருக்கின்றன.
"என்னைத் திறந்து பார்க்க வேண்டுமா?
அதன் கொத்துச்சாவி அந்த
உளறல் மந்திரக்காரன்களின்
இடுப்பில் தான் இருக்கிறது.
அவனிடம் போ"
என்று சொல்லும் கடவுளா
நம்மை ஆட்கொள்ளுவது?
அந்த ஆட்கொல்லிகளின் பிடியில்
இருந்து மீட்டா
அந்த ஆண்டவனை நாம் தேடுவது?
பாருங்கள் இன்னும்
இருட்டைப் பிய்த்து பிய்த்து வைத்துதான்
தீப விழா நாம் கொண்டாடிக்கொண்டிருக்கிறோம்.
உயிர்கள் உள்ள வெறும்
நகர்வன இனமாய்
காலத்தின் கழிவுகளிலேயே நாம்
களிப்புக்கொண்டிருக்கிறோம்.
மனித அடையாளம் இல்லாமல் இந்த
விலங்கு முத்திரைகளோடு
காலம் கழிகின்றது.
மானுடம் என்ற சுவடே இல்லாத
மானிடர்கள் இந்த மண்ணில்
ஊர்ந்து கொண்டிருக்கும் அவலங்கள்
அகலும் நாள் என்ற ஒரு நாள்
அரும்பவே அரும்பாதா?
தெரிய வில்லை.
இந்த இருட்டுகளின் அகல்விளக்குகளில்
என்றைக்காவது
ஒரு நாள்
புடைக்கும் நம்
கழுத்து நரம்புகளின்
சுருதிகளில் யுகமாற்றத்தின்
ஒரு லாவா மலர் விரிக்கும்!
இருப்பினும் எல்லோருக்கும்
எப்போதுமே
இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.
_____________________________________
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக